பலாக்கொட்டைப் பொரியல்

 

பலாப்பழம் வாங்கும்போது ஒரு சிறு கீற்றுதான் வாங்குவோம்.நிறைய வாங்க ஆசைதான்.அதன் விலையைப் பார்த்து பயந்து சுமார் 10 சுளைகள் உள்ளதாக வாங்கி வருவோம்.இந்த முறை துணிந்து (எத்தனை நாளைக்குத்தான் மான் தண்ணீர் குடிப்பது மாதிரியே நடிப்பது?) வாங்கியதில் 20 சுளைகளுக்கும் அதிகமாக இருந்தது.பழத்தை சாப்பிட்டுவிட்டு அதிலுள்ள கொட்டைகளை  பத்திரமாக எடுத்துவைத்து பொரியல் செய்துவிட்டேன்.நிறைய வாங்கியிருந்தால் இதை வைத்து கூட்டு, குருமா,சாம்பார் முதலியவை செய்திருக்க‌லாம்.

எங்க ஊர் பலாப்பழத்தைப் பார்க்க இங்கே வரவும்.பலாக்கொட்டை சாம்பாருக்கு இங்கே வரவும்.

தேவையானவை:

பலாக்கொட்டை_சுமார் 20 (எண்ணிக்கையில்)
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பலாக்கொட்டையை சமைக்குமுன் மேலேயுள்ள ஷெல் போன்ற பகுதியை எடுத்துவிட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.இது ப்ரௌன் நிறத்தினாலான  மற்றொரு தோலை எடுப்பதற்கு.

ஊறியதும் அதன் தோலை கட்டைவிரல் நகத்தால் உரித்தோ அல்லது சுரண்டியோ எடுத்துவிடவும்.சில மென்மையான பகுதிகளில் தோல் எடுக்க வராது.அதை விட்டுவிடலாம்.

பிறகு விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.அல்லது முழு அளவிலேயே போட்டுக்கொள்ளலாம்.பார்க்க சிறுசிறு முட்டைகள் போல் இருக்கும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பலாக்கொட்டைகளைப் போட்டு ஒரு கிளறி கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துப் பிரட்டிவிட்டு பலாக்கொட்டை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.

அது நன்றாக வெந்து வரும்வரை இடையிடையே கிண்டிவிடவும்.தண்ணீர் வற்றி,நன்றாக வெந்ததும் இறக்கவும்.இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கலாம்.

பலாக்கொட்டை சாம்பார்

பலாக்கொட்டைகளை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால்தான் அதன் சுவை தெரியும்.அல்லது சாம்பார்,பொரியல்,குருமா போன்றும் செய்யலாம்.

பலாக்கொட்டையைத் தனியாகவோ அல்லது கத்தரிக்காய், மாங்காய், கேரட், முருங்கைக்காய் போன்ற காய்களில் ஒன்றுடனோ அல்லது எல்லா காய்களையும் சேர்த்தோ சாம்பார் வைக்கலாம்.நல்ல சுவையாக் இருக்கும்.

தேவையானப் பொருள்கள்:

துவரம் பருப்பு_1/2 கப்
பலாக்கொட்டை_12  எண்ணிக்கையில் (நாங்கள் வாங்கி வந்த பழத்தில் இருந்தது அவ்வளவுதான்)
மாங்காய்_1
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
புளி_கோலி அளவு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_2 டீஸ்பூன்
வடகம் (அ)கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு , பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்துவிட்டு நீரில் போட்டு ஊற வைக்கவும்.தோல் எடுக்கும்போது கவனமாக எடுக்கவும்.இல்லையென்றால் நகக்கண்ணில் பட்டுவிடும்.

ஒரு 10 நிமி ஊறினால் போதும்.அதன் மற்றொரு தோலையும் நகத்தால் சுரண்டி எடுத்துவிடலாம்.

மாங்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.வேண்டும் அளவு  தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

உப்பு,காரம் சரிப்பார்த்து மூடி கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் பலாக்கொட்டைகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.

நன்றாகக் கொதித்து பலாக்கொட்டைகள் பாதி வெந்த நிலையில் மாங்காய் துண்டுகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.

இறுதியாக புளியைக் கரைத்து ஊற்றி  கொதித்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.தேங்காய்ப் பூ இல்லாவிடில் பரவாயில்லை.

இப்போது பலாக்கொட்டை& மாங்காய் சாம்பார் தயார்.

இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக  இருக்கும்.