ஸ்டஃப்டு சப்பாத்தி/Stuffed chapathi

தேவையானவை:

கோதுமைமாவு_2 கப்
பட்டர்(அ)எண்ணெய்_சிறிது
தயிர்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

ஸ்டஃபிங்கிற்கு:

உருளைக்கிழங்கு_2
சின்ன வெங்காயம்_நான்கைந்து
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எலுமிச்சை சாறு_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு வாணலை அடுப்பிலேற்றி பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கோதுமை மாவை போட்டு நன்றாக்கிளறிவிட்டு தயிர் சேர்த்து,உப்பு சேர்த்து ப்ரெட் க்ரம்ஸ் மாதிரி பிசறி விட‌வும்.பிறகு சிறிதுசிறிதாக வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி நான்கைந்து மணி நேரம் வைக்கவும்.அல்லது கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

பச்சைமிளகாய்,சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு வதக்குவதக்கி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,கொத்துமல்லி தூவி, எலுமிச்சை சாறு விட்டு சீரகத்தூள் சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.

மசாலாவை நன்றாகப் பிசைந்துவிட்டு சிறு எலுமிச்சை அளவு உருண்டகளாக்கிக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றவும்.பிறகு பிசைந்துவைத்துள்ள மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சிறு வட்டமாகத் தட்டிக்கொண்டு அதில் ஒரு உருண்டை மசாலாவை வைத்து மூடி,மூடிய பகுதியை கீழ்ப்புறம் வைத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு போளிக்குத் தட்டுவதுபோல் கொஞ்சம் மெல்லியதாகத் தட்டவும்.

அல்லது பூரிக்கட்டையால் மெதுவாக,மசாலா வெளியே வந்துவிடாதவாறு உருட்டவும்.

மசாலா சப்பாத்தி முழுவதும் பரவியிருக்க வேண்டும்.அப்போதுதான் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.

தோசைக்கல் சூடேறியதும் தட்டி வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும்,மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.

முதல்முறை செய்வதாக இருந்தால் சப்பாத்தி முழுவதையும் போட்டு வைத்துக்கொண்டு சுட்டெடுக்கவும்.அல்லது ஒன்றிரண்டு செய்யும்போதே வேகம் வந்துவிடும்.

உருளைக்கிழங்கிற்கு பதில் வெந்தயக்கீரை அல்லது முள்ளங்கி வைத்தும் செய்யலாம்.

தொட்டு சாப்பிட குருமா இல்லையென்றாலும் கெட்சப்புடன்,அதுவும்கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.நன்றாக இருக்கும்.