சிக்கன் வறுவல்

தேவையானப் பொருள்கள்:

சிக்கன்_250 கிராம்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_பாதி
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
முந்திரி_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டு அதில் சிக்கனைப் போட்டுப் பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்னீர் ஊற்றி பச்சை வாடை போகும் வரை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,பாதி எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சுமார் 1/2 மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

வெறும் வாணலியில் கொத்துமல்லி விதையையும்,சீரகத்தையும் தனித்தனியே வறுத்து, ஆறியதும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.ஒரு  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.அதுவும் நன்றாக வதங்கியபின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து காரம்,உப்பு சரிபார்த்து மூடி மிதமானத் தீயில் வேகவிடவும்.தண்ணீர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.சிக்கனில் இருந்து வெளிவரும் நீரே அது வேக‌ போதுமானதாக இருக்கும்.சிக்கன் பாதி வெந்த நிலையில் வறுத்துப் பொடித்த கொத்துமல்லிப் பொடியைப் போட்டுக் கிளறவும்.(மிளகாய்த்தூளில் கொத்துமல்லி சேர்த்திருந்தாலும் புதிதாக வறுத்துப் பொடித்துப் போடும்போது வாசனையும்,சுவையும் தூக்கலாக இருக்கும்.)

சிக்கன் நன்றாக வெந்து தண்னீர் எல்லாம் வற்றிய  பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி இலைத் தூவிக் கிளறி இறக்கவும்.புதினா வாசனைப் பிடித்தமானால் கொத்துமல்லியுடன் இதையும் சேர்த்துப் போடலாம்.இதை எல்லா வகையான சாதத்திற்கும் பக்க உணவாகப் பரிமாறலாம்.

அசைவம், வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »