நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.
வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.
ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.
மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.
அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.