மிளகாய் பஜ்ஜி

நீண்ட நாட்களாக மிளகாய் பஜ்ஜி செய்ய வேண்டுமென ஆசை.ஆசையைத் தூண்டியது இந்தப்பதிவுதான்.சம்மர் வரட்டும் என்றிருந்தேன்.அப்போதுதான் மார்க்கெட்டில் விதவிதமான,கலர்கலரான மிளகாய்கள் வரும்.அவற்றில் காரமில்லாத இரண்டுவிதமான மிளகாய்கள் வாங்கியாச்சு.

எப்போதும் ஒரே விதமாக செய்வதற்கு பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து செய்தேன்.இந்த ஐடியாவை எனக்கு சிலபல வருடங்களுக்கு முன்பு என் சகோதரி,”பஜ்ஜியை கடலைமாவில் செய்வதற்கு பதில் கடலைப்பருப்பை ஊறவச்சி அரைச்சு செஞ்சா சூப்பரா இருக்கும்”னு சொன்னாங்க.அதை நினைத்தே நானும் செய்தேன்.சூப்பராக வந்தது.

காரமேயில்லாத அந்த மிளகாய்கள் இவைதான்.

            

மிளகாயைக் கீரி அதன் உள்ளேயுள்ள விதைப்பகுதியை நீக்கிவிட்டு,காருமோ என பயந்து கழுவித் துடைத்துவிட்டு பஜ்ஜிக்குத் தயார் நிலையில் உள்ளன

மிளகாய் பஜ்ஜி தயாராகிவிட்டது.

சாப்பிட்ட திருப்தியில் இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையானவை:

கடலைப் பருப்பு_ஒரு கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_10
பூண்டிதழ்_5
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்_சிறித்
ஓமம்_சிறிது
காரமில்லாத மிளகாய்கள்_கொஞ்சம்

செய்முறை:

கடலைப் பருப்பை ஊறவைத்துக் கழுவி நீரை வடித்துவிட்டு கிரைண்டரில் போட்டு மைய அரைக்கவும்.

அரைக்கும்போதே பெருஞ்சீரகம்,காய்ந்தமிளகாய்,பூண்டிதழ் சேர்த்து அரைக்கவும். மிளகாய் காரம் அதிகமாக இருப்பின் குறைத்து சேர்க்கவும்.நான் 10 மிளகாய் சேர்த்தும் சுத்தமாகக் காரமில்லை.

தேவையானால் சிறிது தன்ணீர் தெளித்து  மைய அரைத்தெடுக்கவும்.

மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் அரிசிமாவு, பெருங்காயம்,ஓமம்,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.தேவையானால் அரிசிமாவைக் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்கலாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி,எண்ணெய் காய்ந்ததும் மிளகாய்களை பஜ்ஜி மாவில் தோய்த்து,அதிகப்படியான மாவை வழித்துவிட்டு கவனமாக எண்ணெயில் போடவும்.

இதேமாதிரி எண்ணெய் கொண்டமட்டும் போடவும்.ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

இப்போது சுவையான மிளகாய் பஜ்ஜிகள் தயார்.

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.இல்லாவிடில் கெட்சப்புடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.

மீதமான மாவில் காலிஃப்ளவர்,வாழைக்காய் பஜ்ஜிகளும் போட்டாச்சு.

 

கீழேயுள்ளவை கடலை மாவில் செய்தவை.இதன் செய்முறையைக் காண இங்கே செல்லவும்.

மிளகாயின் நுனிப்பகுதியிலிருந்து அடிப்பகுதிவரை ஒரு பக்கம் மட்டும் கீறிவிட்டு அதனுள்ளே உள்ள விதைப்பகுதியை நீக்கிவிட்டு விருப்பமான மசாலாவை அடைத்து பஜ்ஜி மாவில் தோய்த்தும் பஜ்ஜி போடலாம்.

                                   

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 6 Comments »

கடலைப்பருப்பு சீயம்

மிகவும் சுவையான இந்த சீயம் தீபாவளியன்று (எங்க வீட்டில்) செய்வாங்க.இதை சாப்பிட ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.என்ன கொஞ்சம் (உண்மையில் அதிகம்) வேலை வாங்கும்.

சிலர் மேல் மாவிற்கு மைதாவிற்கு பதில் புதிதாக அரைத்த இட்லி மாவைப் பயன்படுத்துவார்கள்.புளித்த மாவு என்றால் அதிகமாக எண்ணெய் குடிக்கும்.

மைதாவில் செய்யும்போது சீயம் வெள்ளையாக இருக்கும்.இட்லி மாவில் செய்யும்போது சிவந்து வரும்.

கடலைப் பருப்பிற்கு பதில் பச்சைப் பருப்பிலும் இதைச் செய்யலாம்.எங்கம்மா செய்யும் முறை எனக்குப் பிடிக்கும் என்பதால் அதையே கீழேக் கொடுத்துள்ளேன்.

தேவையானவை:

பூரணத்திற்கு:~

கடலைப்பருப்பு_ஒரு கப்
வெல்லம்_ஒரு கப்
ஏலக்காய்_1

மேல் மாவிற்கு:~

மைதா_2 கப்
அரிசிமாவு_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
மஞ்சள்தூள்_ஒரு சிட்டிகை
உப்பு_சுவைக்கு

எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் கழுவிவிட்டு,அது மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.ஆனால் குழைந்திருக்கக் கூடாது.பருப்பு வெந்ததும் நீரை வடிக்கவும்.நீரை வடித்தும் நீர் இருப்பதுபோல் தோன்றினால் ஒரு சுத்தமான துணி/பேப்பர் டவலில் பரப்பிவிட்டு உலர வைக்கவும்.

வெல்லத்தை மண்,தூசு நீக்கி சுத்தம் செய்துவிட்டுப் பொடிக்கவும்.ஏலக்காயைப் பொடிக்கவும்.

கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.பிறகு ஒரு கடாயில் எடுத்து,அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமானத் தீயில் வதக்கவும்.முதலில் சிறிது இளகி பின் கெட்டியாகும். இப்போது ஏலப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.

இது ஆறியதும் படத்திலுள்ளதுபோல் சிறுசிறு உருண்டைகள் பிடிக்கவும்.

மேல்மாவிற்கு கூறியுள்ள அனைத்தையும் மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடாகியதும் உருண்டைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.எண்ணெய் அதிகமாக சூடாக‌ இருக்கக்கூடாது.

மேலும் உருண்டைகள் உடைந்துவிடாமல் வேக வேண்டும்.உடைந்துவிட்டால் உள்ளேயுள்ள பூரணம் வெளியில் வந்து எண்ணெய் முழுவதும் பரவி கருப்பாகிவிடும்.

அதிக எண்ணிக்கையில் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் போடலாம். ஒன்றையொன்று ஒட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உருண்டைகளைத் திருப்பிவிட்டு (போண்டா போல்) வெந்ததும் எடுத்துவிடவும்.

இப்போது சுவையான சீயம் நொறுக்க‌/சாப்பிடத் தயார்.