தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!!

IMG_4639

வெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம்  தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா !!

ஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.

ஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்பு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் ……..  பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.

தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.

ஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.  நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.

தேவையான பொருள்கள்:

நல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)
உளுந்து _  1/4 கப்
வெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
அவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி

20140306_143926

செய்முறை:

முதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.

அடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.

சுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.

சுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.

பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.

பிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.

இப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.

அரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

IMG_8837

அரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.

நான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

IMG_8647

ஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ,  ஆனாலும்  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

idli maavu idli maavu
idli maavu  idli maavu

இனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே !!

தோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.
IMG_4474

இந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது? இட்லி எது?” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.

ஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா !!

தோசை / Dosa

நீண்ட நாட்களாகவே தோசைப் பதிவை போட வேண்டும் என நினைப்பேன்.ஆனாலும் ஃபோட்டோ எடுப்பதற்குள் ஆறிப் போய்விட்டால் யார் சாப்பிடுவது என நினைத்து விட்டுவிடுவேன்.ஆமாம்,சூடாக இருக்கும்போது இருக்கும் மொறுமொறு சிறிது நேரத்திலேயே காணாமல்போய் சாஃப்டாகிவிடும்.உள்ளே இறங்காது.

இன்று துணிந்து ஒரு முடிவுக்கு வந்து,அதாங்க ஆறிப்போனாலும் சூடுபண்ணி சாப்பிட்டுவிடுவது என முடிவுப‌ண்ணி (டுமீல் டுமீல் என) சுட்டுவிட்டேன்.படத்தை க்ளிக் பண்ணி பாருங்க,கல்லிலிருந்து எடுத்ததும் இப்பவோ அப்பவோ என உடைந்துவிடும்போல மொறுமொறுவென இருக்கும் இருக்கும் இந்தத் தோசையை எப்படி ஆறவைத்து சாப்பிடுவது!!

நான் தோசைக்கென தனியாக மாவு அரைப்பதில்லை.இட்லி மாவையேப் பயன்படுத்திக்கொள்வேன்.இட்லி சரியாக வந்துவிட்டால் தோசை தானாகவே வந்துவிடும்.

மாவுதான் ஏற்கனவே அரைத்து வைத்துவிட்டோமே.இப்போது தோசை சுடுவது எப்படி?என்று மட்டும் பார்ப்போம். இட்லிமாவு இன்னும் அரைக்கவில்லை என்பவர்கள் இங்கே போய் சீக்கிரமே அரைச்சு எடுத்திட்டு வந்திடுங்க‌.

இட்லி மாவைவிட தோசைக்கான மாவு கொஞ்சமேகொஞ்சம் நீர்த்து இருக்க வேண்டும். அதேபோல் மாவு முழுவதையும் தண்ணீர் ஊற்றிக் கரைக்காமல் இரண்டுமூன்று தோசைக்கான மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு 1/4 டம்ளருக்கும் குறைவாகத் தண்ணீர் விட்டு கரண்டியால் லேஸாகக் கரைத்துவிட்டு பயன்படுத்தவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.கல் சூடானதும் வாழைக்காயின் காம்புப்பகுதி அல்லது கத்தரிக்காயின் நுனியில் லேஸாக நறுக்கிவிட்டு எண்ணெயில் தொட்டு கல் முழுவதும் தடவிவிட்டு ஒரு கரண்டி மாவைக் கல்லின் நடுவில் ஊற்றி,கரண்டியின் அடிப்பகுதியால் கல் முழுவதும் இழுத்து நன்றாகத் தேய்க்கவும்.சுற்றிலும் மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு இட்லிப் பாத்திரத்தின் மூடியால் நன்றாக மூடி வேக‌விடவும்.தோசை வெந்ததும் மூடியின் வழியே ஆவி வரும்.மூடியைத் திறந்து தோசைத்திருப்பியால் தோசையைக் கல்லிலேயே மடித்துப்போட்டு (திருப்பிப்போடாமல்) எடுக்கவும்.மொறுமொறு தோசை தயார்.

தோசை வெந்துவிட்டால் தோசைத்திருப்பியால் எடுக்கும்போது எளிதாக வந்துவிடும்.எடுக்க வராமல் கல்லில் ஒட்டிக்கொண்டால் தோசை இன்னும் வேகவில்லை என்பதாகும்.மீண்டும் மூடிவைத்து வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி,வேர்க்கடலை சட்னி,இட்லி தூள்,இட்லி சாம்பார் எல்லாம் சூப்பரா இருக்கும்.அதைவிட தேங்காய் சட்னி & இட்லி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சூப்பரோ சூப்பர்.இதனுடன் தூளையும் தொட்டு சாப்பிட இன்னும் சூப்பரோ சூப்பர்.

தோசை பளபளன்னு வரணுமின்னா கல் போனாலும் பரவாயில்லை என்று கல்லில் எண்ணெய் தேய்க்காமல் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு சொடசொடப்பு அடங்கியதும் மாவு ஊற்றி தேய்த்துவிட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப்போடாமல் எடுக்கவும்.

இட்லி சாம்பார் / Idli sambar

idli&sambaridli sambar

என்னதான் விதவிதமாக சாம்பார் வைத்து இட்லிக்கு தொட்டு அல்லது ஊற்றி சாப்பிட்டாலும் இட்லிக்கென தனியாக செய்யும் சாம்பார் மாதிரி வராது.பச்சைப் பருப்பை வேகவைத்து,சின்ன வெங்காயத்தை முழுசுமுழுசாகப் போட்டு,காய்கள் எதுவும் போடாமல்,கொஞ்சம் கூடுதலான மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சாம்பார் இட்லி,தோசைக்கு சூப்பர்.

காய் போட்டே தீருவேன் என அடம்பிடித்தால் காயின் வாசனை வராத அளவுக்கு சிறு கேரட் ஒன்று போடலாம்.

தேவையானவை:

பச்சைப்பருப்பு_1/4 கப்
சின்ன வெங்காயம்_சுமார் 10
பழுத்த,சிவந்த தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டிதழ்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
அரிசி மாவு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_நான்கைந்து(வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப்பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,அதில் விளக்கெண்ணெய் 2 சொட்டு,பெருங்காயம், மஞ்சள்தூள்,பூண்டிதழ்கள் சேர்த்து மலர வேக வைத்து கடைந்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை லேசாகத் தட்டி முழுதாகக்கூட போடலாம்.

ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பை சேர்த்துவிட்டுத் தேவையானத் தண்ணீர் விட்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி கொதிக்க வைக்கவும்.

நன்றாகக் கொதித்தபிறகு அரிசி மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சாம்பாரில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

idli sambar

அரிசி மாவு இல்லாவிட்டால் (எங்க அம்மா செய்வது) இட்லி மாவில் சிறிது எடுத்து சாம்பாரில் விட்டு கலக்கிவிட்டும் கொதிக்கவைத்து இறக்க‌லாம்.

இது இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

கேழ்வரகு சேமியா இட்லி / Ragi semiya idli

ragi semiya idli

இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு டிஃபன்.ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் சாப்பிட வேண்டும் என்பதால் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கேழ்வரகு சேமியா உப்புமா செய்வதில் பாதி வேலைகூட இதற்குத் தேவையில்லை.எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.

ஒரு பாக்கெட் சேமியாவில் மூன்று பேருக்குக்குறையாமல் சாப்பிடலாம்.

செய்முறையை ஒரே வரியில் சொல்வதானால் சேமியாவில் உப்பு போட்டு  ஊறவைத்து,நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.இதைத்தான் கீழே ஒரு பதிவாகக்கொடுத்துள்ளேன், புதியவர்களுக்கு உதவும் என்பதால்.

தேவையானவை:

அணில் சேமியா பாக்கெட் (200 g )_1
உப்பு_தேவைக்கு

செய்முறை:

கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்)இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும்.ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.

சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.

இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக‌ அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.

ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இது மிகவும் மிருதுவாகவே இருக்கும்.

சிவப்பரிசி இட்லி (Rose matta rice idli)

சிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.

தேவையானப் பொருள்கள்:

சிவப்பரிசி_4 கப்
உளுந்து_1/4 கப்
வெந்தயம்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக‌ முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.

மாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது  ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.

அடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.

அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.

நமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

இட்லி

 தேவையானவை

புழுங்கல் அரிசி – 8 கப்புகள்

உளுந்து – 1/2 கப்

வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு_தேவையான அளவு

செய்முறை

வெந்தயத்தை முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக் கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து  கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2  மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்)  ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.

பிறகு அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.