கேரட் & முட்டை பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கேரட்_1
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_சிறிது
முட்டை_1
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை:

கேரட் பொரியலில் கேரட் வெந்ததும் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம்.அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்கிறோம். அவ்வளவே.

வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத்   தாளித்துவிட்டு  வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு கேரட்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

இரண்டும் சேர்ந்தார்போல் வந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

முட்டைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

முட்டை_4
உப்பு_தேவைக்கு

தாளிக்க:
நல்லெண்ணெய்_சிறிது
உளுந்து_1/4 டீஸ்பூன்
மிளகு_ஒரு டீஸ்பூன் (காரத்திற்குத் ஏற்றவாறு கூடக்குறைய இருக்கலாம்)
மஞ்சள் தூள்_சிறிது

செய்முறை:

மிளகைப் பொடித்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து பெயருக்கு சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முதலில் உளுந்து போட்டு சிவந்ததும் மிளகு,மஞ்சள்தூள் சேர்த்து லேசாகக் கிளறிவிட்டு (மஞ்சள் தூள் கருகாமல்) உடனே முட்டையை உடைத்து ஊற்றவும்.

ஊற்றியதும் ஒரு தோசைத்திருப்பியால் கிளறிவிட்டு உப்பைத் தூவினாற்போல் போட்டு முட்டை வேகும் வரை (சீக்கிரமே வெந்துவிடும்) அடிக்கடி கிளறிவிடவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.இல்லையென்றால் முட்டை தீய்ந்து வேண்டாத வாசனை வந்துவிடும்.

வெந்த முட்டைப் பொரியல் பெரியபெரிய‌ துண்டுகளாக இருந்தால் கரண்டியால் உடைத்து சிறுசிறு துண்டுகளாக்கவும்.இப்போது முட்டைப் பொரியல் தயார்.

இது எல்லா வகையான சாததிற்கும்(தயிர் சாதம் தவிர்த்து) பொருத்தமாக இருக்கும்.