இங்குள்ள ஒரு பப்ளிக் டிவி சானலில் சமையல் நேரத்தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant falafel செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.
அந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.
தேவையானவை:
கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_நான்கைந்து
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_2
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை & கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.
மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.
ஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.
உப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.