பட்டாணி & மொச்சை குருமா

தேவையானப் பொருள்கள்:

மஞ்சள் பட்டாணி_ஒரு கைப்பிடி
மொச்சை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
இஞ்சி_சிறிது
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்

அரைக்க:

கசகசா_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பட்டாணி,மொச்சையை முதல் நாளே ஊற வைத்து,குருமா செய்யும்போது சிறிது உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். கசகசா,தேங்காய் இரண்டையும் மைய அரைத்து வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அது வதங்கியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து வேக வைத்த பட்டாணி,மொச்சையை சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து கொதித்து வெந்ததும் கசகசா,தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதனை சாதம்,சப்பாத்தி,நாண் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம்.

குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

மொச்சைப் பொரியல் (அ) மொச்சை காரச் சுண்டல்

தேவையானவை:

மொச்சை_3 கைப்பிடி
சின்ன வெங்காயம்_1
பூண்டு_3 பற்கள்
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு _1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும்.இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து நீரை வடித்து விடவும்.சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளவற்றைத் தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு மொச்சையை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,சேர்த்துக் கிளறி சிறிதுத் தண்ணீர் தெளித்து  மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.பிறகு சிறிது எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

கருவாடு,கத்தரிக்காய்,மொச்சைக் குழம்பு

தேவை:

கருவாடு_100 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய்_5‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ (அ)  வாழைக்காய்_பாதி
மொச்சை_3 கைப்பிடி (ஒரு நபருக்கு ஒரு பிடி)
புளி_எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_முழு பூண்டு(அ)பாதி
மிளகாய்த்தூள்_தேவையான அளவு
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_3 டீஸ்பூன்
வடகம்_கொஞ்சம்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைத்து விட வேண்டும்.இப்போது சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுக்கவும்.புளியைத் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.கருவாட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கவும்.பூண்டை உரித்துக்கொண்டு,வெங்காயத்தைத் தட்டி (அ) நறுக்கி வைக்கவும்.தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

ஒரு மண் சட்டியில்(அ)வாணலியில்  எண்ணெய் ஊற்றிக்  காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம்,பூண்டு போட்டு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து அதனுடன் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மொச்சை சேர்த்து வதக்கி,பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, காரம்,உப்பு சரிபார்த்து,மூடி வைத்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாகக் கொதிக்கும்போது   கத்தரிக்காயை நறுக்கி (விரும்பிய வடிவத்தில்) குழம்பில் போட்டு கலக்கி விடவும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு குழம்பை இறக்கி மூடி வைக்கவும்.இது முதல் நாளை விட அடுத்த நாள்தான் மிகவும் நன்றாக இருக்கும்.இதை சாதம்,இட்லி,தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு:

பிஞ்சு கத்தரிக்காயானால் காம்பை மட்டும் எடுத்து விட்டு நாலாகக் கீறி முழுதாகப் போடலாம்.வாழைக்காயானால் வட்டமாக, சற்று பெரிய துண்டுகளாகவே போடலாம்.

மொச்சை சுண்டல்

 

தேவை:

மொச்சை_1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விட வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.இதை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆகக் கொடுக்கலாம்.

சிற்றுண்டி வகைகள், சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »