கீரை மசியல் (Watercress)

சைனீஸ் கடைகளில் கிடைக்கும் இந்தக் கீரையில், மற்ற கீரைகளைப் போல  மசியல்,சாம்பார்,பொரியல் எது செய்தாலும் நன்றாகவே உள்ளது.

தேவையானப் பொருள்கள்:

கீரை  ( Watercress) _ ஒரு கட்டு
பச்சைப்பருப்பு (அ) துவரம்பருப்பு _ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
தக்காளி_1/4 பாகம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை:

கீரையை ஆய்ந்து அலசி நீரை வடிய வைக்கவும்.

பச்சைப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில்  எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,துளி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரமே குழைய வெந்துவிடும்.

பருப்பு பாதி வேகும் நிலையில் பச்சை மிளகாய், வெங்காயம்,பூண்டு, தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.எல்லாம் சேர்ந்து வெந்து வரும்போது கீரையைப் போட்டு வேகவைக்கவும்.இப்போது மூட வேண்டாம்.

சிறிது நேரத்திலேயே கீரை வெந்துவிடும்.வெந்ததும் இறக்கி ஆற வைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளப் பொருள்களைத்  தாளித்துக் கீரையில் கொட்டி மேலும் ஒரு சுற்று சுற்றினால் போதும்.

இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான கீரை மசியல் தயார்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

கீரைக் கூட்டு (Bok choy)

தேவையானப் பொருள்கள்:

Bok choy கீரை_2 (தண்டுடன்)
பச்சைப் பயறு (அ) கடலைப் பருப்பு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு

அரைக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து நன்றாகக் கழுவிவிட்டு ஒரு கடாயில் அது வேகும் அளவு தண்ணீ விட்டு சிறிது மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

கீரையைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு உரித்து நறுக்கி வைக்கவும்.காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளாயை முழுதாகப் போட்டு வெந்ததும் தூக்கிப் போட்டு விடலாம்.(காரம் விருப்பமானால் தேங்காய்,சீரகத்துடன் வைத்து அரைத்து சேர்க்கலாம்).

பருப்பு முக்கால் பதம் வேகும்பொதே வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய், கீரை சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி போடாமல் வேகவிடவும்.

எல்லாம் நன்றாக  வெந்ததும் தேங்காய்,சீரகம் அரைத்து சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து கீரையில் கொட்டி மூடவும்.

இதை சாதத்தில் பிசைந்தோ (அ) சாதத்திற்கு தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.

இதனை எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.

கீரை, கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

கீரை மசியல் & கீரை சாதம் (Mustard Green)

தேவையானப் பொருள்கள்:

கீரை_1 கட்டு

சின்ன வெங்காயம்_3

தக்காளி_1/2

பச்சை மிளகாய்_1

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு

உளுந்து

மிளகு_5

சீரகம்_ 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்_2

பூண்டு_5 பற்கள்

பெருங்காயம்_சிறிது

நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்

இதில் நான் பயன்படுத்தியக் கீரை mustard green  .   இந்த முறையில் எல்லாக் கீரைகளையும் செய்யலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ண‌த்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.

கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 2 Comments »

கீரைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கீரை_ஒரு கட்டு
பச்சைப் பருப்பு_ஒரு கைப்பிடி
பூண்டு_5 பற்கள்
சின்ன வெங்காயம்_2
மஞ்சள் தூள்_ஒரு துளி
தேங்காய்ப் பூ _ஒரு டீஸ்பூன்(விருப்பமானால்)
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது

செய்முறை:

முதலில் பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து கழுவி விட்டு,மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்துத் தண்ணீரை வடித்து விடவும்.பருப்பு வெந்துகொண்டிருக்கும் போதே கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்து நறுக்கி வைக்கவும்.வெங்காயம்,பூண்டையும் நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து பூண்டை சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து கீரையை சேர்த்து வதக்கி,பச்சைப் பருப்பு ,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.மூடி போட வேண்டாம்.சிறிது நேரத்திலேயே வெந்து விடும்.கடைசியாக தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.

கீரை, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

கொண்டைக்கடலை,கீரைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கறுப்பு (அ) வெள்ளை கொண்டைக்கடலை_3 கைப்பிடி(ஒரு நபருக்கு ஒரு பிடி)

கீரை_3 கொத்து (mustard green)

(உங்கள் விருப்பம் போல் எந்தக் கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.)

சின்ன வெங்காயம்_3

பூண்டு_5 பற்கள்

மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

சீரகம்

பெருஞ்சீரகம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும்.இப்பொழுது அதை நன்றாகக் கழுவி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்.

வெங்காயம்,பூண்டு இரண்டையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலைத் தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக வதங்கியதும் கடலையைப் போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணிரைத் தெளித்து மூடி மிதமானத் தீயில் வைக்கவும்.கொஞ்ச நேரத்தில் கடலையும் மிளகாய்த்தூளும் நன்றாகக் கலந்திருக்கும்.அப்போது கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

இது எல்லா சாதத்திற்கும் பக்க உணவாகப் பயன்படும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.

கீரை, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

முருங்கைக்கீரை மசியல்

தேவை:
முருங்கைக் கீரை_ 2 கப்
பச்சைப் பருப்பு_ 1/4 கப்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_1/4
பச்சை மிளகாய்_1
பூண்டு_ 2 பற்கள்

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
நல்லெண்ணெய்_ 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீர் விட்டு மலர வேகவைக்கவும்.அது வேகும்போதே சின்ன வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.கடைசியில் கீரை சேர்த்து ஒரு கொதி வந்ததும்  இறக்கவும்.நீண்ட நேரம் கீரை அடுப்பில் இருந்தால் கறுத்து விடும்.அதனால் கசக்கும். கீரை போட்ட பிறகு மூட வேண்டாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கீரையில் கொட்டவும்.நன்றாக ஆறியதும் கடைந்து வைக்கவும்.