உருளைக்கிழங்கு வறுவல் இதற்குத்தான் சைட்டிஷ் என்றில்லை. எல்லா வகையான சாதத்திற்கும் பொருந்த்தும். சமயங்களில் உருளையுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து செய்வதுண்டு.ஆனால் இப்போது காமாக்ஷி அம்மாவின் உருளைக்கிழங்கு வதக்கலைப் பார்த்து எள்,இஞ்சி என சேர்த்து செய்தேன். அருமையாக வந்தது.
தேவையானவை:
உருளைக்கிழங்கு_2
சின்ன வெங்காயம்_7
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு_5 பல்
பச்சைமிளகாய்_1
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எள்_1/2 டீஸ்பூன்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
கிழங்கை வேக வைத்து தோலை உரித்துவிட்டு விருப்பமான வடிவத்தில் அரிந்து வைக்கவும்.
இஞ்சி,பூண்டு தட்டிக்கொண்டு,வெங்காயம் அரிந்து வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி சூடேறியதும் எள்ளைப் போட்டு சூடாகியதும் ஒரு கிண்ணத்தில் தனியாக வைக்கவும்.
அடுத்து அதே வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதற்கடுத்து உருளை,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இவை வதங்கும்போதே தயிர் சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.
உருளைக்கிழங்குடன் மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து சிவந்து வரும்வரை இடையிடையேக் கிளறிக்கொடுத்து,இறுதியாக வறுத்த எள்ளைச் சேர்த்து இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.