அவியல்

பிடித்தமான எல்லா காய்களையும் அவியலுக்குப் பயன்படுத்தலாம்.அவியல் என்றாலே காய்களை நீளவாக்கில் நறுக்கிப்போட வேண்டும் என்பார்கள்.நானும் அவ்வாறே போட்டுவிடுவது.

வாழைக்காய்,உருளை, அவரை, காராமணி,மாங்காய், கத்தரிக்காய், முருங்கை,வெள்ளைப்பூசனி போன்றவற்றிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக நறுக்கிச் சேர்த்துள்ளேன்.

காய்களை ரொம்பவே குழைய விடாமல் சரியான பதத்தில் வேகவிடவும். விருப்பமானால் மஞ்சள் தூள் சேர்க்கலாம். மாங்காய்,தயிர் சேர்ப்பதால் லேசான புளிப்புச்சுவையுடன் இருக்கும்.இவை இல்லாவிட்டால் சிறிது புளித்தண்ணீர் விடலாம்.

அவியலுக்கு தேங்காயெண்ணெய் விடுவாங்க.எனக்கு தேங்காயெண்ணெய் பழக்கமில்லையாதலால் (சமையலில்) நல்லெண்ணெய் சேர்த்திருக்கிறேன்.

தேவையானவை:

காய்கறிகள் நறுக்கியது_2 கப் அளவிற்கு
புளித்த‌ தயிர்_1/2 டம்ளர்
கறிவேப்பிலை_ஒரு கொத்து
எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துண்டு_3
சீரகம்_1/2 டீஸ்பூன் அளவிற்கு
பச்சை மிளகாய்_2 (ஒன்று காரமானது,மற்றொன்று காரமில்லாதது)

செய்முறை:

காய்களை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கவும். பொதுவாக‌ நீளவாக்கில்தான் நறுக்குவாங்க.

ஒரு கனமான பாத்திரத்தில் காய் வேகுமளவு மட்டும் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் காய்களைப்போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.தீ மிதமாகவே இருக்கட்டும்.தண்ணீர் குறைவாக இருப்பதால் காய் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.வேகும்போதே இரண்டொருதரம் கிளறி விடவும்.

இதற்கிடையில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துத் தயிருடன் கலந்து வைக்கவும்.

காய்கள் வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்தயிர் விழுதைச் சேர்த்துக் கிளறி சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். நீண்ட நேரம் கொதிக்க விட வேண்டாம்.

இறுதியாக எண்ணெயைக் காய்ச்சி விட்டு,கறிவேப்பிலையைப் போடவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 10 Comments »