மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

அச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku

     

எல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.

அச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.

முதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே)  பொறுமை அவசியம்.

அச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிற‌து.

                  

தேவையானவை:

பச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)
மைதா_ஒரு டேபிள்ஸ்பூன்
வெல்லம்_3/4 கப்
தேங்காய்ப்பால்_3/4 டம்ளர்
எள்_சிறிது
ஏலக்காய்_1 (பொடித்துக்கொள்ளவும்)
உப்பு_துளி
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

 அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.

வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.

தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.

அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.

முறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.

மீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.

இப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.

கடலைப்பருப்பு சீயம்

மிகவும் சுவையான இந்த சீயம் தீபாவளியன்று (எங்க வீட்டில்) செய்வாங்க.இதை சாப்பிட ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.என்ன கொஞ்சம் (உண்மையில் அதிகம்) வேலை வாங்கும்.

சிலர் மேல் மாவிற்கு மைதாவிற்கு பதில் புதிதாக அரைத்த இட்லி மாவைப் பயன்படுத்துவார்கள்.புளித்த மாவு என்றால் அதிகமாக எண்ணெய் குடிக்கும்.

மைதாவில் செய்யும்போது சீயம் வெள்ளையாக இருக்கும்.இட்லி மாவில் செய்யும்போது சிவந்து வரும்.

கடலைப் பருப்பிற்கு பதில் பச்சைப் பருப்பிலும் இதைச் செய்யலாம்.எங்கம்மா செய்யும் முறை எனக்குப் பிடிக்கும் என்பதால் அதையே கீழேக் கொடுத்துள்ளேன்.

தேவையானவை:

பூரணத்திற்கு:~

கடலைப்பருப்பு_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
ஏலக்காய்_1

மேல் மாவிற்கு:~

மைதா_2 கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
மஞ்சள்தூள்_ஒரு சிட்டிகை
உப்பு_சுவைக்கு

எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் கழுவிவிட்டு,அது மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.ஆனால் குழைந்திருக்கக் கூடாது.பருப்பு வெந்ததும் நீரை வடிக்கவும்.நீரை வடித்தும் நீர் இருப்பதுபோல் தோன்றினால் ஒரு சுத்தமான துணி/பேப்பர் டவலில் பரப்பிவிட்டு உலர வைக்கவும்.

வெல்லத்தை மண்,தூசு நீக்கி சுத்தம் செய்துவிட்டுப் பொடிக்கவும்.ஏலக்காயைப் பொடிக்கவும்.

கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.பிறகு ஒரு கடாயில் எடுத்து,அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் வதக்கவும்.முதலில் சிறிது இளகி பின் கெட்டியாகும். இப்போது ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.

இது ஆறியதும் படத்திலுள்ளதுபோல் சிறுசிறு உருண்டைகள் பிடிக்கவும்.

மேல்மாவிற்கு கூறியுள்ள அனைத்தையும் மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடாகியதும் உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.எண்ணெய் அதிகமாக சூடாக‌ இருக்கக்கூடாது.

மேலும் உருண்டைகள் உடைந்துவிடாமல் வேக வேண்டும்.உடைந்துவிட்டால் உள்ளேயுள்ள பூரணம் வெளியில் வந்து எண்ணெய் முழுவதும் பரவி கருப்பாகிவிடும்.

அதிக எண்ணிக்கையில் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் போடலாம். ஒன்றையொன்று ஒட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உருண்டைகளைத் திருப்பிவிட்டு (போண்டா போல்) வெந்ததும் எடுத்துவிடவும்.

இப்போது சுவையான சீயம் நொறுக்க‌/சாப்பிடத் தயார்.

அவல் சர்க்கரைப் பொங்கல்/Aval sakkarai pongal

இது அவசரத்திற்கு எளிதில் செய்யக்கூடியது. இதற்கு ஆகும் நேரமும் குறைவு.சுவையோ அதிகம். சத்தானதும்கூட.

இதில் நான் வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒன்றும் பாதியுமாக இடித்துப் போட்டுள்ளேன்.அவரவர் விருப்பமாக முழு அவலைப் போட்டும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

அவல்_ஒரு கப்
பச்சைப் பயறு_1/4 கப்
வெல்லம்_ஒரு கப்
குங்குமப்பூ_சிறிது
பால்_1/2  கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு பாலும், தண்ணீருமாகக்  கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கலுடன் புளிசாதம், உருளைக் கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

கருப்பட்டி ஆப்பம் (அ) வெல்ல ஆப்பம்

நாம்தான் ஏற்கனவே ஆப்பமாவு தயாரித்துவிட்டோமே.அந்த மாவையே இதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.இல்லையென்றால் இட்லி மாவிலும் செய்யலாம்.

வெல்ல ஆப்பத்தைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பெரியவர்களும்தான்.

தேவையானப் பொருள்கள்:

ஆப்ப மாவு_ஒரு கிண்ணம்

பனை வெல்லம் என்கிற கருப்பட்டி_ஒரு கட்டி
(அல்லது)
சாதாரண வெல்லம்

ஏலக்காய்_1

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்து அது கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

தண்ணீர் லேஸாக சூடேறினாலே போதும்.வெல்லத்தை மத்தின் அடிப்பகுதியால் நன்றாக மசித்துவிடவும்.

வெல்லம் கரைந்ததும் கல்,மண்,தூசு இல்லாமல் வெல்லத் தண்ணீரை வடித்து ஆறவிடவும்.

ஆறியதும் ஆப்ப மாவில் ஊற்றி பதமாக கரைத்துவிடவும்.

ஏலப்பொடி சேர்ப்பதானால் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

தீ அதிகமானால் (வெல்லம் சேர்த்திருப்பதால்) அடிப் பிடித்துவிடும் அல்லது தீய்ந்து போகும்.எனவே தீ குறைவாகவே இருக்கட்டும்.

ஆப்பம் வெந்ததும்  தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.

சாப்பிட சாப்பிட திகட்டாது. தொட்டு சாப்பிட எதுவும் வேண்டாம்.அப்படியே சாப்பிடலாம்.

கருப்பட்டி பணியாரம்

தேவையானப் பொருள்கள்:

இட்லி மாவு_ஒரு கிண்ணம்
கருப்பட்டி என்கிற பனைவெல்லம்_1/2 கிண்ணம்
ரவை_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)

செய்முறை:

இட்லி மாவில் உப்பு குறைவாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைத் தூளாக்கி ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் கருக வாய்ப்புண்டு.

தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வெல்ல நீரை ஆற வைக்கவும்.

வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும்.

மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

ஒரு 1/2 மணி நேரம் கழித்து (மாவில் உள்ள ரவை ஊறிய பிறகு) குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைக்கவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

ஓரளவு வெந்திருக்கும் என நமக்கே தெரியும்.(எவ்வளவு இட்லி & தோசை சுட்டிருப்போம்!)அப்போது மூடியைத் திறந்து ஒரு ஷார்ப்பான அதே சமயம் தட்டையான ஒரு ஸ்பூனால் பணியாரத்தின் ஓரங்களை பெயர்த்து, திருப்பிப் போட்டு இந்த முறை சீக்கிரமே எடுத்துவிடவும்.

இப்போது சுவையான,இனிப்பான‌ பணியாரம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியேதான் சாப்பிட வேண்டும்.

வெண்ணெய் புட்டு

            

வாயில் போட்டதும் வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு செல்வதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

என் அம்மா செய்வது மாதிரியே செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் கிண்ணத்தில் ஊற்றி கவிழ்த்து எடுத்தேன்.அவர் செய்வது போலவே வந்துவிட்டது.

பார்க்கவே அழகாக இருக்கும்.சுவையும்தான்!

இதனை தட்டுகளில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெல்லம்_ஒரு கப்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (பொடிக்கவும்)
உப்பு_துளிக்கும் குறைவாக(சுவைக்காக)

செய்முறை:

முதலில் பச்சரிசியைக் கழுவிக்கலைந்து ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

மாவு நீர்க்க இருக்கவேண்டும்.கெட்டியாக இருக்கவேண்டுமென்பதில்லை.

ஒரு அடி கனமான வாணலியில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

கடலைப்பருப்பைக் கழுவிவிட்டு வாணலியில் உள்ள தண்ணீரில் போடவும்.

த‌ண்ணீர் கொதி வந்ததும் அரிசிமாவில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துவிட்டு  கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரில் ஊற்றிக்கொண்டே கரண்டியால்  விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

கிண்டுவதற்கு  whisk  ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

மாவு எல்லாவற்றையும் ஊற்றிய பிறகும் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் மாவு அடிப்பிடிக்கும்.மேலும் மாவு வேகாமல் உருண்டை உருண்டையாக இருக்கும்.

இப்போது மாவு வெந்து கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.

இப்போது வெல்லத்தை பொடித்து (கல்,மண்,தூசு இல்லாமல்)போட்டுக் கிளறிவிடவும்.

முதலில் கொஞ்சம் நீர்த்துக்கொள்ளும்.பிறகு வேக வேக இறுகி வரும்.

நன்றாக இறுகி வரும்போது தேங்காய்ப் பூ,ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார்.

இதனை  சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.

சர்க்கரைப் பொங்கல்

சூடாக இருக்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும்.    அதுவே     ஆறியதும்      இறுகிவிடும்.

சர்க்கரைப் பொங்கல் & சாதாரண வெண் பொங்கல்

பொங்கலன்று சாதாரண வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் செய்வது வழக்கம்.

இவற்றின் புகைப்படம் தற்சமயம் இல்லையாதலால் செய்முறை மட்டுமே போட்டுள்ளேன்.பொங்கலன்று படத்தை இணைத்துவிடுகிறேன்.

சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பச்சைப் பருப்பு_1/3 கப்
வெல்லம்_ஒரு கப்
பால்_1/2 கப்
ஏலக்காய்_2
குங்குமப்பூ_ஒரு 15 இதழ்கள்
முந்திரி_15
திராட்சை_15
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.ஆறிய பிறகு   கழுவிவிட்டு அதில்  4 கப்புகள் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு பாதி வெந்த நிலையில் அரிசியைக் கழுவி அதில் சேர்த்து விடவும். அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்தால் அரிசி வெந்து விடும்.பருப்பு வேகாமல் இருக்கும்.எனவே முதலில் பருப்பையும் அடுத்து அரிசியையும் சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்றாகக் கலந்து நன்றாகக் குழைய வேக வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து இளம் பாகு பதம் வந்ததும் அதை குழைய வெந்துள்ள பொங்கலில் கொட்டிக் கிளறி விடவும். அடுத்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

அடுத்து நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து நெய்யுடன் சேர்த்துக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

சாதாரண வெண்பொங்கல் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி_ஒரு கப்
பால்_1/4 கப்

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் அளவிற்கு பாலும் தண்ணீருமாகச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதித்து பொங்கி வரும்போது அரிசியைப் போட்டு அடிப்பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்கு குழைய வெந்த பிறகு இறக்கவும்.

இதற்கு பொங்கல் குழம்பு அல்லது கருனைக் கிழங்கு புளிக் குழம்பு நன்றாக இருக்கும்.

பச்சைப் பருப்புப் பாயசம்

பாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

பச்சைப் பருப்பு_1/2 கப்
வெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌
பால்_1/2 கப்
ஏலக்காய்_1
முந்திரி_10
திராட்சை_10
நெய்_முந்திரி,திராட்சை வறுக்கும் அளவு
குங்குமப்பூ_10 இதழ்கள்

செய்முறை:

முதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.

பாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

உளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.