மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

கார மாங்காய் / kaara maangai

mango kaara mango

நம்ம ஊர்ல இப்போது ஒட்டு மாங்காய் பிஞ்சுகள் நிறைய கிடைக்கும். அவற்றை அப்படியே சாப்பிட சிறிது துவர்ப்புடன் சூப்பரா இருக்கும்.அதையே நீளவாக்கில் துண்டுகள் போட்டு கொஞ்சம் காரம் சேர்த்து சாப்பிட இன்னும் சூப்பரா இருக்கும்.

இங்கே அவை கிடைக்காது என்பதால் ஒரு பெரிய மாங்காவை வைத்து செய்திருக்கிறேன்.செய்துபார்த்து நன்றாக இருந்தால் ஒரு பை நிறைய ஒட்டு மாங்காய் பிஞ்சுகளை வாங்கி என்னுடைய ப்ளாக் அட்ரஸுக்கு அனுப்பி வையுங்க. நினைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது.

தேவையானவை:

மாங்காய்_1
உப்பு_சிறிது

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
தனி மிளகாய்த்தூள்_ஒன்றிரண்டு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்_துளிக்கும் குறைவாக‌
வறுத்த வெந்தயப்பொடி_துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

மாங்காயைக் கழுவித் துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ள‌வும்.மாம்பிஞ்சாக இருந்தால் மெல்லிய துண்டுகளாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு,அந்த சூட்டிலேயே மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,வெந்தயப்பொடி,உப்பு சேர்த்து ஒரு கிளறுகிளறி மாங்காய்த் துண்டுகளையும் சேர்த்துக் கிண்டிவிட்டு சூடாகவோ அல்லது ஆறவைத்தோ கண்ணாடி பாட்டிலில் எல்லாம் எடுத்து வைக்க சொல்லமாட்டேன்,அதில் ஒரு டூத்பிக் வைத்துக் கொடுத்துவிட்டால் போதும்,உடனே காலிபண்ணி விடுவார்கள்.

வேண்டுமானால் நிறைய செய்து வைத்துக்கொண்டு சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 9 Comments »

மாங்காய் ஊறுகாய் / Dry mango pickle

இது கிராமங்களில் போடும் ஊறுகாயாகும்.இதற்கு நல்ல முற்றிய மாங்காயாக இருந்தால் நல்லது.ஏனெனில் பருப்பின் துவர்ப்பு குறைவாக இருக்கும்.100,200 என (எண்ணிக்கையில்) போடுவாங்க.இவ்வாறு போட்டு வைத்துக்கொண்டால் யார் வீட்டிலாவது உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது மசக்கை சமயத்திலோ வந்து கேட்டு வாங்கிச்செல்வார்கள்.

சதைப்பகுதி மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள பருப்பு மிகவும் நல்லது. அதைப் பயன்படுத்தி வயிற்றுவலி,வயிற்றுப்போக்கு என்றால்  குழம்பு செய்வாங்க.இந்த பருப்பு மாதவிடாய் பிரச்சினைக்கும் நல்லதுனு சொல்லுவாங்க. பருப்பை அப்படியேகூட சாப்பிடலாம்.இள மாங்காயின் பருப்பாக இருந்தால் துவர்ப்பு அதிகமாக இருக்கும்.முற்றிய மாங்காயெனில் மாவு மாதிரி,சுவையாக‌ இருக்கும்.

என்னிடம் ஊறுகாயின் படங்கள் இல்லை.இங்கே (வெளிநாட்டில்) இந்த ஊறுகாயைப் போடவும் முடியாது. வெயிலும்  பிரச்சினை.மாங்காயும் பழ மாங்காய் போலத்தான் இருக்கும்.ஊருக்குப் போனால்தான் எடுத்துவர வேண்டும்.எங்கம்மா ஊறுகாய் போடும் முறையைக் கீழே கொடுத்துள்ளேன்.

தேவையானவை:

மாங்காய்
உப்பு

செய்முறை:

படத்திலுள்ளதுபோல் எல்லா மாங்காய்களையும் இரண்டு பக்கமும் கீறி வைக்கவும.

பிறகு கீறிய பகுதி நிறைய உப்பை வைத்து அடைத்து வைக்கவும்.இதற்கு உப்பு நிறைய தேவைப்படும். இவ்வாறே எல்லா மாங்காய்களையும் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடவும்.

மூன்றாவது நாள் நல்ல வெயில் விழும் இடத்தில் ஒரு பெரிய தட்டில் ஒவ்வொரு  மாங்காயாக எடுத்து அடுக்கி வைக்கவும்.

இப்போது மாங்காயின் பச்சை நிறம் மாறி மஞ்சள்,ப்ரௌன்,அடுத்து கருப்பு என மாறும்.

பாத்திரத்தில் உப்புநீர் நிறைய இருக்கும்.அதை அப்படியே வெயிலிலேயே வைக்கவும்.

மாலையானதும் மாங்காய்களை மீண்டும் அந்த உப்புநீர் உள்ள பாத்திரத்திலேயே எடுத்து வைத்து மூட‌வும்.

அடுத்த நாளும் இப்படியே அதாவது பாத்திரத்திலுள்ள நீர் முழுவதும் வற்றி, மாங்காயும் நீர் இல்லாமல் வற்றிக் காயும்வரை இதை செய்ய வேண்டும்.

இதற்கு சில வாரங்கள் ஆகலாம்.அதன்பிறகு ஊறுகாயிலுள்ள சதைப் பகுதியை தயிர்சாதம்,கஞ்சி போன்றவற்றிற்கும்,கொட்டையின் உள்ளேயுள்ள பருப்பைக் குழம்பிற்கும் பயன்படுத்தலாம்.

இதில் உப்பு நிறைய சேர்த்து செய்வதால் வருடங்களானாலும் கெட்டுப்போகாது. நன்றாகக் காய்ந்த,சுத்தமான  கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.