புளி சேர்த்த பருப்புகீரை மசியல்

20150509_170306

பருப்புடன் கீரையின் சுவையைப் போலவே புளியுடன் சேர்த்து செய்யும்போதும் சுவையாகவே இருக்கும்.

20150508_150555

வீட்டில் பறித்த பருப்புகீரை

கொல்லியில் இருந்து எடுத்து வரும் கலவைக் கீரையில் இதுவும் ஒரு பங்கு இருக்கும். கலவை கீரையை புளி சேர்த்துதான் கடைவார்கள். முன்னெல்லாம் கிராமத்தில் பருப்பு வாங்க முடியாததாலோ என்னவோ, முருங்கை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர‌ எந்தக் கீரையாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்.

அதைப் போலவேதான் இதையும் செய்தேன், சூப்பராகவே இருந்தது.

20150508_145147

வீட்ல பறிச்சேன்னு இப்போ நம்பித்தானே ஆகணும் !

சேர்க்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துள்ளேன். அளவுகளை எல்லாம் உங்கள் சுவைக்கேற்ப‌ கூட்டிக் குறைத்து சேர்த்துக்கொள்ளவும்.

தேவையானவை:

பருப்பு கீரை _ சிறு கட்டு
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
முழு பூண்டு _1
புளி _ சிறு கோலி அளவு
பச்சை மிளகாய் _ 1

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு _ நான்கைந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் _ 1
பெருங்காயம்

செய்முறை :

கீரையை ஆய்ந்து நீரில் அலசி எடுத்து வைக்கவும்.

ஒரு கனமான சட்டியில் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, இரண்டு பூண்டுப்பல், பச்சை மிளகாய், புளி இவற்றையெல்லாம் போட்டு மீண்டும் கொதி வந்ததும் கீரையைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கீரை சீக்கிரமே வெந்துவிடும். குழைய வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளித்து, எண்ணெய் நீங்கலாக மீதியைக் கீரையில் கொட்டவும்.

அந்த மீதமான எண்ணெயில் மீதமுள்ள பூண்டு பொடியாகவோ அல்லது தட்டிப்போட்டோ நன்றாக வதக்கிக் கீரையில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய மசிக்காமல் ஓரளவுக்கு மசித்துக்கொள்ளவும்.

20150509_151123

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். துவையல் மாதிரி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

பருப்புகீரை அடை

20140921_145637

கோடையில் ஊருக்குப் போகுமுன் தொட்டிகளில் அறுவடையான பருப்பு கீரைக் குச்சிகள்தான் இருந்தன. திரும்பி வந்து பார்த்தால் …. வாவ் ! எங்கும் படர்ந்திருந்தது.

20140921_164511

அடுத்தடுத்து சில தடவைகள் பறித்தேன். விதை விழுந்து குட்டிகுட்டிச் செடிகள் முளைத்துக் கொண்டே இருந்தன. சந்தோஷமாக இருந்தது. பின்னே இருக்காதா ? ஒரு சிறு கட்டு $ 2:00 க்கு வாங்குவேனாக்கும்.

IMG_5224

அதன்பிறகு குருவிகள் வந்து குத்தாட்டம் போட்டு, முளைத்து வரும் துளிர்களைக் கொத்தி விடுவதால் இவை வளர்வதேயில்லை. இன்னமும் விதைகள் இருந்து, முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன, குருவியும் விடாமல் கொத்திக் கொண்டேதான் உள்ளது.

வீட்டுக்கு வெளியே பெரியபெரிய புல்தரைகள், ரோஜாக்கூட்டங்கள், ஆஃப்ரிக்கன் லில்லி என எவ்வளவோ இருந்தும் எங்க வீட்டுக்குத்தான் அவர்களின் விஜயம் எனும்போது நானும் நல்ல மனசோடு ‘செடிகள் போய்ட்டு போவுது’ன்னு விட்டுட்டேன்.

இப்போ அடைக்கு வருவோமா !!

தேவையானவை:

20141016_144140

கேழ்வரகு மாவு _ ஒரு பங்கு
பருப்பு கீரை _ இரண்டு பங்கு
சின்ன வெங்காயம் _ இரண்டு
பச்சை மிளகாய் _ காரத்திற்கேற்ப‌
இஞ்சி _ சிறிது
கறிவேப்பிலை _ கொஞ்சம்
உப்பு _ சுவைக்கு
நல்லெண்ணெய் _ தேவைக்கு

செய்முறை :

வழக்கம்போல கீரையை அரியாமல் நன்றாக அலசி நீரை வடியவிட்டு, சின்னசின்னதா இருக்குமாறு தண்டுப் பகுதியில் ஆங்காங்கே ஒடித்துக்கொள்ள‌வும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.

மாவை ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி, அதில் உப்பு போட்டு, அதனுடன் அரிந்து வைத்துள்ளவற்றைக் கொட்டி நன்றாகப் பிசையவும்.

20141016_151147

பிசைந்த மாவை உருண்டையாக்கி சிறிது நேரம்(ஒரு 10 நிமி?) ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காயவிடவும்.

20141016_155410

க‌ல் காய்வதற்குள் மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து ஒரு ஈரத்துணியில் வைத்து மெல்லியதாகத் தட்டவும்.

இப்போது கல் காய்ந்ததும் அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு அடையைச் சுற்றிலும் & மேலேயும் எண்ணெய் விட்டு மூடி வேகவிடவும்.

எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விட்டால்தான் அடை வேகும். இல்லையென்றால் மாவு வேகாமல் வெள்ளையாகவே இருக்கும்.

எண்ணெய் அதிகம் சேர்க்க முடியாதென்றால் ஒரு பேப்பர் டவலில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு அடையின் மேல் எல்லா இடத்திலும் படுமாறு தடவிவிடலாம்.

20141016_160054

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இட்லித்தூளுடன் சாப்பிட்டுப் பாருங்க. அடையிலுள்ள பச்சைமிளகாயின் காரமும், தூளிலுள்ள மிளகு & காய்ந்தமிளகாயின் காரமும் சேர்ந்து, நீங்களே ‘ஆஹா’ன்னு சொல்லுவிங்க பாருங்க‌.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »