ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்

20150120_124052

ப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்

தேவையானவை:

ப்ரோக்கலி _ 1
சிறிய உருளைக்கிழங்கு _ 1
அவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
பூண்டுப்பல் _ மூன்றுநான்கு
தேங்காய்ப் பூ
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

அவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.

ப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

பூண்டுப்பல்லை தட்டிக்கொள்ளவும்.

இவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிட‌வும்.

உருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.

தண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

பீன்ஸ் பொரியல்/Beans poriyal

beans poriyal

நேற்று சுரைக்காய் கூட்டுக்கு இடித்த,வேர்க்கடலை & காய்ந்த மிளகாய் பொடி கொஞ்சம் மீதமிருந்தது.முன்பு போல பெரிய பருப்பாக இல்லாமல் இப்போதெல்லாம் குட்டிக்குட்டியா வருது.இதை ஓவனில் பார்த்துப்பார்த்து வறுக்க வேண்டியுள்ளது. வேர்க்கடலையின் விலையும் மிகமிக அதிகமாகிவிட்டது.

அதனால் இந்தப் பொடியை வீணாக்கக்கூடாது என நினைத்து பீன்ஸ் பொரியலில் சேர்த்தேன்.நன்றாக இருந்தால் சரி , இல்லையென்றால் நானே சாப்பிட்டுவிடுவது என.மிகமிக நன்றாகவே இருந்தது.முடிந்தால் நீங்களும் செஞ்சு பாருங்க.

தேவையானவை:

முழு நீள பீன்ஸ்_ஒரு கை நிறைய
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2 (காரத்திற்கேற்ப)
தேங்காய்ப் பூ_கொஞ்சம்
கொத்துமல்லி இலை_சிறிது (போட மறந்தாச்சு)
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பீன்ஸைக் கழுவிவிட்டு,விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.

மிளகாயைக் கருகாமல் மிதமானத் தீயில் சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலையுடன் மிளகாயைச்சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பில் ஏற்றித் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,பீன்ஸைப் போட்டு வதக்கவும்.

லேஸாக வதங்கியதும் அது வேகுமளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றி வெந்ததும் இடித்து வைத்துள்ள வேர்க்கடலை & காய்ந்த மிளகாய்ப் பொடி,தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இந்த சுவையான பீன்ஸ் பொரியல் எல்லா வாகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

வேகவைத்த வேர்க்கடலை/Boiled peanuts

   

   வெண்மையாகவும்,லேசான பிங்க் நிறமும் கலந்த பச்சை வேர்க்கடலை.

இந்த வாரமும் கொஞ்சம் வேர்க்கடலை வாங்கி பச்சையாக சாப்பிட்டதுபோக மீதியைத் தண்ணீரில் வேகவைத்தும் சாப்பிட்டாச்சு.இதன் செய்முறை புதியவர்களுக்கு(சமையலில்) உபயோகமாகும் என நினைத்தே பதிவிடுகிறேன்.

பச்சை வேர்க்கடலையை சுத்தம்செய்து,கழுவிவிட்டு (அந்த வேலை இங்கில்லை.வாங்கும்போதே அவ்வளவு சுத்தமாக இருக்கும்)உரிப்பதற்கு செய்வதுபோல் லேசாக அழுத்தினால் மேல் பகுதியில் சிறு கீறல் விழும்.கீறல் விழுவதால் உப்புத் தண்ணீர் உள்ளே போகவும்,சூடான நீர் உள்ளே செல்வதால் கடலையும் சீக்கிரமே வெந்துவிடும். இதேபோல் எல்லா கடலையையும் செய்துகொண்டு ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.

ஒரு 15 நிமி கழித்து ஒன்றை எடுத்து உரித்து,சாப்பிட்டுப்பார்த்து வெந்திருந்தால் எடுத்துவிடலாம்.இன்னும் வேக வேண்டுமானால் சிறிது நேரம் வேக வைத்து எடுக்கவும்.

வெந்த கடலை உப்புத்தண்ணீர் கோர்த்துக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவுமே அடுத்த நாள் சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

இதுபோல் நிறைய வேகவைத்து தோலுட‌னே நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துகொண்டால் வருடம் முழுவதுமே சாப்பிடலாம். செய்ய ஆசைதான்.அதற்கு வேர்க்கடலை வேண்டும்,அதற்கும் மேலாக வெயிலும் வேண்டும்.

அவரைக்காய்&வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

அவரைக்காய் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை வேர்க்கடலை(அ)காய்ந்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_இரண்டு
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சை வேர்க்கடலையானால் அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.காய்ந்தது என்றால் முதல் நாளே ஊற வைத்து,நன்றாக ஊறியதைப் பயன்படுத்த வேண்டும்.

அவரைக்காய்,வெங்காயம் இவற்றை விருப்பமான வடிவத்தில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயத்தையும்,அடுத்து அவரைக்காய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக்கிளறி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

இடையிடையே கிண்டி விடவும்.அவரை,கடலை இரண்டும் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்ப்பூ&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

முந்திரி & வேர்க்கடலை பகோடா

தேவையானப் பொருள்கள்:

முந்திரி_1/2 கப்
வேர்க்கடலை_1/2 கப்
கடலை மாவு_3 டீஸ்பூன்
அரிசிமாவு_ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
இஞ்சி_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.தோலை நீக்க  வேண்டாம்.

அடுத்து சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,பெருங்காயம்,உப்பு,இஞ்சி (பொடியாக நறுக்கி),கறிவேப்பிலை (கிள்ளிப்போட்டு) இவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

இக்கலவையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை முந்திரி,வேர்க்கடலை இவற்றில் சேர்த்து குலுக்கிவிட்டு,ஒரு 5 நிமி அப்படியே வைக்கவும்.

அடுத்து அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிடவும். மீண்டும் ஒரு 5 நிமி வைக்கவும்.

அடுத்து மீதமுள்ள கலவையை சேர்த்து மீண்டும் ஸ்பூனால் கலக்கி விடவும்.

இப்போது முந்திரி,வேர்க்கடலை இரண்டுக்கும்   coating  கொடுத்தமாதிரி இருக்கும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொன்றாக எண்ணெய் கொண்டமட்டும் போட்டு பொரித்தெடுக்கவும்.

நல்ல மொறுமொறுப்பான,சத்தான‌ மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.

இதனை தனி வேர்க்கடலையிலோ அல்லது தனி முந்திரி பருப்பிலோ கூட செய்யலாம்.

கேழ்வரகு இனிப்பு அடை/Kezhvaragu inippu adai

இந்த அடைக்கு கொழுக்கட்டை,கேழ்வரகு புட்டு செய்யும்போது மீதமாகும் பூரணத்தைப்  பயன்படுத்தலாம்.அல்லது கீழ்க்காணும் முறைப்படி வேர்க்கடலைக் கலவையைத் தயார் செய்தும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
எள்_1/2 டீஸ்பூன்
வெல்லம்_2 டீஸ்பூன்(பொடித்தது)
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் வறுத்து தோல்நீக்கிய வேர்க்கடலை,வறுத்த எள், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு  pulse ல் இரண்டு சுற்று சுற்றி இறுதியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு துளிக்கும் குறைவாக உப்பு (சுவைக்காக),பொடித்து வைத்துள்ள வேர்க்கடலைக் கலவையை சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப்  பிசைந்துகொள்ளவும்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அது சூடேறுவதற்குள் பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை கல்லில் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேகவிடவும்.மாவில் வெல்லம் சேர்த்திருப்பதால் தீ அதிகமாக இருந்தால் அடை தீய்ந்துவிடும்.

அடையின் ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை.அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.

வேர்க்கடலை சட்னி

தேவையானப் பொருள்கள்:

வேர்க்கடலை_1/2 கப்
தேங்காய் பத்தை_5
பச்சை மிளகாய்/காய்ந்த மிளகாய்_3
இஞ்சி_ஒரு சிறு துண்டு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் தேங்காயின்  brown  பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு   pulse   ல் இரண்டு சுற்று சுற்றினால் பூ மாதிரி ஆகிவிடும்.அதனுடன் பச்சை மிளகாய்,இஞ்சி,வேர்க்கடலை,உப்பு சேர்த்து போதுமான‌ தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.நன்றாக மசிந்ததும் ஒரு கிண்ணத்தில் வழித்தெடுத்து,தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துக் கொட்டிக் கலக்கி வைக்கவும்.

இது இட்லி,தோசை முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

இதையே கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து துவையலாகவும் பான்படுத்தலாம்.

பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாய் வைத்தும் அரைக்கலாம்.இதற்கு தேங்காய்,பொட்டுக்கடலை சட்னிக்கு வைப்பதைவிட ஒரு மிளகாய் அதிகமாக‌ வைத்தால்தான் காரம் சரியாக இருக்கும்.

சுரைக்காய்,வேர்க்கடலைக் கூட்டு

தேவையானப் பொருள்கள்:

பிஞ்சு சுரைக்காய்_1
வேர்க்கடலை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது

செய்முறை:

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும்.அதே வாணலியில் மிளகாயை எண்ணெய் விடாமல் லேசாக,கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.வேர்க்கடலை ஆறியதும் தோலுரித்து சுத்தம் செய்து,அதனுடன் வறுத்த மிளகாயைச் சேர்த்து மில்ஸியில் போட்டு கொரகொரப்பாகப்  பொடிக்கவும்.

சுரைக்காயைக் கழுவித் துடைத்துப் பொடியாக நறுக்கி ஒரு அடி கன‌மானப் பாத்திரத்தில் போட்டு ஒரு டீஸ்பூன் தண்னீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.சுரைக்காய் வேகும்போதே அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்.காய் வேக அதுவே போதுமானது.தண்ணீர்  குறைவாக வைப்பதால் அடி பிடிக்க வாய்ப்புண்டு.எனவே அடிக்கடி கிளறிவிடவும்.வெந்து வரும்போதே உப்பு,பெருங்காயம் சேர்த்துக் கிளறவும்.நன்றாக வெந்த பிறகு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதை எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

வேர்க்கடலை குழம்பு

தேவை:

வறுத்த வேர்க்கடலை_1/2 கைப்பிடி
புளி_சிறு கோலிகுண்டு அளவு
மஞ்சள் தூள்_சிறிது
மிளகாய்த் தூள்_ 1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகலள்

செய்முறை:

புளியை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.புளித்தண்ணீருடன் அரைத்த வேர்க்கடலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை தாளித்து, கரைத்து வைத்துள்ளதை எடுத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.இரண்டு கொதி வந்ததும் இறக்கி விடவும்.நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம்.இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.

பொருளங்கா உருண்டை

   peanut ballspeanut balls

தேவை:

வேர்க்கடலை_2 கப்
வெல்லம்_ஒன்றரை கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
எள்_2 டீஸ்பூன்
அரிசி மாவு_1 கப்

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். பொட்டுக்கடலை,எள் இவற்றை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் பொடித்துக்கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில்தான் வறுக்க வேண்டும்.வறுத்த பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

பாகு காய்ச்சுதல்: கல்பதம்

கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றவும். வெல்லம் கரைந்து நுரைத்துக் கொண்டு வரும்.சிறிது கவனமாக இருக்கவேண்டும்.இல்லை என்றால் பாகு தீய்ந்துவிட வாய்ப்புண்டு.

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூனால் பாகிலிருந்து சிறிது எடுத்து தண்ணீரில் விட்டு கைகளால் உருட்டி எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும்.அதுதான் கல்பதம்.

இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி கடலை கலவையில் ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிளற வேண்டும்.

நல்ல சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்கும்போது வெல்லம்  பிசுபிசுவென கையில் ஒட்டும்.மேலும் கலவை சூடாகவும் இருக்கும்.எனவே அரிசி மாவை தூவிக்கொண்டே உருண்டை பிடிக்க‌ வேண்டும்.  இப்போது நல்ல சத்தான, சுவையான சுமார் 15 உருண்டைகள் தயார்.

ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு மாலை வேளையில் சாப்பிடக் கொடுக்கலாம்.

இந்தக் குறிப்பினை ஃபாயிசாவின் ‘Passion On Plate Giveaway Event – Feb 10th – March -20th’க்கு அனுப்புகிறேன்.