கருவாடு & சர்க்கரை வள்ளிக்கிழங்கு குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கருவாடு_சுமார் 10 எண்ணிக்கையில் (காரை,நீர்சுதும்பு,சென்னாவரை,சங்கரா,பாறை போன்றவை நன்றாக இருக்கும்)
வள்ளிக்கிழங்கு_2
புளி_பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
முழு பூண்டு_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.

கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.

சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வைக்கவும்.தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

வள்ளிக்கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளலாம்.முதலிலேயே நறுக்கிவிட்டால் நிறம் மாறிவிடும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம்,அடுத்து வெந்தயம்,கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி, அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி,அடுத்து மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கிழங்கை நறுக்கி குழம்பில் போட்டு கிளறி விட்டு மூடி கொதிக்க விடவும்.நன்றாகக் கொதித்து கிழங்கு வெந்த‌ பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதில் காய் வெந்து ,குழைந்துவிடும் என்ற பிரச்சினை இல்லை.எவ்வளவு வெந்தாலும் நன்றாகவே இருக்கும்.

பிறகென்ன; சூடான சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியதுதான்.குழம்பு ஆறியபிறகுதான் இன்னும் சுவையாக இருக்கும்.அடுத்த நாள்தான் அதற்கு மேலும் சுவையாக இருக்கும்.

மேலும் இக்குழம்பு இட்லி,தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

கருவாடு,வாழைக்காய்,முட்டைக் குழம்பு

கருவாட்டுக் குழம்பிற்கு காரை,சங்கரா,நீர் சுதும்பு போன்ற கருவாடுகள் நன்றாக இருக்கும்.அவை கிடைக்காததால் நெத்திலியில் செய்துள்ளேன்.பழைய சாதத்திற்கு இதில் உள்ள வாழைக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.

தேவையானப் பொருள்கள்:

கருவாடு_சுமார் 100 கி
வாழைக்காய்_1 (அ) பாதி
முட்டை_3 (ஒரு நபருக்கு ஒன்று)
புளி_பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
முழு பூண்டு_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்
வெந்தயம்

செய்முறை:

புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.நான் இதில் சேர்த்திருப்பது நெத்திலிக் கருவாடு.எல்லாக் கருவாட்டிலும் இதனை செய்யலாம்.சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வைக்கவும்.தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.வாழைக்காயைக் கொஞ்சம் கனமான‌ வட்டமாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.மெல்லியதாக இருந்தால் சீக்கிரமே வெந்துக் குழைந்துவிடும்.

முட்டையை வேக வைத்து ஆறியதும் தோலை உரித்துவிட்டு லேசாக சில இடங்களில் கீறிவிட்டு எடுத்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம்,அடுத்து வெந்தயம் போட்டு தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி,அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி,அடுத்து மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு பாதி கொதித்த நிலையில் வாழைக்காயைக் குழம்பில் போட்டு கிளறி விடவும்.இப்போது தீ மிதமாக இருக்கட்டும்.இல்லை என்றால் காய் சீக்கிரமே வெந்து குழைந்துவிடும்.நன்றாகக் கொதித்து காய் வெந்த பிறகு முட்டையை சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை முதலியவற்றிற்கு நன்றாக இருக்கும்.அதைவிட அடுத்த நாள் வைத்திருந்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.மற்ற பாத்திரங்களில் செய்வதை விட மண் சட்டியில் செய்தால்தான் அருமையாக இருக்கும்.

நெத்திலிக் கருவாடு வறுவல்

தேவையானப் பொருள்கள்:

நெத்திலிக் கருவாடு_சுமார் 100 கிராம்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
தக்காளி_பாதி
பூண்டு_5 லிருந்து 10 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

சுத்தம் செய்தல்:

நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.அதற்கு முதலில் அதன் தலையையும்,அதன் கீழே உள்ள கருப்பானக் கழிவுப் பகுதியையும் சுத்தமாக நீக்கி விட வேண்டும்.அடுத்து வால் பகுதியையும் நீக்க வேண்டும். இவ்வாறே எல்லாவற்றையும் செய்து வெதுவெதுப்பானத் தண்ணீரை  கருவாடு மூழ்கும் அளவிற்கு அதில் ஊற்றி ஊற வைக்கவும். ஊறினால்தான் சுத்தமாகக் கழுவுவதற்கு வசதியாக இருக்கும்.சுமார் பத்து நிமிடங்கள் கழித்து கருவாடை நன்றாகத் தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

செய்முறை:

இப்போது வெங்காயம்,பூண்டு, தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இதற்கு சின்ன வெங்காயம் தான் நன்றாக இருக்கும்.அதேபோல் நல்லெண்ணெய்தான் பெஸ்ட்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.சூடாகியதும் முதலில் கறிவேப்பிலை தாளித்து,பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி,அது வதங்கியதும் கருவாடு சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.ஒன்றிரண்டு முறை திறந்து கிளறி விட்டு மூடி வேக வைக்கவும்.தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக ரசம்,கிள்ளிப் போட்ட சாம்பார் சாதத்திற்கு இதைவிடப் பொருத்தமானப் பக்க உணவு எதுவும் இருக்காது.

இந்த முறையிலேயே மற்ற வகைக் கருவாடுகளையும் செய்யலாம்.