பொதுவாக மொந்தன் வாழையிலுள்ள காய்,தண்டு,பூ இவற்றைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. நாமெல்லாம் சமைத்து சாப்பிடுகிறோமே வாழைக்காய் அதுதான் மொந்தன் வாழை.அதன் பூதான் அதிகம் துவர்க்காமல் இருக்கும். வடைக்குப் பொருத்தமாக இருக்கும்.
இல்லையென்றால் வாங்கும் பூவின் மேல் வரிசைகளை (நான்கைந்து) சாம்பார், பொரியல், கூட்டு, உசிலி என ஏதாவது செய்யப் பயன்படுத்திக்கொண்டு உள் வரிசைகளை வடைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் துவர்ப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்..
வாழைப்பூ புதிதாகக் கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள்.வாங்கியபிறகு என்ன செய்யலாம் என யோசித்து செய்யலாம். இதை செய்ய வேண்டும் என நினைத்து பழைய பூவை வாங்கி வர வேண்டாம்.அதிலுள்ள துவர்ப்பு போய் கசக்க ஆரம்பித்துவிடும்.
தேவையானப் பொருள்கள்:
வாழைப்பூ _பாதி
பொட்டுக்கடலை_ஒரு கப்
சின்ன வெங்காயம்_10
தேங்காய் பத்தை_5
இஞ்சி_சிறு துண்டு
பூண்டு பல்_2
காய்ந்த மிளகாய்_1
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவின் வேண்டாதவைகளை (கள்ளன்,கள்ளி அல்லது நரம்பு, தொப்புள் எனவும் சொல்வாரகள்) நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அலசி அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து ஒரு கொதி வருமாறு வேக வைக்கவும்.
பிறகு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைக்கவும்.
பொட்டுக்கடலையை முதலில் பொடித்துக்கொண்டு பிறகு அதனுடன் தேங்காய்,மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரவென அரைத்தெடுக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
இறுதியில் வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து மசிந்ததும் வழித்தெடுக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்துமல்லி,தேவையான உப்பு சேர்த்து வடைமாவு போலவே பிசைந்துகொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இது கூடுதல் மொறுமொறுப்பாகவும்,கூடுதல் சுவையாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னி,கெட்சப்புடன் சாப்பிட சூப்பர்.
எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.