அவல், முந்திரி பர்ஃபி

தேவையானப் பொருள்கள்:

கெட்டி அவல்_ஒரு கப்
சர்க்கரை_ஒன்றரை கப்
முந்திரி_10 லிருந்து 20 க்குள்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்

செய்முறை:

வெறும் வாணலியில் அவலை சிவக்க வறுத்து ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

அடுத்து அதே வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரியை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

இவை ஆறியதும் முதலில் மிக்ஸியில் அவலைப் போட்டு pulse ல் வைத்து கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.அடுத்து அதனுடன் முந்திரி,ஏலக்காய்  சேர்த்து மீண்டும் pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இப்போது ஒரு அடி கனமான கடாயில் சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.சர்க்கரை கரைந்து இளம் கம்பிப்பதம் வரும்போது அவல் கலவையைக் கொட்டி ஒரு தோசைத் திருப்பியால் விடாமல் கிளறவும்.அவல் சீக்கிரமே வெந்துவிடும். கிளறும்போதே நெய்யையும் விட்டுக் கிளறவும்.சிறிது நேரத்தில் கலவை கடாயில் ஒட்டாமல் வரும்.அப்போது ஒரு நெய் தடவிய  தட்டில் கொட்டி சமப்படுத்தி லேசாக ஆறியதும் கத்தியால் கீறி துண்டுகள் போடவும்.