வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார்

சில காய்கறிகளின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.(உ.ம்) கேரட்,பீன்ஸ் சாம்பார்;மாங்காய்,முருங்கைக்காய் சாம்பார்;கருவாடு,கத்தரிக்காய் போன்று. அந்த வரிசையில் வாழைப்பூ சமையலாக இருந்தால் அதனுடன் அகத்திக்கீரை சேர்த்து சாம்பார்,பொரியல்,கூட்டு என செய்வார்கள்.வாழைப்பூவின் துவர்ப்பும், அகத்திக்கீரையின் கசப்பும் சேர்ந்து சூப்பர் சுவையுடன் இருக்கும்.அகத்திக்கீரை இல்லாமல் போனால் முருங்கைக்கீரை சேர்த்து சமைப்பார்கள்.இங்கு என்றாவது  வாழைப்பூவையாவது பார்க்கலாம்.அகத்திக்கீரையைப் பார்த்ததே இல்லை. ஒருவேளை ஃப்ரோசன்  செக் ஷ‌னில் கிடைக்குமா தெரியவில்லை.

வாழைப்பூ & முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறைக்கு  இங்கே  செல்லவும்

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
வாழைப்பூ_பாதி
முருங்கைக் கீரை_ஒரு கிண்ணம் (அதிகமாகவும் சேர்க்கலாம்)
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து ஆறியதும் பூவைப் பிழிந்து வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி,ப.மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.சாம்பர் நீர்க்க இருக்க வேண்டும்.

சாம்பார் ஒரு கொதி வந்ததும் வாழைப்பூவைப் போட்டு மூடி வேக வைக்கவும்.

சாம்பார் நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு (மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி  இலை சேர்த்து இறக்கவும்.

இப்போது வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.