அச்சு முறுக்கு / கொத்து முறுக்கு

20160714_170243_Fotor

போன தடவை கடையில் வாங்கிய மாவில் செய்தேன். ஓரளவுக்குப் பரவாயில்லை எனும்படி வந்தது. இந்த முறை பச்சரிசி அரைத்து செய்தேன். முன்புக்கு இப்போது நல்ல முன்னேற்றம் 🙂 ஒருவேளை முட்டை சேர்த்ததாலோ !

சாதாரண முறுக்கு என்றால்கூட அடிக்கடி அச்சைக் கழட்டி மாவு வைத்து மூடி, அழுத்திப் பிழிந்து கைவலியிருந்து முதுகு வலிவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடும். இதில் முறுக்கு அச்சிலிருந்து எளிதாக கழண்டுகொண்டால் இதுமாதிரி ஈஸி எதுவுமில்லை.

20160714_164517_Fotor

என்ணெயும் வாணல் நிறைய ஊற்றி சுடுபவர்களுக்கு வேலை கடகடவென முடிந்துவிடும். ஒரு முறுக்கு மட்டுமே வேகும் அளவுக்கு எண்ணெய் பயன்படுத்தும் என்னை மாதிரியான ஆட்களுக்கு சிறிது நேரம் எடுக்கும்.

முதலில் மைதா சேர்க்காமல்தான் முயற்சித்தேன். ஆனால் முதல் இரண்டு முறுக்குகளும் அச்சிலேயே பிடித்துக்கொண்டு, அதைப் பிரித்து எடுக்கவே பெரும்பாடாகிவிட்டது.

மாவைக் கொட்டிவிடலாம் என நினைத்து செயல்படுத்துமுன், எதற்கும் சிறிது மைதாவை சேர்த்து செய்து பார்ப்போமே என செய்தபோது …. அழகழகாக, அதிக வேலை வாங்காமல் சமர்த்தாக வந்துவிட்டது 🙂

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
தேங்காய்பால் _ 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)
மைதா _ ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை _ 1
சர்க்கரை _ தேவைக்கு
எள் _ சிறிது
உப்பு _ சிறுது
எண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை ஊற வைக்கவும்.

கால் மூடி தேங்காயின் பால் பிழிந்துகொள்ளவும்.

மற்ற சாமான்களையும் தயாராக‌ வைக்கவும்.

அரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய்பால் சேர்த்து மைய அரைக்கவும்.

கடைசியாக முட்டையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

பிறகு மைதா,  எள்  &  உப்பு சேர்த்து கரைத்து சுவை சரி பார்த்து,  அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு அது சூடேறும்வரை வைக்கவும்.

அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.

சலசலப்பு அடங்கியதும் அச்சில் பிடித்துக்கொண்டிருக்கும் முறுக்கை கம்பியால் பிரித்துவிடவும். இதற்கு நான் சைனீஸ் மார்க்கெட்டில் வாங்கின Chopsticksஐப் பயன்படுத்துவேன்.

பிரித்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும். இப்படியே மேவு முழுவதையும் செய்து முடிக்கவும்.

20160714_170012_Fotor
இப்போது அழகழகான முறுக்குகள் தயார்.

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »