சிக்கன் மஷ்ரூம் வறுவல்

 

தேவையானவை:

chicken thigh_2 (or) chicken breast_1
மஷ்ரூம்_5 பெரியது
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
இஞ்சி_ஒரு துண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
புதினா&கொத்துமல்லி

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பட்டை_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்

செய்முறை:

சிக்கனை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கழுவீவிட்டு சிறிது தயிர், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி ஒரு 1/2 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டிவைக்கவும்.மஷ்ரூம்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,மஷ்ரூம் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சிக்கன்,மஷ்ரூம் இவை வேகும்போது வெளிவரும் தண்ணீரே போதுமானது.

சிக்கன் நன்றாக வெந்து,தண்ணீர் முழுவதும் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு,புதினா&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

அசைவம், வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

தந்தூரி சிக்கன் (Tandoori chicken)

   

இதற்கு சிக்கனின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அடுப்பில் வைத்து செய்தால் அந்த சுவை வருவதில்லை.அவனில் மட்டுமே செய்தாலும் வெந்திருக்குமா?வேகாமலிருக்குமா? என சந்தேகமாகவே இருக்கும். எனவே பாதி வேலையை அடுப்பிலும் மீதியை அவனிலும் வைத்து செய்துவிடுவேன்.

சிக்கனின் அளவு குறைவாக இருந்தால் மசாலாவில் ஊறுவதற்கும்,அவனில் வைப்பதற்கும் சிறிய,குறுகலான‌ பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.அளவு அதிகமானால் பெரிய பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

தேவையானவை:

சிக்கன் ட்ரம்ஸ்டிக்_3
தந்தூரி மசாலா_3 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
தயிர்_1/2 கப்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
எண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

சிக்கனில் உள்ள தோலை எடுத்துவிட்டு அல்லது தோலுடனோ நன்றாகக் கழுவிவிட்டு ஒரு பேப்பர் டவலால் ஈரத்தை ஒற்றி எடுத்துவிட்டு கத்தியால் ஆங்காங்கே ஆழமாகக் கீறிவிடவும்.

ஒரு பாத்திரத்தில் தந்தூரி மசாலா,தயிர்,எலுமிச்சை சாறு,உப்பு இவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்துகொண்டு சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை அதில் போட்டுப் பிரட்டி,கீறிய பகுதியில் நன்றாக மசாலா படுமாறு வைத்து  குறைந்தது இரண்டிலிருந்து ஐந்து மணி நேரம் வரை ஃப்ரிட்ஜினுள் வைக்கவும்.மசாலா சிக்கனில் நன்றாக ஊறியிருக்க வேண்டும்.

ஒரு அடி கனமான  pan அல்லது  non stick pan ஐ அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கனை வைத்து மசாலா முழுவதையும் அதன்மேல் ஊற்றி மூடி போட்டு மிதமானத் தீயில் வைக்கவும்.

சிக்கன் வேக வேக அதிலுள்ள நீர் வெளியேறும்.நீர் முழுவதும் வற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.சிக்கனை இரண்டுமூன்று தரம் திருப்பி விடவும்.இப்போது ஓரளவிற்கு (முக்கால் பதம்) வெந்திருக்கும்.

இப்போது அவனில் வைக்கப்போகும் பாத்திரத்தில் சிக்கனை எடுத்துவைத்து கிரேவியில் பாதியை அதன்மேல் ஊற்றிவிட்டு oven ன் மேல் rack  ல் வைத்து broil ஸ்விட்ச் ஆன் செய்துவிடு.low heat ல் இருக்கட்டும்.

ஒரு ஐந்து நிமி கழித்து வெளியே எடுத்து சிக்கனைத் திருப்பிவிட்டு மீதமுள்ள கிரேவி முழுவதையும் அதன்மேல் ஊற்றி மீண்டும் ஒரு ஐந்து நிமி வைக்கவும்.

இவ்வாறே மேலும் இரண்டு தடவை திருப்பி விட்டு மசாலா முழுவதும் வற்றி சிக்கன் சிவந்து வந்ததும் எடுத்துவிடவும்.

இப்போது சுவையான தந்தூரி சிக்கன் சாப்பிடத் தயார்.

நன்றாக ஆறியதும் கையில் பிடித்து சாப்பிடும் பகுதியில் aluminum foil ஐ சுற்றி வைத்து பிடித்துக்கொண்டு சாப்பிடலாம்.

வறுத்தரைத்த சிக்கன் & டோஃபு (Tofu) குழம்பு

குறிப்பு:

சாம்பார்,குழம்பு,அசைவம் இவை செய்யும்போது மிளகாய்த்தூள் போட்டு செய்வதைவிட மிளகாய்த்தூளில் சேர்க்கப்படும் பொருள்களை வறுத்தரைத்து செய்யும்போது சுவையும்,மணமும் கூடுதலாக இருக்கும்.இந்தக் குழம்பை வெறும் சிக்கனிலோ அல்லது வெறும் டோஃபுவிலோ அல்லது காய்கறிகளிலோ கூட செய்துகொள்ளலாம்.

தேவையானவை:

சிக்கன் _ 2   chicken thighs  அல்லது 1 chicken breast
டோஃபு _ 1/3 பங்கு
சின்ன வெங்காயம் _சுமார் 10
தக்காளி_1
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி ,புதினா _கொஞ்சம்
உப்பு_தேவைக்கு.

வறுத்தரைக்க:

கொத்துமல்லி விதை_3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
மிளகு_2 லிருந்து 5 க்குள்
சீரகம்_சிறிது
பெருஞ்சீரகம்_சிறிது
மஞ்சள்_ஒரு சிறு துண்டு
கசகசா_ஒரு டீஸ்பூன்
தேங்காய் பூ_ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)

தாளிக்க:

நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் _2 டீஸ்பூன்
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_1
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கழுவிவிட்டு,அதனுடன் சிறிது தயிர்,மஞ்சள் தூள்,சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.

வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் நன்றாக அதே சமயம் கருகாமல் வறுத்துக்கொண்டு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு தட்டிக்கொண்டு,வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.

ஒரு  அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி,பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிக்கன் வதங்கியதும் அதனுடன்,அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு,தேவையான உப்பும் சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனபிறகு,தேவையான தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

இப்போது டோஃபுவை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு ஒரு    non stick pan ல் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு டோஃபுவின் எல்லா பக்கங்களும் சிவக்குமாறு  வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் டோஃபுவையும் சேர்த்து கிளறி விடவும்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நன்றாகக் கொதித்து வ‌ந்ததும் எலுமிச்சை சாறு விட்டு கிளறி,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி,நாண்,பரோட்டா,இடியாப்பம் இவறிற்கு நன்றாக இருக்கும்.

சிக்கன் பிரியானி/Chicken briyani

தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி (அ) பச்சரிசி _2 கப்
Chicken breast  _1 (or)  Chicken thigh _2
இஞ்சி_சிறிய துண்டு
பூண்டு_3 பல்
பெரிய வெங்காயம்_1
தக்காளி_1
பச்சை மிளகாய்_1
தேங்காய்_5 கீற்றுகள்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
குங்குமப்பூ_சிறிது
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய் (அ) ஆலிவ் ஆயில் (அ)நல்லெண்ணெய்_இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்
பட்டை_1
கிராம்பு_2
பிரிஞ்சி இலை_2
ஏலக்காய்_1
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி_5

செய்முறை:
அரிசியைக் கழுவி ஒரு 10 நிமி ஊற வைத்து நீரை வடித்துவிடவும்.

சிக்கனை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கழுவிவிட்டு கொஞ்சம் தயிர், சிறிது மிளகாய்த்தூள்,சிறிது மஞ்சள்தூள் சேர்த்து பிசறி ஒரு கால்மணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய வெங்காயத்தில் பாதியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

மீதமுள்ள பாதி வெங்காயத்துடன் பச்சைமிளகாய்,தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு 1/4 டம்ளர் வெந்நீரில் குங்குமப்பூவைப் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அடுப்பிலேற்றி சூடாகியதும் அரிசியைப்போட்டு வதக்கவும்.நிறம் மாறும் சமயம் இறக்கி  சூடு ஆறியதும் சமைக்கப் போகும் எலக்ட்ரிக் குக்கரில் கொட்டி வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பிலேற்றி நெய் அல்லது எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கவும்.

அடுத்து சிக்கனைப் பிழிந்து போட்டு வதக்கவும்.மீதமுள்ள தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும்.

இவை நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி கலவையைச் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிடவும்.

எல்லாம் நன்றாகச் சேர்ந்து கொதித்த பிறகு ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என (தேங்காய்ப் பாலையும் சேர்த்து) ஊற்றி மூடி கொதிக்கவிடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் அப்படியே எடுத்துக் குக்கரில் கொட்டி,குங்குமப்பூ தண்ணீரையும் சேர்த்துக் கிண்டிவிட்டு switch on செய்யவும்.

ஒரு பத்து நிமிடடம் கழித்து    switch off   செய்துவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து ஒருமுறை கீழிருந்து மேலாக‌ லேசாகக் கிளறிவிட்டு மூடி மீண்டும்  switch on செய்யவும்.

அப்போதுதான் அடியில் ஒரு லேயர் மாதிரி படியாமல் இருக்கும்.அதன் பிறகு ஒரு 5 லிருந்து 10 நிமிடத்தில் குக்கர்   warm mode   க்கு சென்றுவிடும்.

பிறகென்ன!சுவையான சிக்கன் பிரியானியை எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

இதனை வெங்காயம் தயிர் பச்சடி அல்லது தக்காளி ஜாமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

சிக்கன் கிரேவி

தேவையானப் பொருள்கள்:

சிக்கன்_சுமார் 1/4 கி
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_4 பற்கள்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

ஆலிவ் ஆயில் (அ)நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி_2 (விருப்பமானால்)

செய்முறை:

முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி,நன்றாகக் கழுவி நீரை வடிய வைக்கவும்.

அடுத்து இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.

ஒரு  கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி,பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து சிக்கனை சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு போட்டுக் கிளறி ஒரு 1/2 டம்ளர் தண்ணீர்,தேங்காய்ப் பால்  ஊற்றி மூடி கொதிக்க விடவும்.நன்றாகக் கொதித்து கெட்டியாகி சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு கிளறி,கொத்துமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி,நாண்,பரோட்டா இவறிற்கு நன்றாக இருக்கும்.

அசைவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

சிக்கன் வறுவல்

தேவையானப் பொருள்கள்:

சிக்கன்_250 கிராம்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_பாதி
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
முந்திரி_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டு அதில் சிக்கனைப் போட்டுப் பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்னீர் ஊற்றி பச்சை வாடை போகும் வரை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,பாதி எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சுமார் 1/2 மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

வெறும் வாணலியில் கொத்துமல்லி விதையையும்,சீரகத்தையும் தனித்தனியே வறுத்து, ஆறியதும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.ஒரு  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.அதுவும் நன்றாக வதங்கியபின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து காரம்,உப்பு சரிபார்த்து மூடி மிதமானத் தீயில் வேகவிடவும்.தண்ணீர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.சிக்கனில் இருந்து வெளிவரும் நீரே அது வேக‌ போதுமானதாக இருக்கும்.சிக்கன் பாதி வெந்த நிலையில் வறுத்துப் பொடித்த கொத்துமல்லிப் பொடியைப் போட்டுக் கிளறவும்.(மிளகாய்த்தூளில் கொத்துமல்லி சேர்த்திருந்தாலும் புதிதாக வறுத்துப் பொடித்துப் போடும்போது வாசனையும்,சுவையும் தூக்கலாக இருக்கும்.)

சிக்கன் நன்றாக வெந்து தண்னீர் எல்லாம் வற்றிய  பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி இலைத் தூவிக் கிளறி இறக்கவும்.புதினா வாசனைப் பிடித்தமானால் கொத்துமல்லியுடன் இதையும் சேர்த்துப் போடலாம்.இதை எல்லா வகையான சாதத்திற்கும் பக்க உணவாகப் பரிமாறலாம்.

அசைவம், வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »