கேழ்வரகு & வெந்தயக்கீரை பகோடா / Kezhvaragu & Vendhaya keerai pakoda

raagi pakoda

நான் கேழ்வரகு மாவுடன் வெந்தயக்கீரை சேர்த்து செய்துள்ளேன்.வெந்தயக்கீரைக்குப் பதிலாக முருங்கைக்கீரை சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_ஒரு கப்
வெந்தயக்கீரை_ஒரு கப்
பெரிய‌ சின்ன வெங்காயம்_1 (சாதாரண சின்ன வெங்காயம் என்றால் 5 லிருந்து 10 க்குள்)
இஞ்சி_சிறு துண்டு
பச்சைமிளகாய்_1
பெருஞ்சீரகம்_சிறிது
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள‌ பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே.

methi leaves

வெந்தயக்கீரையை ஆய்ந்து,தண்ணீரில் அலசி எடுத்து நீரை வடிக்கவும். கீரையை நறுக்காமல் முழுதாகவே போட்டுக்கொள்வோம். நறுக்கினால் கசப்பு அதிகமாகிவிடும்.

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை&கொத்து மல்லி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மாவு முதற்கொண்டு எல்லாவற்றையும் போட்டு,கைகளால் கிளறிவிட்டு,சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.கிள்ளி எடுத்து போடும் பதமாக இருக்கட்டும்.

raagi pakoda

ஒரு வாணலில் திட்டமாக எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,மாவைக் கிள்ளினாற்போல் எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு தரம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேரத்துக்கு கொறிக்க சுவையான,மொறுமொறு கேழ்வரகு பகோடா ரெடி.

அடுத்த நாளும் அந்த மொறுமொறு குறையவேயில்லை.துளி எண்ணெய்கூட குடிக்கவில்லை.

வெங்காய பகோடா

 

வெங்காய பகோடாவை சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் நைஸாக மாவும் வெங்காயமும் சேர்ந்தார்போல் வரும். சேர்ந்தார்போல் வேகும்.

பெரிய வெங்காயத்தில் செய்யும்போது  இரண்டுமே கொஞ்சம் பிரிந்து தனித்தனியாக வரும்.அதுவுமில்லாமல் மாவு வெந்து  வெங்காயம் வேகாமல் இருக்கும்.

இங்கு சமயங்களில் சின்ன வெங்காயமே பெரிய வெங்காயம் சைஸில் கிடைக்கும்.விலைதான் கட்டுப்படியாகாது.

 

 

தேவையானவை:

சின்ன வெங்காயம்_3
கடலை மாவு_ஒரு கப்
அரிசி மாவு_ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறு துண்டு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்க‌

செய்முறை:

வெங்காயம்,ப.மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீளவாக்கில் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து லேஸாக பிசறினாற்போல் வைக்கவும்.

கடலை மாவு,அரிசி மாவு,சமையல் சோடா,சிறிது உப்பு இவற்றை இரண்டு முறை சலித்து வைக்கவும்.இதில் பெருங்காயம் சேர்க்கவும்.

ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் காயவைத்து மாவில் ஊற்றி மாவு முழுவதும் படுமாறு கிளறவும்.

பிறகு மாவைக் கொஞ்சம்கொஞ்சமாக வெங்காயக்கலவையில் தூவினாற்போல் போட்டு அழுத்தி பிசையாமல் பக்குவமாகப் பிசையவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றவும்.அது காய்வதற்குள் மாவை உதிர்த்தாற்போல் செய்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் மாவைக் கிள்ளி எடுக்காமல்,அழுத்தாமல் அப்படியே உதிரியாக எடுத்துப் போடவும்.

ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் திருப்பிவிட்டு அடுத்த பக்கமும் லேசாக சிவக்கும்போதே எடுத்துவிடும்.ரொம்ப சிவந்தால் சுவையில் கசப்பு தெரியும்.

இறுதியாக கொஞ்சம் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.

இப்போது கமகம,கரகர,மொறுமொறு பகோடா கொறிக்கத் தயார்.

 

 

அப்படியேவோ அல்லது கெட்சப்புடனோ அல்லது தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.

பகோடா டிபன்,சாதம் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

முந்திரி & வேர்க்கடலை பகோடா

தேவையானப் பொருள்கள்:

முந்திரி_1/2 கப்
வேர்க்கடலை_1/2 கப்
கடலை மாவு_3 டீஸ்பூன்
அரிசிமாவு_ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
இஞ்சி_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.தோலை நீக்க  வேண்டாம்.

அடுத்து சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

ஆறியதும் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,பெருங்காயம்,உப்பு,இஞ்சி (பொடியாக நறுக்கி),கறிவேப்பிலை (கிள்ளிப்போட்டு) இவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

இக்கலவையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை முந்திரி,வேர்க்கடலை இவற்றில் சேர்த்து குலுக்கிவிட்டு,ஒரு 5 நிமி அப்படியே வைக்கவும்.

அடுத்து அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிடவும். மீண்டும் ஒரு 5 நிமி வைக்கவும்.

அடுத்து மீதமுள்ள கலவையை சேர்த்து மீண்டும் ஸ்பூனால் கலக்கி விடவும்.

இப்போது முந்திரி,வேர்க்கடலை இரண்டுக்கும்   coating  கொடுத்தமாதிரி இருக்கும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொன்றாக எண்ணெய் கொண்டமட்டும் போட்டு பொரித்தெடுக்கவும்.

நல்ல மொறுமொறுப்பான,சத்தான‌ மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.

இதனை தனி வேர்க்கடலையிலோ அல்லது தனி முந்திரி பருப்பிலோ கூட செய்யலாம்.