எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.
சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.
தேவையானவை:
முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)
பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.
நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு
தாளிப்புக்கு :
நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
செய்முறை :
கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.
ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.
அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.