சேப்பங்கிழங்கு சாம்பார்

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
சேப்பங்கிழங்கு_4
சிறிய கத்தரிக்காய்_1
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
புளி_கோலி அளவு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_சுமார் 5 லிருந்து 10 எண்ணிக்கை
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

சேப்பங்கிழங்கை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு காய் நன்றாக வேகும் வரை வேகவிட்டு (குழையாமல்) ஆறியதும் விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி  இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி,கத்தரிக்காய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

உப்பு,காரம் சரிப்பார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு ஒரு கொதி வந்ததும் சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிண்டிவிட்டு மீண்டும் மூடி கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கழித்து புளியைக் கரைத்து ஊற்றி மேலும் இரண்டு கொதி வரும்வரை அடுப்பிலேயே இருக்கட்டும்.

கடைசியில் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.இப்போது சேப்பங்கிழங்கு சாம்பார் தயார்.

இதன் சுவையும்,மணமும் அருமையாக இருக்கும்.

இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக  இருக்கும்.

குறிப்பு:

1.இந்த சாம்பாரை கத்தரிக்காய் இல்லாமலும் வைக்கலாம்.

2.வெங்காயம்,தக்காளி வதக்கும்போது வேகவைத்து, நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து வதக்கியும் செய்யலாம்.