கொண்டைக்கடலை மசாலா / சன்னா மசாலா _2

 

தேவையானவை:

கொண்டைக்கடலை_3 கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)
சின்ன வெங்காயம்_4
தக்காளி_4
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_2
பச்சைமிளகாய்_1
சன்னாமசாலா தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்
பெருங்காயம்
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
எண்ணெய்

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.மசாலா செய்யப்போகுமுன் கடலையைக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதில் கொஞ்சம் உப்பு போட்டு நன்றாக வேக‌ வைத்து வடித்துக்கொள்ளவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் அதில் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.இது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இவையிரண்டும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.அது வதங்கும்போதே மஞ்சள்தூள்,பெருங்காயம்,சன்னாமசாலா தூள்,கொஞ்சமாக உப்பு (கடலையில் ஏற்கனவே உப்பு உள்ளது) சேர்த்து வதக்கி சிறிது தண்னீர் விட்டு, மூடி, மிதமானத் தீயில் கொஞ்ச நேரம் வேகவிடவும்.

பச்சை வாசனை எல்லாம் போய்,தண்ணீர் வற்றி,மசாலா கடலையுடன் கலந்து கமகம வாசனை  வந்ததும் எலுமிச்சை சாறுவிட்டு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

இது சப்பாத்தி,நாண் முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

கொண்டைக்கடலை,கீரைப் பொரியல்

தேவையானப் பொருள்கள்:

கறுப்பு (அ) வெள்ளை கொண்டைக்கடலை_3 கைப்பிடி(ஒரு நபருக்கு ஒரு பிடி)

கீரை_3 கொத்து (mustard green)

(உங்கள் விருப்பம் போல் எந்தக் கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.)

சின்ன வெங்காயம்_3

பூண்டு_5 பற்கள்

மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

சீரகம்

பெருஞ்சீரகம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும்.இப்பொழுது அதை நன்றாகக் கழுவி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்.

வெங்காயம்,பூண்டு இரண்டையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலைத் தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக வதங்கியதும் கடலையைப் போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணிரைத் தெளித்து மூடி மிதமானத் தீயில் வைக்கவும்.கொஞ்ச நேரத்தில் கடலையும் மிளகாய்த்தூளும் நன்றாகக் கலந்திருக்கும்.அப்போது கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

இது எல்லா சாதத்திற்கும் பக்க உணவாகப் பயன்படும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.

கீரை, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

கொண்டைக்கடலை சாதம்

 

தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி (அ)  பச்சரிசி_2 கப்
கொண்டைக் கடலை_3 கைப்பிடி
பெரிய வெங்காயம்_பாதி
சின்ன வெங்காயம் _5
தக்காளிப் பழம்_1
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
பச்சை மிள்காய்_1
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தயிர்_1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
முந்திரி_5

செய்முறை:

கொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும்.இப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நன்றாக வெந்ததும் நீரை வடித்து விடவும். அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற‌ வைக்கவும்.சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கவும்.இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து வதக்கி வெங்காயம்,தக்காளி அரைத்ததை ஊற்றி நன்றாக வதக்கவும்.அத்துடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.(ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும்.இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள தயிர்,வெஙகாயப் பச்சடி பொருத்தமாக இருக்கும்.

 

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

கொண்டைக்கடலை சுண்டல்

 

தேவை:

கொண்டைக்கடலை_1 கப்
உப்பு_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சுண்டலில் கலந்து சாப்பிட சுவை கூடும்.

கொண்டைக் கடலை குழம்பு

 

தேவையான பொருள்கள்:
கொண்டைக் கடலை_ 1 கப்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_10 பற்கள்
புளி_எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்_ 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
வடகம்_சிறிது
சீரகம்_ 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_ 3 டீஸ்பூன்

செய்முறை:

முதல் நாள் ஊற வைத்த கொண்டைக் கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.புளியை 1 கப் தண்ணீரில்  ஊறவைத்து மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வடகம், சீரகம்,கடலைப் பருப்பு,காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து கரையும் வை வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு  சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் கடலையைப் போட்டு மூடி நன்றாகக் கொதிக்க விடவும்.எண்ணெய் மேலாக பிரிந்து வந்த பிறகு இறக்கவும்.இக் குழம்பை சாதத்துடன் அப்பளம்(அ) வடாம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

சிறிது சுக்கை வறுத்து பொடித்து இறக்குவதற்கு முன் போட்டு இறக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.