ப்ரோக்கலி ஈஸி பொரியல்

 

தேவையானவை:

ப்ரோக்கலி _ ஒரு முழு பூ

பொடித்த மிளகு _ காரத்திற்கேற்ப

பூண்டு _ தேவைக்கேற்ப

எண்ணெய்

உப்பு

இனி எப்படி செய்தால் சுவையாக இருக்கும் என பார்க்கலாம்.

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். பூண்டிதழ்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பூக்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு போட்டு ப்ரோக்கலி பூக்களையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிவிடவும். நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அதிகமாக வெந்துவிட்டால் அது வதங்கியதுபோல் வலவலவென ஆகிவிடும்.

வெந்த பூவை வேண்டிய அளவில் கையால் அல்லது கத்தியால் சிறுசிறு இதழ்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஒரு தோசைக்கல் அல்லது வாணலில் சிறிது எண்ணெய் விட்டு (ஆலிவ் எண்ணெயாக இருந்தால் நல்ல வாசனையாக இருக்கும்) தட்டிய பூண்டுகளைப் போட்டு வதக்கவும். அடுத்து ப்ரோக்கலியைச் சேர்த்து மிளகுத்தூளையும் தூவி  தேவையானால் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

இது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடவோ அல்லது சும்மா அப்படியே சாப்பிடவோ அல்லது பொரியலில் சாதம் போட்டு கிளறி சாப்பிட பூண்டின் சுவையுடன் நன்றாக இருக்கும்.

பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 3 Comments »

கேரட் & புரோக்கலி பொரியல் / Carrot & Broccoli poriyal

carrot&broccoli poriyal

தேவையானவை:

நடுத்தர அளவிளான புரோக்கலி_1
கேரட்_1
சின்ன வெங்காயம்_இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய்_ஒன்றிரண்டு
வெந்து பிழியப்பட்ட‌ துவரம் பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாருக்கு வேகவைத்த‌ துவரம் பருப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

கேரட்,புரோக்கலி இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தையும் அவ்வாறே நறுக்கவும்.பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.காரம் விரும்பினால் பொடியாக்கலாம்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,புரோக்கலியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,லேஸாக உப்பு தூவி,சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.கேரட்டும்கூட மெல்லிய துண்டுகளாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.

இவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு சூடேறியதும்,தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை தூவி மேலும் ஒரு கிளறுகிளறி இறக்கவும்.இப்போது எளிதாக செய்யக்கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.

இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 9 Comments »

ப்ரோக்கலி கூட்டு / Broccoli kootu

broccoli kootu

தேவையானவை:

ப்ரோக்கலி பூ_ஒன்று
பச்சைப் பயறு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
தக்காளி_1/4 பகுதி

அரைக்க:

தேங்காய் பத்தை _2
சீரகம்_சிறிது
அரிசிமாவு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

broccoli

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி சுத்தம் செய்துகொள்ள‌வும்.தண்டு,இலைகளையும் தூக்கிப்போடாமல் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

பச்சைப்பயறை சூடுவர வறுத்து,கழுவிவிட்டு அது வேகுமளவு தண்ணீர் விட்டு,மஞ்சள்தூள்,பெருங்காயம்,இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து கிளறிவிட்டு வேகவிடவும்.

இவை எல்லாம் வெந்ததும் ப்ரோக்கலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு,சிறிது உப்பும் சேர்த்து கிண்டிவிடவும்.ப்ரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.இரண்டு கொதி வந்தாலே போதும்.

தேங்காய்,அரிசிமாவு,சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொதிக்கும் கூட்டில் ஊற்றி மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து ப்ரோக்கலி கூட்டில் கொட்டிக் கிளறவும்.

இது சாதம்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.

கூட்டு, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 12 Comments »

உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு _1
ப்ரோக்கலி_1
முழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
பூண்டிதழ்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு  அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்

கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்

உருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்

எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும்  இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும்  இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

ப்ரோக்கலி

தேவையானவை:

ப்ரோக்கலி_1
மிளகுத்தூள்_சிறிது (காரம் விரும்பினால்)
உப்பு_சிறிது
ஆலிவ் ஆயில்_கொஞ்சம்
விருப்பமான  Ranch dressing

செய்முறை:

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு Non stick pan ஐ அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டு லேஸாக சூடேறியதும் ப்ரோக்கலியைப் போட்டு வதக்கவும்.இது சீக்கிரமே வதங்கிவிடும்.

வதங்கும்போதே உப்பு,மிளகுத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.

வதக்கல் முடிந்ததும் ஒரு தட்டில் எடுத்துவைத்து விருப்பமான  Ranch dressing யுட‌ன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மற்றொரு முறையில் செய்வதானால் எண்ணெய்,மிளகுத்தூள் இல்லாமல் உப்பு போட்டு அவித்து சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும்.

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

புரோக்கலி & உருளைக் கிழங்கு பொரியல்

புரோக்கலியில் சாம்பார்,குருமா,கூட்டு,பொரியல் என எது செய்தாலும் நன்றாக இருக்கும். அதனை தனியாகவோ,மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_1
புரோக்கலி_1
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் ந‌றுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

பூண்டை உரித்து நறுக்கி/தட்டி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு  நன்றாக ‌வெந்ததும் புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.அதற்கென தனியாக தண்ணீர்,மசாலா எதுவும் சேர்க்க வேண்டாம்.

உருளைக்கிழங்கும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாத‌த்திற்கும்,சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.