கருவாடு & சர்க்கரை வள்ளிக்கிழங்கு குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கருவாடு_சுமார் 10 எண்ணிக்கையில் (காரை,நீர்சுதும்பு,சென்னாவரை,சங்கரா,பாறை போன்றவை நன்றாக இருக்கும்)
வள்ளிக்கிழங்கு_2
புளி_பெரிய நெல்லிக் காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
முழு பூண்டு_1
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.

கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வைக்கவும்.

சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வைக்கவும்.தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

வள்ளிக்கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளலாம்.முதலிலேயே நறுக்கிவிட்டால் நிறம் மாறிவிடும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி,எண்ணெய் ஊற்றி சூடாகியதும் முதலில் வடகம்,அடுத்து வெந்தயம்,கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி வதக்கி, அடுத்து கருவாடு சேர்த்து வதக்கி,அடுத்து மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.பிறகு மூடி போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கிழங்கை நறுக்கி குழம்பில் போட்டு கிளறி விட்டு மூடி கொதிக்க விடவும்.நன்றாகக் கொதித்து கிழங்கு வெந்த‌ பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதில் காய் வெந்து ,குழைந்துவிடும் என்ற பிரச்சினை இல்லை.எவ்வளவு வெந்தாலும் நன்றாகவே இருக்கும்.

பிறகென்ன; சூடான சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியதுதான்.குழம்பு ஆறியபிறகுதான் இன்னும் சுவையாக இருக்கும்.அடுத்த நாள்தான் அதற்கு மேலும் சுவையாக இருக்கும்.

மேலும் இக்குழம்பு இட்லி,தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

கத்தரிக்காய் புளிக்குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கத்தரிக்காய்_7 லிருந்து 10 க்குள்
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி,உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

கொதி வருவதற்கிடையில் கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

கொதி வந்ததும் கத்தரிக்காயை குழம்பில் சேர்த்துக் கலக்கி விட்டு மீண்டும் மூடி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து,வாசனை வந்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கியும் குழம்பு செய்யலாம்.

சுக்கு குழம்பு

சுக்கு,இஞ்சி,வெந்தய,சீரகக் குழம்பு போன்றவற்றிற்கு காய்கறி சேர்த்து வைக்கவேண்டாம்.என் அம்மா செய்யும்போது வெங்காயம்,தக்காளிகூட சேர்க்கமாட்டார்.அவ்வாறு செய்தால்தான் ஒவ்வொன்றின் வாசனையும்,சுவையும் கூடுதலாகத் தெரியும்.

தேவையானப் பொருள்கள்:

சுக்கு_ஒரு பெரிய துண்டு
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_பாதி
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய் _2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்கவும்.பூண்டை உரித்து வைக்கவும்.

சுக்கை நன்றாகப் பொடித்து வைக்கவும்.

குழம்பு சட்டியில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,தக்காளி,பூண்டு அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு புளிக்கரைசல்,உப்பு சேர்த்துக் கிண்டிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி,மிதமானத் தீயில் கொதிக்கவிடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது சுக்குப்பொடியை சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.முக்கியமாக பழைய சாதத்திற்கு அருமையாக இருக்கும்.

மாம்பருப்பு குழம்பு

கிராமங்களில் நல்ல முற்றிய குண்டு மாங்காவில் மாங்காய் வத்தல் என்று போடுவார்கள்.அது நன்றாகக் காய்ந்த பிறகு அந்த வற்றல் மாங்காயின் கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இது உடலுக்கு நல்லது.அந்த பருப்பை வைத்து குழம்பும் செய்வார்கள்.அதன் சுவையே தனிதான். வயிற்றுப்போக்கு என்றால் இந்தக் குழம்புதான் செய்து கொடுப்பார்கள்.

இந்தக் குழம்பு சாதாரண புளிக்குழம்பு போலவேதான்.ஆனால் காய்கறிகள் சேர்க்கமாட்டார்கள்.மேலும் தாளிக்கும்போதுகூட கடுகு மட்டுமே தாளிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பருப்பின் சுவை நன்றாகத் தெரியும்.

இரண்டு,மூன்று பேருக்கான குழம்பு என்றால் ஒரு பருப்பு போதும்.அதற்கு மேல் என்றால் பருப்பை கூட்டிக்கொள்ளவும்.

தேவையானப் பொருள்கள்:

மாங்கொட்டை_1
புளி_பெரிய கோலி அளவு
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மாங்கொட்டையை உடைத்து அதன் பருப்பை எடுத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.சட்னி அளவிற்கு கெட்டியாக இருந்தால் போதும்.

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

ஊறியதும் தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொண்டு அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு குழம்பு கலவையைத் தயார் செய்துகொள்ளவும்.

அடுப்பில் மண்சட்டி அல்லது குழம்பு பாத்திரத்தை ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு குழம்பு கலவையை ஊற்றி மூடி கொதிக்க வைக்கவும்.

நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அரைத்து வைத்துள்ள   மாங்கொட்டையின் பருப்பை ஊற்றி கலக்கிவிட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.

மீல்மேக்கர் (அ) சோயா வடை குழம்பு

மீல்மேக்கரை தனியாகவோ அல்லது விருப்பமான மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.

தேவையானப் பொருள்கள்:

மீல்மேக்கர்_25 (எண்ணிக்கையில்)
உருளைக்கிழங்கு_2
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
பட்டை_சிறு துண்டு
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்_கொஞ்சம்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
கசகசா_ஒரு டீஸ்பூன்
சீரகம்_சிறிது
தேங்காய்_3 துண்டுகள்

செய்முறை:

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.

தேவையான மீல்மேக்கரை ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு வெந்நீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் நீரை வடித்துவிடவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கேரட்டை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.உருளைக்கிழங்கை நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

வெறும் வாணலியில் கசகசா,கொத்துமல்லி விதை, சீரகம் இவற்றை தனித்தனியாக லேசாக வறுத்து ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.கொத்துமல்லி விதை சேர்க்க வேண்டுமென்பதில்லை. வறுத்து சேர்க்கும்போது நல்ல வாசனையாக இருக்கும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பட்டாணி,கேரட்,மீல்மேக்கர் இவற்றை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு  இரண்டு டம்ளர் தண்ணீர்  ஊற்றி (அதாவது காய்கள் மூழ்கும் அளவு)   மூடி வேக வைக்கவும்.

குழம்பு பாதி கொதித்த நிலையில் உருளைக்கிழங்கைப்போட்டுக் கிளறிவிட்டு மூடி வேக வைக்கவும்.முதலிலேயே மற்ற காய்களுடன் சேர்த்தால் குழைந்துவிடும்.

எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையை குழம்பில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

சிறிது கொதித்த  பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி,நாண், இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

 

பெரும்பயறு குழம்பு (Black eye beans)

தேவையானப் பொருள்கள்:

பெரும்பயறு_3 கைப்பிடி
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
முழு பூண்டு_1
தக்காளி_பாதி
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2  டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1/2 டீஸ்பூன்
மிளகு_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_சுமார் 10 எண்ணிக்கை

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
வடகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் பயறு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.ஊற வைக்கவெல்லாம் வேண்டாம். வெந்ததும் நீரை வடித்துவிடவும்.

புளி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் பொடித்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

இக்குழம்பையும் மண் சட்டியில் செய்தால்தான் சுவையாக இருக்கும்.

சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி வதக்கி,அதன் பிறகு வெந்த பயறு சேர்த்து வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு  சேர்த்து வதக்கவும்.பிறகு புளித்தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்து,வாசனை வந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

இக் குழம்பில் கத்தரிக்காய் (அ) முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம்.குழம்பு ஒரு கொதி வந்ததும் காய் சேர்க்கலாம். அல்லது வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு காய் சேர்த்து வதக்கி செய்யலாம்.

கருனைக்கிழங்கு புளிக் குழம்பு

தேவையானப் பொருள்கள்:

கருனைக் கிழங்கு_1
புளி_ஒரு சிறு எலுமிச்சை அளவிற்கு
சின்ன வெங்காயம்_5
பூண்டு_5 லிருந்து 10 பற்கள்
தக்காளி_பாதி
மஞ்சள் தூள்_ 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம்_கொஞ்சம்
சீரகம்_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு 5 இலைகள்

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி ஊற வை.கருனைக் கிழங்கை வட்ட வடிவமாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அதில் சிறு கோலி அளவு புளி போட்டு வேக வை.கரகரப்பு இல்லாமல் இருக்கும்.அது வெந்த பிறகு எடுத்து தோலை உரித்து வை.வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வை.

ஒரு மண் சட்டியை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்து.அதில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கு.அடுத்து பூண்டு,தக்காளி இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கு.அது வதங்கியதும் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து ஊற்று.தேவையான அளவிற்கு குழம்பைக் கூட்டி உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க வை.ஒரு கொதி வந்ததும் திறந்து கிழங்கை சேர்த்து மூடி மிதமானத் தீயில் கொதிக்க விடு.நன்றாகக் கொதித்து (சுமார் 20 நிமி) வாசனை வந்த பிறகு  இறக்கு .

இக் குழம்பு சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

வெறும் சட்டியில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கொத்துமல்லி விதை,1/2 டீஸ்பூன் சீரகம்,1/4 டீஸ்பூன் வெந்தயம் இவற்றை வறுத்துப் பொடித்து இற்க்குவதற்கு முன் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கினால் சுவையாக மட்டுமல்லாமல் வாசனையாகவும் இருக்கும்.

கொண்டைக் கடலை குழம்பு

 

தேவையான பொருள்கள்:
கொண்டைக் கடலை_ 1 கப்
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_10 பற்கள்
புளி_எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்_ 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
வடகம்_சிறிது
சீரகம்_ 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்
வெந்தயம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_ 3 டீஸ்பூன்

செய்முறை:

முதல் நாள் ஊற வைத்த கொண்டைக் கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.புளியை 1 கப் தண்ணீரில்  ஊறவைத்து மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வடகம், சீரகம்,கடலைப் பருப்பு,காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து கரையும் வை வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு  சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் கடலையைப் போட்டு மூடி நன்றாகக் கொதிக்க விடவும்.எண்ணெய் மேலாக பிரிந்து வந்த பிறகு இறக்கவும்.இக் குழம்பை சாதத்துடன் அப்பளம்(அ) வடாம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

சிறிது சுக்கை வறுத்து பொடித்து இறக்குவதற்கு முன் போட்டு இறக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.