பொரிச்ச குழம்பு

பொரிச்ச குழம்பை பீர்க்கங்காய்,அவரைக்காய்,பிஞ்சு கத்தரிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

துவரம்பருப்பு_1/2 கப்
பீர்க்கங்காய்_1
சின்னவெங்காயம்_7
தக்காளி_1
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய்_4 (காரம் விரும்பினால் கூட 1 அல்லது 2 மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
உளுந்து_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம்பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி மிதமானத் தீயில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க வேண்டும்.

இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

பீர்க்கங்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.பீர்க்கங்காயை நறுக்கும்போது சுவைத்துப் பார்க்க வேண்டும்.நன்றாக இருந்தால் மட்டுமே குழம்பில் சேர்க்க வேண்டும்.ஏனெனில் சில காய்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.அது குழம்பையே கெடுத்துவிடும்.

வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும் வறுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சிறிது வதக்கி பருப்பைக் கரைத்து ஊற்றவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.இக்குழம்பு சாம்பாரைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.

இப்போது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி போட்டு காய் வேகும்வரை கொதிக்கவிடவும்.

காய் வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை,வெண்பொங்கல்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.

முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

புடலை,பீர்க்கை பொரியல்

 

தேவையான பொருள்கள்:
புடலை_பாதி
பீர்க்கை_பாதி
சின்ன வெங்காயம்_4
கடலை பருப்பு_1 டீஸ்பூன்
பச்சை பருப்பு_1 டீஸ்பூன்
தேங்காய்_ 1 துண்டு
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
கடுகு_1/4 டீஸ்பூன்
உளுந்து_1/4 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2
கறிவேப்பிலை_சிறிது
எண்ணெய்_தேவையான அளவு
செய்முறை:

கடலைப் பருப்பு,பாசிப்பருப்பு இரண்டையும் முக்கால் பதம் வேகவைத்து பிழிந்துகொள்ளவும்.வெங்காயத்தைப் பொடியாகவும்,புடலை,பீர்க்கை இரண்டையும் சிறு துண்டுகளாகவும் நறுக்கவும்.தேங்காய்,சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றாக அரைத்து வைக்கவும்.ஒரு வாணலியில் காய்த் துண்டுகளைப் போட்டு மிகவும் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மூட வேண்டாம்.முக்கால் பாகம் வெந்ததும் வேகவைத்த பயறு சேர்த்துக் கிளறவும்.இரண்டும் சேர்ந்து வெந்த பிறகு அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும்.இறுதியில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி கொட்டிக் கிளறி இறக்கவும்.

 

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »

பீர்க்கங்காய் துவையல்

தேவையானபொருள்கள்:
பீர்க்கை_1

தாளிக்க:

கடுகு_ 1/2 டீஸ்பூன்
உளுந்து: 1/2 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிதுகாய்ந்த மிளகாய்_2
புளி_கோலிக்குண்டு அளவு
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கேற்ப

செய்முறை:

பீர்க்கையை நன்றாகக் கழுவி சிறு துண்டங்களாக நறுக்கவும்.ஒரு வாணலியில் பாதி எண்ணெயை ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.அதே வாணலியில் பீர்க்கையைப் போட்டு நன்கு வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்.பிறகு புளியையும் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும் . இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.பிறகு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு,உளுந்து,சீரகம், பெருங்காயம் இவற்றைத் தாளிக்கவும்.தாளித்ததில் பாதியை துவையலில் கொட்டி மீண்டும் 2 (அ) 3 சுற்றுகள் ஓடவிட்டு எடுத்து வைக்கவும்.இறுதியில் மீதி தாளிதத்தைத் துவையலில் கொட்டி கலந்து வைக்கவும்.

குறிப்பு:

பூண்டின் மணம் பிடித்தால் தாளிக்கும்போது  2 பூண்டுப் பற்களை சேர்த்து வதக்கி அரைக்கலாம்.