புளி போட்ட கீரை மசியல்

கீரையில் பருப்பு சேர்த்து செய்வது போல சில கீரைகளில் புளி சேர்த்தும் செய்வார்கள்.

முருங்கைக்கீரை, spinach  போன்ற ஒருசில கீரைகள் தவிர மற்ற கீரைகளில் புளி சேர்த்து செய்யலாம்.சுவையாகவும் இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

கீரை_ஒரு கட்டு
புளி_பெரிய கோலி அளவு
பச்சை மிளகாய்_2
பூண்டு_5 பல்
உப்பு_தேவைக்கேற்ப‌

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
பூண்டு_5 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

செய்முறை:

கீரையின் தண்டுப்பகுதி இல்லாமல் கீரையை மட்டும் ஆய்ந்து,சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து தண்ணீரை வடிய வைக்கவும்.

ஒரு சட்டியில் ஒரு 1/2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கீரை,புளி சேர்த்து வேக வைக்கவும்.

கீரை நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இறுதியில் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி கீரையில் கொட்டவும்.

இவை எல்லாம் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு   pulse  ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் மசிந்துவிடும்.

மிகவும் நைசாக இல்லாமல் சிறிது கரகரப்பாக இருக்கும்போது வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இது சாதத்தில் பிசைந்து ,வற்றலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

புளிச்சக் கீரைத் துவையல் (அ) மசியல் & சாதம்

தேவையானவை:

புளிச்சக் கீரை_1 சிறிய கட்டு
பூண்டு_10‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ லிருந்து 15 பற்கள்

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_4‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
மிளகு_2
சீரகம்_1 டீஸ்பூன்
வெந்தயம்_1 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
பெருங்காயம்

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டியதைத் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.தீ மிதமாக இருக்கட்டும்.இல்லையென்றால் தீய்ந்து விடும்.மிளகாய் கருகாமல்,நிறம் மாறாமல் இருக்கட்டும்.இவை ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சன்னமாகப் பொடித்துக்கொள்ளவும்.

அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.சூடேறியதும் தாளிக்ககொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.அது நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.கடைசியாக பொடித்தப் பொடியைச் சேர்த்து ,தேவையான உப்பும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இதையே புளிச்ச கீரை சாதமாக செய்வதென்றால் இரண்டு கப் அரிசியை வேக வைத்து வடித்து ஆற வைக்கவும்.சாதம் நன்றாக வெந்து அதே சமயம் உதிருதிராக இருக்கட்டும்.
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி சிறிது பெருங்காயத்தைத் தாளித்து இரண்டுப் பூண்டுப் பற்களை நசிக்கிப் போட்டு வதக்கி கீரை மசியலை அதில் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.அதே சூட்டிலேயே ஆறிய சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.இந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.
இரவில் மீதமான சாதத்தில் செய்து வைத்தால் காலையில் அருமையாக இருக்கும்.

கீரை மசியல் & கீரை சாதம் (Mustard Green)

தேவையானப் பொருள்கள்:

கீரை_1 கட்டு

சின்ன வெங்காயம்_3

தக்காளி_1/2

பச்சை மிளகாய்_1

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு

உளுந்து

மிளகு_5

சீரகம்_ 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்_2

பூண்டு_5 பற்கள்

பெருங்காயம்_சிறிது

நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்

இதில் நான் பயன்படுத்தியக் கீரை mustard green  .   இந்த முறையில் எல்லாக் கீரைகளையும் செய்யலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ண‌த்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.

கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 2 Comments »

கத்தரிக்காய் மசியல்

தேவையானப் பொருள்கள்:

பச்சைப்பருப்பு_1/2 கைப்பிடி
கத்தரிக்காய்_4 (சிறியது)
பச்சை மிளகாய்_2
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_ஒரு பின்ச்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்துப் போதுமானத் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு பாதி வேகும் போதே அதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய்,வெங்காயம் 2,தக்காளி,பூண்டு சேர்த்து வேக விடவும்.எல்லாம் நன்றாக வெந்த பிறகு இறக்கி ஆற வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் உப்பு போட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டிக் கலக்கவும்.

இது இட்லி,தோசை ஆகிய‌வற்றிற்கு சூப்பர் காம்பினேஷன்.

பச்சைப் பருப்பிற்கு பதில் துவரம் பருப்பைக்கூடப் பயன்படுத்தலாம்.