தேவையானவை:
ப்ரோக்கலி _ ஒரு முழு பூ
பொடித்த மிளகு _ காரத்திற்கேற்ப
பூண்டு _ தேவைக்கேற்ப
எண்ணெய்
உப்பு
இனி எப்படி செய்தால் சுவையாக இருக்கும் என பார்க்கலாம்.
ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். பூண்டிதழ்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பூக்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு போட்டு ப்ரோக்கலி பூக்களையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிவிடவும். நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அதிகமாக வெந்துவிட்டால் அது வதங்கியதுபோல் வலவலவென ஆகிவிடும்.
வெந்த பூவை வேண்டிய அளவில் கையால் அல்லது கத்தியால் சிறுசிறு இதழ்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
ஒரு தோசைக்கல் அல்லது வாணலில் சிறிது எண்ணெய் விட்டு (ஆலிவ் எண்ணெயாக இருந்தால் நல்ல வாசனையாக இருக்கும்) தட்டிய பூண்டுகளைப் போட்டு வதக்கவும். அடுத்து ப்ரோக்கலியைச் சேர்த்து மிளகுத்தூளையும் தூவி தேவையானால் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடவோ அல்லது சும்மா அப்படியே சாப்பிடவோ அல்லது பொரியலில் சாதம் போட்டு கிளறி சாப்பிட பூண்டின் சுவையுடன் நன்றாக இருக்கும்.