வாழைக்காய் பொடிமாஸ்

vazhai podimas

தேவையானப் பொருள்கள்:

வாழைக்காய்_1
மஞ்சள்தூள்_சிறிது
இஞ்சி_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வாழைக்காயை முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியோ தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் தண்ணீரிலிருந்து எடுத்து ஆறியதும் தோலை உரித்துவிடவும். காய் நன்றாக வெந்திருந்தால் தோல் உரிக்க எளிதாக வரும்.

உரித்த வாழைக்காயை உதிர்த்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு இஞ்சி சேர்த்து லேசாக வதக்கிவிட்டு உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

காய் சூடேறியதும் கொத்துமல்லி தூவி, கிளறிவிட்டு இறக்கவும்.

இந்த செய்முறையில் உருளைக் கிழங்கிலும் செய்யலாம்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

வாழைக்காய் பொரியல்

தேவையானப்பொருள்கள்:

வாழைக்காய்_1
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பல்
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வாழைக்காயின் தோலை சீவிவிட்டு சற்று பெரியத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாகவும்,பூண்டைத் தட்டியும் வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வாழைக்காயைச் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.இடையிடையே திறந்து கிண்டிவிடவும்.

காய் வெந்து,தண்ணீர் முழுவதும் சுண்டியபிறகு  கிளறிவிட்டு கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

கருவாடு,வாழைக்காய்,முட்டைக் குழம்பு

கருவாட்டுக் குழம்பிற்கு காரை,சங்கரா,நீர் சுதும்பு போன்ற கருவாடுகள் நன்றாக இருக்கும்.அவை கிடைக்காததால் நெத்திலியில் செய்துள்ளேன்.பழைய சாதத்திற்கு இதில் உள்ள வாழைக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.

தேவையானப் பொருள்கள்:

கருவாடு_சுமார் 100 கி
வாழைக்காய்_1 (அ) பாதி
முட்டை_3 (ஒரு நபருக்கு ஒன்று)
புளி_பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
முழு பூண்டு_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
வெந்தயம்

செய்முறை:

புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.நான் இதில் சேர்த்திருப்பது நெத்திலிக் கருவாடு.எல்லாக் கருவாட்டிலும் இதனை செய்யலாம்.சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வைக்கவும்.தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.வாழைக்காயைக் கொஞ்சம் கனமான‌ வட்டமாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.மெல்லியதாக இருந்தால் சீக்கிரமே வெந்துக் குழைந்துவிடும்.

முட்டையை வேக வைத்து ஆறியதும் தோலை உரித்துவிட்டு லேசாக சில இடங்களில் கீறிவிட்டு எடுத்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம்,அடுத்து வெந்தயம் போட்டு தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி,அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி,அடுத்து மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு பாதி கொதித்த நிலையில் வாழைக்காயைக் குழம்பில் போட்டு கிளறி விடவும்.இப்போது தீ மிதமாக இருக்கட்டும்.இல்லை என்றால் காய் சீக்கிரமே வெந்து குழைந்துவிடும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு முட்டையை சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை முதலியவற்றிற்கு நன்றாக இருக்கும்.அதைவிட அடுத்த நாள் வைத்திருந்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.மற்ற பாத்திரங்களில் செய்வதை விட மண் சட்டியில் செய்தால்தான் அருமையாக இருக்கும்.

பஜ்ஜி

 

 

தேவையானப் பொருள்கள்:

கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டிஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
ஓமம்_சிறிது
சோடா உப்பு_ஒரு துளிக்கும் குறைவு
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

அரைக்க:

பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டு_2 பற்கள்

பஜ்ஜிக்கான காய்கள்:

வாழைக்காய்_1
கத்தரிக்காய்_சிறியதாக இருந்தால் 1
பெரிய சிவப்பு வெங்காயம்_1

eggplant ல் செய்வதாக இருந்தால் மாவின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த் தூள்,பெருங்காயம்,சோடா உப்பு,உப்பு  இவற்றை ஒன்றாகக் கலந்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்.அதில் ஓமம் சேர்த்துக்கொள்.மேலும் பெருஞ்சீரகம்,பூண்டு இவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைத்து மாவுடன் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தை விட சிறிது நீர்க்கக் கரைத்துக்கொள்.

பஜ்ஜிக்கு  வாழைக்காய்,கத்தரிக்காய் ( eggplant),பெரிய சிவப்பு வெங்காயம் இவற்றைப் பயன்படுத்தலாம்.

வாழைக்காயின் தோலை சீவி விட்டு,நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு,சிப்ஸ் கட்டையைப் பயன்படுத்தி வாழைக்காயை படத்தில் உள்ளது போல் நீள வாக்கில் நறுக்கிக்கொள். அல்லது குறுக்காகவும் சீவிக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்து.எண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்துள்ள வாழைக்காயினை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் இருபுறமும் தோய்த்து எண்ணெயில் போடு.ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.

கத்தரிக்காயையும் அவ்வாறே சீவி வைத்துக்கொண்டு எண்ணெயில் போட்டுப் பொரிக்கலாம்.இதற்கு  eggplant     தான் நன்றாக இருக்கும்.அது இல்லாததால் சிறிய கத்தரிக்காயில் செய்துள்ளேன்.

அடுத்து பெரிய வெங்காயத்தை குறுக்காக வட்டமாக நறுக்கி ஒவ்வொரு வளையமாகத் தனித்தனியாகப் பிரித்து மாவில் தோய்த்துப் பொரிக்கலாம்.இது சுவை கூடுதலாக இருக்கும்.

இவை எல்லாவற்றிற்குமே தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.அல்லது   ketchup  உடன் சேர்த்து சாப்பிடலாம்.

வாழைக்காய் வறுவல்

 

தேவையான பொருள்கள்:
1.வழைக்காய்-1
2.பூண்டு-3 பற்கள்
3.மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
4.மஞள் தூள்-1/4 ஸ்பூன்
5.சீரகம்_1/2 ஸ்பூன்
6.பெருஞ்சீரகம்_1/4 ஸ்பூன்
7.பெருங்காயம்_சிறிது
8.கறிவேப்பிலை_1/2 ஈர்க்கு
9.உப்பு_தேவைக்கேற்ப
10.எண்ணெய்_  2 ஸ்பூன்
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி வேண்டிய வடிவத்தில் நறுக்கி தண்ணீரில் போடவும்.அப்போதுதான் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.பூண்டை லேசாக நசுக்கி வைத்துக்கொள்ளவும்.வாண்லியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சீரகம்,பெருஞ்சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும். பிறகு பூண்டைப் போட்டு லேசாக வதக்கி அத்துடன் வாழைக்காயை சேர்த்து வதக்கி, கூடவே மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.நன்றாக வெந்ததும் வாழைக்காயை உடையாமல் ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை அனைத்து வகை சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »