கோதுமை & ஓட்ஸ் சப்பாத்தி

இதை கோதுமை மாவு சப்பாத்தியைப் போலவேதான் செய்ய வேண்டும். கோதுமை மாவு,ஓட்ஸ் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக இடித்துக்கொள்ளவும்.மாவு பிசைவது, சப்பாத்தி சுடுவது எல்லாமே சாதாரண சப்பாத்தியைப் போலவேதான்.

தேவையானப் பொருள்கள்:

கோதுமை மாவு_2 கப்
ஓட்ஸ்_2 கப்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு,அடுப்பில் வைத்து சூடானதும் நிறுத்தி விட்டு,கோதுமை மாவைக் கொட்டி,ஒரு தோசைத் திருப்பியால் நன்றாகக் கிளறவும்.எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளற வேண்டும்.

அடுத்து ஓட்ஸ் மாவைக் கொட்டி மீண்டும் அதே போல் கிளறவும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து பிசைய வேன்டும்.அடுத்து சூடானத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து நன்றாகப் பிசைந்து ஒரு ஈரத்துணி கொண்டு மாவை மூடி வைக்கவும்.குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவிற்கு எடுத்து சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு பூரிக் கட்டையில் வைத்து விரும்பிய வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.பூரியை விட  சற்று மெல்லியதாக இருக்கட்டும்.

கல் சூடானதும் சப்பாத்தியைப் போட்டு,ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம்  திருப்பி விட்டு ஒரு ஸ்பூன் (அ)  ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது எண்ணெய் தொட்டு சப்பாத்தி முழுவதும் தேய்த்து விடவும்.இது போல் அடுத்த பக்கமும் தேய்க்க வேண்டும்.நல்ல சத்தான,சுவையான,மிருதுவான சப்பாத்தி தயார்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்து விருப்பமான குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கோதுமை உப்புமா

தேவையானவை:

உடைத்த கோதுமை_2 கப்
சின்ன வெங்காயம்_5
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி(விருப்பமானால்)
தக்காளி_1/4 பாகம்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
முந்திரி_5
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.கோதுமையை நன்றாக சூடு வர வறுத்துக்கொள்ளவும். வெங்காயம்,இஞ்சி இவற்றைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை நீள வாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து  வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி,பட்டாணி சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என 4 கப்புகள் தண்ணீரை அளந்து ஊற்றவும்.மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.

சிறிது நேரம் கழித்துத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது பட்டாணி வெந்துவிட்டதா எனப் பார்த்து அது வெந்தவுடன் கோதுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.இது ரவை மாதிரி கட்டித் தட்டாது.எனவே பொறுமையாகவேக் கிளறலாம்.நன்றாகக் கிளறி உப்பு சேர்த்து மூடி மீண்டும் வேக வைக்கவும். அடிப் பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லித் தூவி இறக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னிதான் பெஸ்ட் காம்பினேஷன்.

சர்க்கரைப் பொங்கல் (கோதுமை அரிசி)

தேவையானப் பொருள்கள்:

கோதுமை அரிசி_ 1  கப்
பச்சைப் பருப்பு_1/4 கப்
வெல்லம்_1 கப்
முந்திரி_10
திராட்சை_10
பால் (அ) தேங்காய்ப் பால்_1/4 கப்
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சுமார் 4 கப்புகள் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.நன்றாக வெந்ததும் கோதுமை அரிசியை சேர்த்துக் கிளறி வேக வைக்கவும்.நன்றாகக் குழைய வேக வேண்டும்.

இது வெந்துகொண்டிருக்கும்போதே வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து வரும்.லேசான பாகு பதம் வரும் போது இறக்கிப்  பொங்களில் ஊற்றிக் கிளறவும்.பிறகு பால் விட்டுக் கிளறி,ஏலக்காயைப் பொடித்துப் போட்டு  சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

அடுத்து ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி,திராட்சை வறுத்து பொங்களில் கொட்டிக் கிளறவும். சுவையான,இனிப்பான‌ கோதுமைச் சர்க்கரைப் பொங்கல் தயார்.

குறிப்பு:

கோதுமை அரிசியை வறுக்க வேண்டாம்.வறுத்தால் குழைய வேகாமல் உதிருதிராக உப்புமா போல் வரும். உப்புமா செய்வதாக இருந்தால் மட்டுமே வறுக்க வேண்டும்.

கோதுமை அரிசி வாங்கும் போது ரவை மாதிரி இல்லாமல் ஒன்றிரண்டாக உடைத்த அரிசியாக வாங்கினால் சாதம்,பொங்கல்,உப்புமா என வெரைட்டியாக செய்வதற்கு நன்றாக இருக்கும்.