மண‌த்தக்காளி கீரை மசியல்

20150825_163709

இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். அதனால் தூக்கிப் போட்டுவிட வேண்டாம். வாய்ப்புண் என்றால் சாறு வாய் முழுவதும் படுமாறு இதை நன்றாக மென்று விழுங்கினால் போதும் சரியாகிவிடும். வயிற்றுப் புண்ணுக்கும் அப்படியே. உடலுக்கும் குளிர்ச்சியானது.

கசக்கும் என்பவர்கள் ஒரு துளிர் கீரையைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, சமைத்து சாப்பிடும் முன் எடுத்து வைத்த அந்தக் கீரையை மரமரனு மென்று விழுங்கிவிட்டு கடைந்த கீரையை சாப்பிட்டுப் பாருங்க, பருப்புடன் கீரை, சின்ன வெங்காயம், வதக்கிய பூண்டு, எல்லாமும் சேர்ந்து சூப்பரா இருக்கும், கசப்பே தெரியாது.

அளவுகள் தோராயமாக உள்ளன. உங்களின் சுவைக்கேற்ப சேர்ப்பவற்றில் மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள். காரம் அதிகம் என நினைத்தால் தாளிக்கும்போது சேர்க்கும் காய்ந்த மிளகாயே போதும்.

வேண்டியவை:

மணத்தக்காளி கீரை _ ஒரு சிறு கட்டு

உடைத்த பச்சைப் பருப்பு _ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு

பச்சை மிளகாய் _ 1

பூண்டுப்பல் _ ஆறேழு (பாதியை கீரையுடன் சேர்த்து வேகவைக்கவும், மீதியை தாளிக்கும்போது வதக்கி சேர்க்கவும்)

சின்னவெங்காயம் _ 2

தக்காளி _ பாதி

உப்பு _ தேவைக்கு

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை:

பச்சைப்பருப்பை அடிகனமான ஒரு சட்டியில் எடுத்து கழுவிட்டு அது வேகுமளவு தண்ணீர் ஊற்றி துளி மஞ்சள்தூள், பெருங்காயம், ஓரிரு சொட்டுகள் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வேக விடவும்.

20150823_164903

கீரையை ஆய்ந்துகொண்டு கழுவிவிட்டு நீரை வடிய‌விடவும். ஏனோ கீரையை நறுக்கப் பிடிப்பதில்லை.

பருப்பு பாதி வெந்து வரும்போது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, பாதி பூண்டு சேர்த்து வேகவிடவும்.

இவையெல்லாம் போட்டு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையைப் போட்டு துளி உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்க்வும். மூடினால் கீரையின் அழகான பச்சை நிறம் காணாமல் போய்விடும்.

இடையில் ஓரிரு முறை கிண்டி விடவும். இல்லையென்றால் அடியில் உள்ள கீரை குழைந்தும், மேலே உள்ளது வேகாமலும் இருக்கும்.

கீரை வெந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். ஒரு கரண்டியில் சிறிது கீரையை எடுத்து கையால் நசுக்கிப் பார்த்தால் வெந்துதா அல்லது வேக‌லையான்னு தெரிந்துவிடும்.

மண் சட்டியில் என்றால் சூடாகவே கடைந்துவிடலாம். மிக்ஸி என்றால் கீரை ஆறியதும் அதில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

பிறகு தாளிப்பதைத் தாளித்து கடைசியில் பூண்டுப்பல்லை கொஞ்சம் பொடியாகத் தட்டிப் போட்டு வதக்கிக் கொட்டி மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள உருளை அல்லது வாழைக்காய் அல்லது சேப்பங்கிழங்கு போன்றவற்றுடன் அப்பளம் அல்லது வத்தல் பொரித்து சாப்பிட …. ஆ…..ஹா… தான் 🙂

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 7 Comments »

முருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்

20150216_144222

சுவையான முருங்கைக்கீரை சூப்

எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.

20150216_144513

முருங்கைக்கீரை தண்ணி சாறு

சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.

20140723_082526

இளம் பசுமையான துளிர் கீரை

தேவையானவை:

20150216_135837

தேவையானவை

முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)

பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.

நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு

தாளிப்புக்கு :

நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்

செய்முறை :

கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.

ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.

அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக‌ வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.

IMG_1367

முன்பொருமுறை உழவர் சந்தையில் வாங்கியது

 

பருப்புக் கீரை / Paruppu keerai

paruppu keerai

ஊரில் இருக்கும்வரை கலவை கீரை அடிக்கடி கிடைக்கும்.எங்கம்மா அதை புளி சேர்த்து கடைஞ்சிருவாங்க.கதம்ப சாம்பார் மாதிரி இந்தக் கலவை கீரையும் சுவையாக இருக்கும்.

கலவைக் கீரை என்பது சிறுகீரை,முளைக்கீரை,தண்டுக்கீரை,அரைக்கீரை கொய்யாக்கீரை,குப்பைக்கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை என எல்லாக் கீரைகளும் சேர்ந்ததாகும்.அப்படித்தான் இந்தப் பருப்புக் கீரையைப் பார்த்திருக்கிறேன்.தனியாக சமைத்ததில்லை.

சென்ற வருடம் முதன்முறையாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இந்த பருப்புக் கீரையைப் பார்த்ததும் வாங்கிவந்து சமைக்காமலேயே தூக்கிப் போட்டுவிட்டேன்.லேஸான ஒரு கொழகொழப்பு தெரிந்தது.இப்போது இரண்டு வாரங்களாக‌ இக்கீரை வந்துகொண்டிருக்கிறது.

‘நல்லதுமா,சமைத்து சாப்பிடு’, என அம்மா சொல்லியதால் இந்த முறை விடுவதாக இல்லை என வாங்கிவந்து இரண்டு நாட்கள் சமைத்தாயிற்று. சூப்பராக இருந்தது.உங்களுக்குக் கிடைத்தால் நீங்களும் சமைத்துப் பாருங்களேன்.

paruppu keeraiparuppu keerai

இவ்வளவு பசுமையாக இருப்பதை வாங்காமல் விடலாமா!!

(கீழே படத்திலுள்ள கீரை எங்கள் வீட்டு தொட்டியில் வளர்த்தது)

IMG_0489

தேவையானவை:

பருப்புக்கீரை_1/2 கட்டு
பச்சைப் பயறு_1/4 கப்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டிதழ்_2

அரைக்க:

தேங்காய் பத்தை_3
காய்ந்த மிளகாய்_1(காரத்திற்கேற்ப)
சீரக‌ம்_கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

பச்சைப் பயறு வேக ஆகும் தண்ணீரின் அளவைவிட ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் கூடுதலாக விட்டு பூண்டிதழ், பெருங்காயம், மஞ்சள்தூள்,இரண்டு துளி விளக்கெண்ணெய் சேர்த்து மலர‌ வேக வைக்கவும்.குழைந்துவிட வேண்டாம்.

பயறு பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக விடவும்.

தேங்காயுடன்,சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் பயறில் அரைத்த விழுது+கீரை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க விடவும்.

கீரை வெந்து எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்து கீரையில் கொட்டிக் கலக்கவும்.

இதனை சாதத்துடனோ அல்லது சாதத்துக்கு பக்க உணவாகவோ சாப்பிடலாம்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 16 Comments »

சோம்புக்கீரை வடை/Dill keerai vadai/Fennel leaves vadai

இந்த வடையை முருங்கைக்கீரை வடை மாதிரியேதான் செய்தேன்.நன்றாகவே இருந்தது.கிடைத்தால் செய்து பார்க்கலாமே.

சோம்புக் கீரையில் ஒருவித வாசனை வரும் என்று கேள்விப்பட்டதால் இதுவரை வாங்காமலே இருந்தேன். காமாட்சிமா சமைத்ததாலும்,  ரஞ்ஜனி அவர்கள் ‘எங்க ஊர் கீரை’என்று சொன்னதாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வாங்கிவந்து என்ன செய்வது எனத்தெரியாமல் முதலில் கீரை வடை செய்யலாம்,நன்றாக இருந்தால் அடுத்த தடவை இதைவைத்து வேறு ஏதேனும் செய்யலாம் என முடிவெடுத்து வடை செய்தாச்சு.

வடையைப் பார்ப்பதற்கே அழகாக இருந்தது.சுவையும் அருமையாக இருந்தது.பிடிக்காத எந்த வாசனையும் வரவில்லை.

மகி அறிவது: இனி ஹைக்கிங் போகும்போது மறக்காமல் இந்தக்கீரையைப் பறித்துவந்து தூக்கிப் போடாமல்  எங்க வீட்டில் கொடுத்துவிட்டுப் போகவும்.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
வறுத்துப்பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு_ஒரு கப்
சோம்புக்கீரை_ஒரு செடியிலுள்ளது
சின்ன வெங்காயம்_சுமார் 10
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_2
பெருஞ்சீரகம்_சிறிது
பூண்டுப்பல்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

தண்டிலிருந்து கீரையைத் தனியாகப் பிரித்தெடுத்து தண்ணீரில் அலசி வைக்கவும்.பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது.தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கீழேயுள்ள பல்பை வைத்து என்ன சமைக்கலாம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

       

கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம்,பூண்டு,இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக,கெட்டியாக‌ அரைத்தெடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம்,கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

    

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான சோம்புக்கீரை வடைகள் தயார்.தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

எங்க வீட்டில் வடையைவிட வடைமாவை உதிர்த்துப் போடுவதற்குத்தான் மவுசு அதிகம்.அவ்வாறு போட்டதுதான் கீழேயுள்ள படத்திலிருப்பது.

கலவை தானிய அடை/Multi grain adai

அடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.

கேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.

முருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.

அடைக்குத் தேவையானவை:

ஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)
பார்லி மாவு_ஒரு கையளவு
கேழ்வரகு மாவு_ஒரு கையளவு
முருங்கைக்கீரை_மூன்று கைப்பிடி
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_தேவைக்கேற்ப‌
மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.

பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.

கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.

எண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.

தீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

சூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.

கீரை வடை

 

ரோல்டு ஓட்ஸை நன்கு சூடுவர வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சமயங்களில்  அதை சீரியல், பொங்கல், உப்புமா, கிச்சடி,களி என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.

இந்த மாவை வைத்துத்தான் கீரைவடை செய்தேன்.இதனை முருங்கைக்கீரை என்றில்லாமல் வேறு எந்தக்கீரையிலும் செய்யலாம்.சூப்பர் மொறுமொறுப்புடன், வாசனையாகவும் இருந்தது.நீங்களும் முயற்சிக்கலாமே.

தேவையானவை:

கடலைப்பருப்பு_ஒரு கப்
ரோல்டு ஓட்ஸ்_ஒரு கப்
முருங்கைக்கீரை_ஆய்ந்தது இரண்டு கப்
சின்னவெங்காயம்_சுமார் 10
பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_1 காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்.
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
பூண்டிதழ்_2
கறிவேப்பிலை&கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.கழுவிவிட்டு ஊறவைத்தாலும் சரி,ஊற வைத்துக் கழுவினாலும் சரி.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவேண்டும்.

கடலைப் பருப்பு ஊறிக்கொண்டிருக்கும்போதே ஓட்ஸை முதலில் சொல்லியதுபோல் நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலைப்பருப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்,பெருஞ்சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,சுத்தம் செய்த கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

முதலிலேயே உப்பு சேர்த்தால் கீரையின் அளவை வைத்து அதிகமாக சேர்க்க வாய்ப்புண்டு.எல்லாவற்றையும் பிசைந்தபிறகு கீரை இருக்குமிடமே தெரியாது. இப்போது சேர்த்தால் திட்டமாகச் சேர்க்கலாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.

இவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான வடைகள் தயார்.

தேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.

பீட்ரூட் கீரை மசியல்

 

         

பீட்ரூட் வாங்கி வந்தால் முன்பெல்லாம் அதிலுள்ள இலைகளை மனசே வராமல் (நீளமான, கலர்ஃபுல்லான தண்டுடன் கூடிய இலைகள் அழகாக‌ இருப்பதால்) தூக்கிப்போட்டு விடுவேன்.பிறகு நெட்டில் பார்த்து அதை சாலட்டில் சேர்ப்பதைத் தெரிந்துகொண்டு இப்போதெல்லாம் பருப்பு அல்லது புளி சேர்த்து நம்ம ஊர் ஸ்டைலில் மசியல் செய்துவிடுவேன். நல்ல சுவையாகவும் இருக்கிறது.இதற்கு தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு கீரையை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

தேவையானவை:

பீட்ரூட் கீரை_4 செடிகளின் இலைகள் (நான் செய்தது)
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
புளி_சிறு கோலி அளவு
பூண்டிதழ்_7 எண்ணிக்கை
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு_2
சீரகம்
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்

செய்முறை:

முற்றிய,பூச்சி இலைகளை நீக்கிவிட்டு,மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடியவைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி,புளி,கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.

தாளித்தது,வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

இப்போது சுவையான,சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.

இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.துவையல் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெந்தயக்கீரை மசியல் (புளி சேர்த்து)

வெந்தயக்கீரை மசியல்

கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து செய்யும்போது ஒரு சுவை.அதுபோல் புளி சேர்த்து செய்யும்போது தனிசுவை.இதே செய்முறையில் mustard green னிலும் செய்யலாம்.இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையானவை:

வெந்தயக்கீரை_ஒரு கட்டு
தோல் உளுந்து_ஒரு கைப்பிடி (இட்லிக்குப்போடும் உளுந்து)
சின்ன வெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தக்காளி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
புளி_சிறு கோலி அளவு
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
மிளகு_2
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
பூண்டிதழ்_2

செய்முறை:

கீரையைச் சுத்தம் செய்து,நீரில் அலசி,தண்ணீர் வடிய‌ வைக்கவும்.

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி சூடேறியதும் உளுந்தைப் போட்டு,சிவக்க வறுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்துல் அரை டம்ளர் தண்ணீர் விட்டு,அடுப்பில் ஏற்றவும்.தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள உளுந்தைப் போட்டு வேகவிடவும்.

உளுந்து பாதி வெந்து வரும்போதே அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,பூண்டு,புளி சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீரையைச் சேர்க்கவும்.

கீரை வெந்ததும் இறக்கி,சிறிது உப்பு சேர்த்து,மிக்ஸியில் போட்டு மசிக்கவும்.

தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து,அதனுடன் கடைசியில் பூண்டிதழைத் தட்டிப்போட்டு வதக்கி கீரையில் சேர்த்து ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.

இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெந்தயக்கீரை மசியல் தயார்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 6 Comments »

முருங்கைக்கீரை சாம்பார்

முருங்கைக்கீரை சாம்பாரை நீர்க்க வைத்தால்தான் நன்றாக இருக்கும்.முருங்கைக்கீரையுட‌ன் புளி சேர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சேர்க்க வேண்டாம்.காய்கறிகள் சேர்க்காததால் உப்பு,காரம் இவற்றைக் குறைத்துப் போட வேண்டும்.கீரை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்த்க்கொள்ளலாம்.பெருஞ்சீரகம் முக்கியம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/4 கப்
முருங்கைக்கீரை_ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
பச்சைமிளகாய்_1
பூண்டுப்பல்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்_சிறிது
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.

இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

புளி போட்ட கீரை மசியல்

கீரையில் பருப்பு சேர்த்து செய்வது போல சில கீரைகளில் புளி சேர்த்தும் செய்வார்கள்.

முருங்கைக்கீரை, spinach  போன்ற ஒருசில கீரைகள் தவிர மற்ற கீரைகளில் புளி சேர்த்து செய்யலாம்.சுவையாகவும் இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

கீரை_ஒரு கட்டு
புளி_பெரிய கோலி அளவு
பச்சை மிளகாய்_2
பூண்டு_5 பல்
உப்பு_தேவைக்கேற்ப‌

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
பூண்டு_5 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

செய்முறை:

கீரையின் தண்டுப்பகுதி இல்லாமல் கீரையை மட்டும் ஆய்ந்து,சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து தண்ணீரை வடிய வைக்கவும்.

ஒரு சட்டியில் ஒரு 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கீரை,புளி சேர்த்து வேக வைக்கவும்.

கீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இறுதியில் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கீரையில் கொட்டவும்.

இவை எல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு   pulse  ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.

மிகவும் நைசாக இல்லாமல் சிறிது கரகரப்பாக இருக்கும்போது வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இது சாதத்தில் பிசைந்து ,வற்றலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »