மண‌த்தக்காளி கீரை மசியல்

20150825_163709

இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். அதனால் தூக்கிப் போட்டுவிட வேண்டாம். வாய்ப்புண் என்றால் சாறு வாய் முழுவதும் படுமாறு இதை நன்றாக மென்று விழுங்கினால் போதும் சரியாகிவிடும். வயிற்றுப் புண்ணுக்கும் அப்படியே. உடலுக்கும் குளிர்ச்சியானது.

கசக்கும் என்பவர்கள் ஒரு துளிர் கீரையைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, சமைத்து சாப்பிடும் முன் எடுத்து வைத்த அந்தக் கீரையை மரமரனு மென்று விழுங்கிவிட்டு கடைந்த கீரையை சாப்பிட்டுப் பாருங்க, பருப்புடன் கீரை, சின்ன வெங்காயம், வதக்கிய பூண்டு, எல்லாமும் சேர்ந்து சூப்பரா இருக்கும், கசப்பே தெரியாது.

அளவுகள் தோராயமாக உள்ளன. உங்களின் சுவைக்கேற்ப சேர்ப்பவற்றில் மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள். காரம் அதிகம் என நினைத்தால் தாளிக்கும்போது சேர்க்கும் காய்ந்த மிளகாயே போதும்.

வேண்டியவை:

மணத்தக்காளி கீரை _ ஒரு சிறு கட்டு

உடைத்த பச்சைப் பருப்பு _ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு

பச்சை மிளகாய் _ 1

பூண்டுப்பல் _ ஆறேழு (பாதியை கீரையுடன் சேர்த்து வேகவைக்கவும், மீதியை தாளிக்கும்போது வதக்கி சேர்க்கவும்)

சின்னவெங்காயம் _ 2

தக்காளி _ பாதி

உப்பு _ தேவைக்கு

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை:

பச்சைப்பருப்பை அடிகனமான ஒரு சட்டியில் எடுத்து கழுவிட்டு அது வேகுமளவு தண்ணீர் ஊற்றி துளி மஞ்சள்தூள், பெருங்காயம், ஓரிரு சொட்டுகள் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வேக விடவும்.

20150823_164903

கீரையை ஆய்ந்துகொண்டு கழுவிவிட்டு நீரை வடிய‌விடவும். ஏனோ கீரையை நறுக்கப் பிடிப்பதில்லை.

பருப்பு பாதி வெந்து வரும்போது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, பாதி பூண்டு சேர்த்து வேகவிடவும்.

இவையெல்லாம் போட்டு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையைப் போட்டு துளி உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்க்வும். மூடினால் கீரையின் அழகான பச்சை நிறம் காணாமல் போய்விடும்.

இடையில் ஓரிரு முறை கிண்டி விடவும். இல்லையென்றால் அடியில் உள்ள கீரை குழைந்தும், மேலே உள்ளது வேகாமலும் இருக்கும்.

கீரை வெந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். ஒரு கரண்டியில் சிறிது கீரையை எடுத்து கையால் நசுக்கிப் பார்த்தால் வெந்துதா அல்லது வேக‌லையான்னு தெரிந்துவிடும்.

மண் சட்டியில் என்றால் சூடாகவே கடைந்துவிடலாம். மிக்ஸி என்றால் கீரை ஆறியதும் அதில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

பிறகு தாளிப்பதைத் தாளித்து கடைசியில் பூண்டுப்பல்லை கொஞ்சம் பொடியாகத் தட்டிப் போட்டு வதக்கிக் கொட்டி மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள உருளை அல்லது வாழைக்காய் அல்லது சேப்பங்கிழங்கு போன்றவற்றுடன் அப்பளம் அல்லது வத்தல் பொரித்து சாப்பிட …. ஆ…..ஹா… தான் 🙂

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 7 Comments »