பயத்தங்காய்/Fresh black eyed peas

           

இந்தக் காயை எங்க ஊர் பக்கம் பயத்தங்காய் என்றே சொல்வோம்.இதிலுள்ள பயறை பெரும்பயறு என்போம்.மிகச்சிறு வயதில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இதைப் பார்ப்பதே அரிது.இங்கு வந்த புதிதில் இந்தக் காயைப் பார்த்ததும் மகிழ்ச்சி.

விலை அதிகமானாலும் கிடைக்கிறதே என்பதில் சந்தோஷம்.வாங்கும்போது மிகவும் முற்றியதாக இல்லாமலும், மிகவும்  பிஞ்சாக‌ இல்லாமலும் நடுத்தரமாக இருப்பதைப் பார்த்து தெரிவுசெய்ய‌ வேண்டும்.

இதை வேக வைக்க‌ இட்லிப் பாத்திரம் மாதிரியான அகலமானப் பாத்திரம்தான் சிறந்தது..தேவையானதை எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு வேக வைக்கும் பாத்திரத்தில் போட்டு காய் மூழ்குமளவு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு, மூடி வேக வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து 15 லிருந்து 20 நிமிடங்களுக்குள் வெந்துவிடும்.

ஒன்றை எடுத்து வெந்துவிட்டதா என உரித்துப்பார்த்து மேற்கொண்டு வேக வைப்பதா அல்லது  வேண்டாமா என முடிவு செய்யலாம்.

வேக வைத்தது மீதமானால் அடுத்த நாள் வெயிலில் காயவைத்து, பாதி காய்ந்தும், பாதி காயாமலும் இருக்கும்போது இன்னும் சுவையாக இருக்கும்.

கிராமத்து உணவு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 6 Comments »

பெரும்பயறு சுண்டல் (Black eye beans)

தேவையானப் பொருள்கள்:

பெரும்பயறு_மூன்று கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)
சின்ன வெங்காயம்_2
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பெரும்பயறை ஊற வைக்க வேண்டுமென்பதில்லை.அப்படியேகூட வேக வைக்கலாம்.தேவையானப் பயறை ஒரு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கவும்.

அல்லது ஊற வைத்து செய்வதாக இருந்தால்,நன்றாக ஊறியதும் குக்கரில் வைக்காமல் ஒரு பாத்திரத்தில் பயறு மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கலாம்.சீக்கிரமே வெந்துவிடும்.

நன்றாக வெந்ததும் (குழைய விட‌ வேண்டாம்) தண்ணீரை வடித்துவிடவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் கொத்துமல்லி இலை,சின்ன வெங்காயம் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.

இப்போது பெரும்பயறு சுண்டல் தயார்.

பெரும்பயறு குழம்பு (Black eye beans)

தேவையானப் பொருள்கள்:

பெரும்பயறு_3 கைப்பிடி
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம்_7 லிருந்து 10 க்குள்
முழு பூண்டு_1
தக்காளி_பாதி
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2  டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1/2 டீஸ்பூன்
மிளகு_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
வெந்தயம்_சுமார் 10 எண்ணிக்கை

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
வடகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் பயறு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.ஊற வைக்கவெல்லாம் வேண்டாம். வெந்ததும் நீரை வடித்துவிடவும்.

புளி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் பொடித்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.

இக்குழம்பையும் மண் சட்டியில் செய்தால்தான் சுவையாக இருக்கும்.

சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி வதக்கி,அதன் பிறகு வெந்த பயறு சேர்த்து வதக்கி, அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு  சேர்த்து வதக்கவும்.பிறகு புளித்தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்து,வாசனை வந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கலக்கி விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

இக் குழம்பில் கத்தரிக்காய் (அ) முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம்.குழம்பு ஒரு கொதி வந்ததும் காய் சேர்க்கலாம். அல்லது வெங்காயம்,தக்காளி வதக்கிய பிறகு காய் சேர்த்து வதக்கி செய்யலாம்.