சென்னாகுனி தூள்

 

இது இட்லிக்கான தூள். இந்த தூள் இருந்துவிட்டால் இட்லி கணக்கில்லாமல் உள்ளே போகும். அவ்வளவு சுவையாக இருக்கும். உரலில் இடித்து, முடித்து அள்ளும்போது நாங்க எங்க அம்மாவிடம், ” அம்மா அம்மா, கொஞ்சம் தூளை அதிலேயே விட்டுடும்மா” என்று சொல்லி, சுட சுட நான்கைந்து இட்லிகளை உரலில் உள்ள தூளில் போட்டு ஒற்றி எடுத்து சாப்பிடுவோம். அதன் சுவைக்கு ஈடுஇணை ஏதும் கிடையாது. பின்னாளில் உதவுமே என இப்போதைக்கு பதிந்து வைத்துக்கொள்கிறேன்.

காராமணிகுப்பம் சந்தைக்கு போய் இந்த சென்னாகுனியை வாங்கி வருவாங்க. இது இளம் ஆரஞ்சு நிறத்தில் அல்லது வெண்ணிறத்தில் இருக்கும், பொடிஈஈஈ கருவாடு. நைநை’னு யாராவது தொந்தரவு பண்ணினா, ” சென்னாகுனி மாதிரி அரிச்சு எடுக்குற”னு சொல்லுவாங்க 🙂

இங்கு இது கிடைப்பது இல்லை. அதனால் என்னிடம் சென்னாகுனியின் படம் இல்லை. அதனால் பதிவு மட்டுமே 🙂

அளவுகளும் இன்னின்ன அளவுகள் என்று கிடையாது. அப்படியே போட்டுக்கொள்ள வேண்டியதுதான். எங்க அம்மா செய்வதை அப்படியே சொல்லிவிடுகிறேன். நமக்கு ஏற்றார்போல் அளவுகளை மாற்றி போட்டுக்கொள்ள வேண்டியது நாம்தான்.

வீட்டில் சின்னபடி, பெரியபடி என்று இருக்கும். எத்தனை கப்புகள் வரும் என்றெல்லாம் தெரியவில்லை. அதில் ஒரு சின்னபடி அளவுக்கு பொட்டுக்கடலையும், ஒரு கை அளவுக்கு சின்னாகுனியும், காரத்துக்கு காய்ந்த மிளகாயும், சுவைக்கு உப்பும் இருந்துவிட்டால் தூள் ரெடி பண்ணிடுவாங்க.

செய்முறை:

சின்னாகுனியில் மணல் இருக்கலாம். அதனால் அவற்றை முறத்தில் போட்டு லேசாகத் தேய்த்தாற்போல் செய்து புடைத்து பிரிச்சிடுவாங்க.

பிறகு இரும்பு வாணலை அடுப்பில் ஏற்றி, சூடானதும் சின்னாகுனியைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொண்டு, அதே வாணலில் மிளகாயைப் போட்டு சூடேறும் வரை நிறம் மாறாமல் வறுத்துக்கொண்டு, தீயை அணைத்துவிட்டு பொட்டுக்கடலையையும் அதே வாணலிலேயேப் போட்டுவிட்டால் அதுவும் சூடேறிவிடும். பிறகு இவை ஆறியதும் உரலில் கொட்டி, உப்பு சேர்த்து இடித்து, சலித்து, காற்று புகா டப்பாவில் வைத்துக்கொண்டால் இட்லிக்கு அருமையான தூள் ரெடி.

இந்தத் தூளும், சாதாரண இட்லித் தூளும், சட்னியும், சாம்பாரும் இருந்தாலும் நாங்க எல்லோரும் இட்லிதோசைக்கு முதலில் எடுப்பது இதுவாகத்தான் இருக்கும். இந்தத் தூளுக்கு நல்லெண்ணெய் எல்லாம் விட்டு சாப்பிடக்கூடாது.

கிடைக்கும் பட்சத்தில் நீங்களும் செய்து பார்க்கலாமே !

இட்லிப் பொடி

தேவையானப் பொருள்கள்:

கடலைப் பருப்பு_ஒரு கப்
கறுப்பு உளுந்து_ஒரு கப்
காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப)
மிளகு_1/4 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
பூண்டு_2 பற்கள்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

உப்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் வெறும் வாணலியில் மிதமானத் தீயில் வறுத்து ஆற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொள்ள வேண்டும்.

கடலைப் பருப்பு,உளுந்து இரண்டையும் சிவக்க வறுக்க வேண்டும்.

மிளகாய் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்.இதனை பருப்புகள் வறுக்கும்போது போட்டு சூடேறியதும் எடுத்துவிடலாம்.

மிளகு,சீரகம் சூடுவர வறுக்க வேண்டும்.

காய்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் லேசாக சூடேறினால் போதும். பச்சையாக இருந்தால் சருகு போல் வரும்வரை வறுக்க வேண்டும்.

பூண்டைப் பொடியாக நறுக்கி நன்றாக வதங்கும் வரை வறுக்க வேண்டும்.

கட்டிப் பெருங்காயமாக இருந்தால் பருப்பு வகைகள் வறுக்கும்போது அதிலேயே சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.தூள் பெருங்காயமாக இருந்தால் பொடி இடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.

இட்லி,தோசை இவற்றிற்கு வெறும் தூளோ அல்லது தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.