வெண்ணெய் புட்டு

            

வாயில் போட்டதும் வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு செல்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

என் அம்மா செய்வது மாதிரியே செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் கிண்ணத்தில் ஊற்றி கவிழ்த்து எடுத்தேன்.அவர் செய்வது போலவே வந்துவிட்டது.

பார்க்கவே அழகாக இருக்கும்.சுவையும்தான்!

இதனை தட்டுகளில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெல்லம்_ஒரு கப்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (பொடிக்கவும்)
உப்பு_துளிக்கும் குறைவாக(சுவைக்காக)

செய்முறை:

முதலில் பச்சரிசியைக் கழுவிக்கலைந்து ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

மாவு நீர்க்க இருக்கவேண்டும்.கெட்டியாக இருக்கவேண்டுமென்பதில்லை.

ஒரு அடி கனமான வாணலியில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

கடலைப்பருப்பைக் கழுவிவிட்டு வாணலியில் உள்ள தண்ணீரில் போடவும்.

த‌ண்ணீர் கொதி வந்ததும் அரிசிமாவில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துவிட்டு  கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரில் ஊற்றிக்கொண்டே கரண்டியால்  விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

கிண்டுவதற்கு  whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

மாவு எல்லாவற்றையும் ஊற்றிய பிறகும் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் மாவு அடிப்பிடிக்கும்.மேலும் மாவு வேகாமல் உருண்டை உருண்டையாக இருக்கும்.

இப்போது மாவு வெந்து கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.

இப்போது வெல்லத்தை பொடித்து (கல்,மண்,தூசு இல்லாமல்)போட்டுக் கிளறிவிடவும்.

முதலில் கொஞ்சம் நீர்த்துக்கொள்ளும்.பிறகு வேக வேக இறுகி வரும்.

நன்றாக இறுகி வரும்போது தேங்காய்ப் பூ,ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார்.

இதனை  சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.