ரவா கேசரி

 

 

நான்  food color எதுவும் சேர்க்கவில்லை.ஏற்கனவே உணவுப் பொருள்களில் ஏகப்பட்ட கெமிக்கலஸ் மறைமுகமா இருக்குனு சொல்றாங்க.இது தெரிந்தே, நாம்வேறு எதற்கு அதை சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான்.என் குடும்பத்தின் ஆரோக்கியம் என் கையில்தானே இருக்கிறது!

உங்களுக்கு விருப்பமானால் சேர்த்து செய்யுங்கள்.தண்ணீர் கொதி வருபோது ஒரு துளி அளவிற்கு சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

ரவை_ஒரு கப்
சர்க்கரை_ஒன்றரை கப்
முந்திரி
திராட்சை
ஏலக்காய்_1
குங்குமப்பூ_சிறிது
நெய்_1/4 கப் (எவ்வளவு அதிகமாக சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.)

செய்முறை:

ஒரு வாணலை அடுப்பில் ஏற்றி,அதில் சிறிது நெய் விட்டு ரவையைப் போட்டு சூடுவர வறுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலில் ஒரு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு என தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

அது கொதி வருவதற்குள் மற்றொரு வாணலில் நெய்யை ஊற்றி முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

கொதி வந்ததும் ரவையைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிண்ட வேண்டும்.இதற்கு whisk  ஐப் பயன்படுத்தலாம். தீ மிதமாக இருக்கட்டும்.

ரவை சீக்கிரமே வெந்துவிடும்.இப்போது சர்க்கரை முழுவதையும் கொட்டி நன்றாகக் கிளறவும்.இறுகி வந்த ரவை நீர்க்க ஆரம்பிக்கும்.சிறிது நெய்யை ஊற்றி விடாமல் கிளறவும்.மீண்டும் கலவை இறுகி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.

அப்போது நெய்யை முந்திரி,திராட்சையுடன் சேர்த்துக் கேசரியில் கொட்டிக்கிளற வேண்டும்.குங்குமப்பூ,ஏலத்தூள் இவற்றையும் சேர்த்துக்கிளறி ஒரு நெய் தடவிய‌ தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.

இல்லை அப்படியே ஒரு பௌளில் கொஞ்சமாக‌ எடுத்துக்கொண்டு ஸ்பூனால் சாப்பிடலாம்.

இது மிக‌மிக எளிதாக செய்யக்கூடிய ஸ்வீட்டாகும்

இனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சேமியா பொங்கல்

சேமியா பொங்கலுக்கு ரவை சேர்த்துத்தான் செய்யவேண்டுமென்பதில்லை.தனி சேமியாவில் செய்தாலும் சுவையாக இருக்கும்.

உப்பமா என்றாலே சிலருக்கு வெறுப்பாக இருக்கும்.அதிலும் சேமியா,ரவை உப்புமா என்றால் கேட்கவே வேண்டாம். உப்புமாவிற்கு பதிலாக இவற்றை வைத்து பொங்கலாக செய்யும்போது அதிலும் நெய்யில் மிளகு,சீரகத்தை வறுக்கும் வாசனை வந்தவுடன் உடனே சாப்பிடத்தோணும்.

தேவையானப் பொருள்கள்:

சேமியா_2 கப்
ரவை_1/2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாக‌ சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

ஒரு  வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு  இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி நிலை வரும்வரை மூடி வைக்கவும்.

பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து ,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

இப்போது சேமியா பொங்கல் சாப்பிடத் தயாராக உள்ளது.


இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.

ரவை பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

ரவை_2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_2 டீஸ்பூன்
மிளகு_1  டீஸ்பூன்
சீரகம்_1  டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து,ஒரு கப் ரவைக்கு இரண்டேகால் கப் தண்ணீர் என ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

பச்சைப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றவேண்டாம்.

தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு,வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.

இப்போது ரவை பொங்கல் தயார்.

இது நல்ல வாசனையாகவும்,சுவையாகவும்,எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.

ரவை,சேமியா,காய்கறி கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

ரவை_ஒரு கப்
சேமியா_2 கப்
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1 (சிறியது)
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும்,மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில்  கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.

அடுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு  என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைகவும்.

கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும்.அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி whisk ஆல் விடாமல் கிண்ட வேண்டும்.அப்போதுதான்  கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும்.இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.

உப்புமா வகைகளுக்கேயுரிய‌ தேங்காய் சட்னிதான் இதற்கும் பொருத்தமாக இருக்கும்.

சாதாரண ரவை கிச்சடி

தேவையானப் பொருள்கள்:

ரவை_2 கப்
சின்ன வெங்காயம்_7
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
,
தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும் மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைகவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்துக்கொள்ளவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில்  கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு  கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி ஒரு தோசைத் திருப்பியால் விடாமல் கிளறி விடவும். கரண்டிக்குப்  பதிலாக   whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி  இறக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் பொருத்தமாக இருக்கும்.

தேங்காய்,ரவை பர்பி

தேவையானப் பொருள்கள்:

ரவை_1 கப்

தேங்காய்ப் பூ_2 கப்

சர்க்கரை_2 கப்

முந்திரி_10

நெய்_1/4 கப்

ஏலக்காய்_1

தண்ணீர்_2 கப்

செய்முறை:

ரவை,தேங்காய்ப் பூ இவற்றை  தனித்தனியாக ஒவ்வொரு ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.மேலும் சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடிதுக்கொள்ளவும்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் தண்ணீர்,சர்க்கரை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்.நல்ல கம்பிப்பதம் வர வேண்டும்.(ஒரு கரண்டியில் சிறிது பாகை எடுத்து இரண்டு விரல்களில் தொட்டு உருட்டி விரல்களைப் பிரித்தால் விரல்களுக்கிடையே கம்பி போன்று வர வேண்டும்.இதுதான் கம்பிப் பதம்.)

இப்போது ரவையை சிறிது சிறிதாக பாகில் கொட்டிக் கட்டி இல்லாமல் கிளற வேன்டும்.அடுத்து தேங்காய்ப் பூவை அதேபோல் கொட்டிக்கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.ஏலப் பொடியைத் தூவி இடையிடையே நெய் ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.கொஞ்ச நேரம் கழித்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.அதுதான் சரியான பர்பி பதம்.அப்போது கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்து ஆற வைக்கவும்.கொஞ்சம் ஆறியதும் ஒரு கத்தியால் சதுரமாகவோ(அ)டைமன்ட் வடிவத்திலோ துண்டுகள் போடவும்.நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில்(அ)பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.

இப்போது மிகவும் சுவையான,இனிப்பான,சாஃப்டான தேங்காய்,ரவை பர்பி தயார்.

சேமியா,ரவா கேசரி

தேவையான பொருள்கள்:

சேமியா_1 கப்

ரவை_1 கப்

சர்க்கரை_3 கப்புகள்

குங்குமப்பூ_சிறிது

ஏலக்காய்_1

முந்திரி_10

திராட்சை_10

நெய்_1/2 கப்

செய்முறை:

முதலில் சேமியா,ரவை இரண்டையும் தனித்தனியாக சிறிது நெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும்.அதே பாத்திரத்தில் 4 கப்புகள் தண்னீர் ஊற்றி,குங்குமப் பூவையும் போட்டு சூடுபடுத்தவும்.(ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் சேமியா,ரவை நன்றாக வேகும்.)

ஒரு கொதி வந்ததும் முதலில் சேமியாவைக் கொட்டிக் கிளறவும்.அது வெந்து வரும்போது ரவையைக் கொட்டிக் கிளறவும்.கட்டித் தட்டாமல் பார்த்துக்கொள்ளாவும்.இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து வெந்து வரும்போது சர்க்கரையைக் கொட்டிக் கிளறு.இப்போது கேசரி நீர்க்க ஆரம்பிக்கும்.விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.இடையிடையே சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளற வேண்டும்.எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வெந்த பிறகு இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.அல்லது அதே பாத்திரத்திலும் வைக்கலாம்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்துக் கேசரியில் கொட்டி (நெய்யுடன் சேர்த்து) பரப்பி விட்டு துண்டுகள் போடலாம்.

குறிப்பு:

நான் இதில் food color சேர்க்கவில்லை.விருப்பமானால்  சேர்த்துக்கொள்ளலாம்.

இனிப்பு வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . Leave a Comment »

சோமாஸ்

 

தேவை:

மேல் மாவிற்கு:

மைதா_ 2 கப்
உப்பு_தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு:

ரவை_1 கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
சர்க்கரை_1 கப்
முந்திரி_10
ஏலம்_1
கசகசா_1 டீஸ்பூன்
தேங்காய் பூ_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எண்ணெய்_பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மேல் மாவு செய்தல்:

முதலில் மைதா மாவுடன் உப்பைப் போட்டு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.பூரி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.

பூரணம் செய்தல்:

வெறும் வாணலியில் ரவை,பொட்டுக்கடலை,முந்திரி,கசகசா இவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பூ போடுவதாக இருந்தால் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.இவை அனைத்தும் ஆறியதும் இவற்றுடன்  சர்க்கரை,பொடித்த ஏலம் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.இப்போது பூரணம் தயார்.

இப்போது மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து அதை சோமாஸ் கரண்டியில் வைத்து தேவையான பூரணத்தையும் வைத்து  ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கரண்டியை அழுத்தி மூட வேண்டும். கரண்டியை மூடிய பிறகு ஓரத்தில் உள்ள அதிகப்படியான மாவை எடுத்து விட வேண்டும்.இப்போது கரண்டியைத் திறந்து சோமாஸை எடுத்து மூடி வைக்கவும்.இது போலவே எல்லா மாவையும் போட்டு  வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து சோமாஸை ஒவ்வொன்றாகவோ(அ)எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு ஒருபுறம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.ஆறியதும் கண்ணாடி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.