காராமணி பொரியல்/karamani poriyal/Chinese long beans poriyal

கீழே படத்திலுள்ள காயை மார்க்கெட்டில்   chinese long beans னு எழுதியிருந்தாங்க.காராமணினு நினைக்கிறேன்.பச்சையா,நீளமா இருக்கும் இதை வாங்கி பீன்ஸ் மாதிரியே சாம்பார்,பொரியல்,கூட்டு என சமைத்துவிடுவேன்.நல்லாவே இருக்கும்.வாங்கினா செஞ்சு பாருங்க.

தேவையானவை:

காராமணி_படத்திலுள்ளதில் பாதி
சின்ன வெங்காயம்_3
பச்சைமிளகாய்_1
உப்பு_சிறிது

அரைக்க:

தேங்காய்_இரண்டுமூன்று  கீற்றுகள்
சீரகம்_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,காய்ந்தமிளகாய்_1,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான அளவில் நறுக்கவும். வெங்காயம்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்.தேங்காய்,சீரகத்தைக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயம்&பச்சைமிளகாய்,அடுத்து காராமணியை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு,சிறிது உப்பு தூவி,காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

காய் வெந்து தண்ணீர் வற்றிய‌ பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்சீரகத்தைச் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கவும்.

இது எல்லா சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

Advertisements
வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 2 Comments »

அவரைக்காய் பொரியல்/Purple beans poriyal

கோடையில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் பல நிறங்களில் பலவிதமான காய்கறிகள் வரும்.அதில் ஒன்றுதான் இந்த கண்ணைப்பறிக்கும் காய்.இது பார்க்க‌ அவரை மாதிரியே இருக்கு,சுவையும்தான்.ஆனால் கொஞ்சம் கடினமான தோல் உள்ளது.குட்டிகுட்டியா purple color ல் பார்க்கவே அழகா இருந்துச்சு.சமைக்கும்போது நிறம் மாறிவிட்டது.சமையலில் அவரைக்காய் போலவே இதையும் செய்துவிடுவேன்.

தேவையானவை:

நறுக்கிய அவரைக்காய்_ஒரு கிண்ணம்
உப்பு_தேவைக்கு

பொடிக்க:

வறுத்த‌ வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2

செய்முறை:

அவரைக்காயைக் கழுவி சுத்தம்செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அடிகனமான வாணலில் நறுக்கிய அவரைக்காயைப் போட்டு அது திட்டமாக வேகுமளவு சிறிது தண்ணீர் விட்டு,சிறிது உப்பு தூவி வேக வைக்கவும்.

தண்ணீர் குறைவாக இருப்பதால் அடிப்பிடிக்க வாய்ப்புண்டு.எனவே வேகும்போதே இரண்டு தரம் கிளறிவிடவும்.

இதற்கிடையில் மிளகாயை வெறும் வாணலில் சூடுவர வறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

அவரைக்காய் வெந்ததும்(தண்ணீர் இருக்கக்கூடாது,இருந்தால் வடித்துவிடவும்)பொடித்த பொடியைப்போட்டுக் கிளறிவிட்டு இறக்கவும்.

இதை மற்ற பொரியல் போலவே சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.இம்முறையிலேயே சாதாரன அவரைக்காயிலும் செய்யலாம்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 4 Comments »

அவியல்

பிடித்தமான எல்லா காய்களையும் அவியலுக்குப் பயன்படுத்தலாம்.அவியல் என்றாலே காய்களை நீளவாக்கில் நறுக்கிப்போட வேண்டும் என்பார்கள்.நானும் அவ்வாறே போட்டுவிடுவது.

வாழைக்காய்,உருளை, அவரை, காராமணி,மாங்காய், கத்தரிக்காய், முருங்கை,வெள்ளைப்பூசனி போன்றவற்றிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக நறுக்கிச் சேர்த்துள்ளேன்.

காய்களை ரொம்பவே குழைய விடாமல் சரியான பதத்தில் வேகவிடவும். விருப்பமானால் மஞ்சள் தூள் சேர்க்கலாம். மாங்காய்,தயிர் சேர்ப்பதால் லேசான புளிப்புச்சுவையுடன் இருக்கும்.இவை இல்லாவிட்டால் சிறிது புளித்தண்ணீர் விடலாம்.

அவியலுக்கு தேங்காயெண்ணெய் விடுவாங்க.எனக்கு தேங்காயெண்ணெய் பழக்கமில்லையாதலால் (சமையலில்) நல்லெண்ணெய் சேர்த்திருக்கிறேன்.

தேவையானவை:

காய்கறிகள் நறுக்கியது_2 கப் அளவிற்கு
புளித்த‌ தயிர்_1/2 டம்ளர்
கறிவேப்பிலை_ஒரு கொத்து
எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துண்டு_3
சீரகம்_1/2 டீஸ்பூன் அளவிற்கு
பச்சை மிளகாய்_2 (ஒன்று காரமானது,மற்றொன்று காரமில்லாதது)

செய்முறை:

காய்களை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கவும். பொதுவாக‌ நீளவாக்கில்தான் நறுக்குவாங்க.

ஒரு கனமான பாத்திரத்தில் காய் வேகுமளவு மட்டும் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் காய்களைப்போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.தீ மிதமாகவே இருக்கட்டும்.தண்ணீர் குறைவாக இருப்பதால் காய் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.வேகும்போதே இரண்டொருதரம் கிளறி விடவும்.

இதற்கிடையில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துத் தயிருடன் கலந்து வைக்கவும்.

காய்கள் வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்தயிர் விழுதைச் சேர்த்துக் கிளறி சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். நீண்ட நேரம் கொதிக்க விட வேண்டாம்.

இறுதியாக எண்ணெயைக் காய்ச்சி விட்டு,கறிவேப்பிலையைப் போடவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 10 Comments »

ப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல்/Broccoli rabe poriyal

இதனை கீரைப் பொரியல் போலவே செய்ய வேண்டியதுதான்.சமைக்கும் நேரமும் குறைவு.சுவையோ சாதாரண கீரையைவிட அதிகம்.

தேவையானவை:

ப்ரோக்கலி ரே(ய்)ப் நறுக்கியது_ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம்_3
பச்சை மிளகாய்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் ஒன்று,பெருங்காயம்,கறிவேப்பிலை.

செய்முறை:

ப்ரோக்கலி ரே(ய்)பை சுத்தம்செய்து,நீரில் அலசிய பிறகு விருப்பமான அளவில் அரிந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்த பிறகு வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் ப்ரோக்கலி ரே(ய்)பை சேர்த்து இரண்டு கிளறுகிளறி உப்பு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

ப்ரோக்கலி ரே(ய்)ப் சீக்கிரமே வெந்துவிடும்.மூடி போட்டு,தண்ணீர் தெளித்து மற்ற கீரைகள் மாதிரி வேகவைக்க வேண்டாம்.

இது எளிமையான,சத்தான,சீக்கிரமே செய்யக்கூடிய அருமையான பொரியலாகும்.

அவரைக்காய்&வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

அவரைக்காய் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை வேர்க்கடலை(அ)காய்ந்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_இரண்டு
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு,உளுந்து,சீரகம்,கடலைப் பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பச்சை வேர்க்கடலையானால் அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.காய்ந்தது என்றால் முதல் நாளே ஊற வைத்து,நன்றாக ஊறியதைப் பயன்படுத்த வேண்டும்.

அவரைக்காய்,வெங்காயம் இவற்றை விருப்பமான வடிவத்தில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,முதலில் வெங்காயத்தையும்,அடுத்து அவரைக்காய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக்கிளறி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.

இடையிடையே கிண்டி விடவும்.அவரை,கடலை இரண்டும் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய்ப்பூ&கொத்துமல்லி தூவி இறக்கவும்.

கோஸ் பொரியல்_மற்றொரு முறை

 

தேவையானவை:

கோஸ் நறுக்கியது_ஒரு கிண்ணம்
பச்சை மிளகாய்_1
தேங்காய்ப் பூ_ஒன்றிரண்டு டீஸ்பூன்கள்
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கோஸிலிருந்து முழு இலைகளாகப் பிரித்தெடுத்துக் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு, இலைகளின் நடுவிலுள்ள தண்டை நீக்கிவிட்டு, இலைகளை மட்டும் நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கவும்.

காரம் விரும்பினால் பச்சை மிளகாயைப் பொடியாகவும்,இல்லையென்றால் லேசாகக் கீறியும் வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு,மிளகாயைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,கோஸை சேர்த்துக் கிளறி,சிறிது உப்பு தூவி மூடி போடாமல் வேக விடவும்.மூடினால் நிறம் மாற வாய்ப்புண்டு.

கோஸ் சீக்கிரமே வெந்துவிடும்.வெந்தபிறகு தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 6 Comments »

பலாக்கொட்டைப் பொரியல்

 

பலாப்பழம் வாங்கும்போது ஒரு சிறு கீற்றுதான் வாங்குவோம்.நிறைய வாங்க ஆசைதான்.அதன் விலையைப் பார்த்து பயந்து சுமார் 10 சுளைகள் உள்ளதாக வாங்கி வருவோம்.இந்த முறை துணிந்து (எத்தனை நாளைக்குத்தான் மான் தண்ணீர் குடிப்பது மாதிரியே நடிப்பது?) வாங்கியதில் 20 சுளைகளுக்கும் அதிகமாக இருந்தது.பழத்தை சாப்பிட்டுவிட்டு அதிலுள்ள கொட்டைகளை  பத்திரமாக எடுத்துவைத்து பொரியல் செய்துவிட்டேன்.நிறைய வாங்கியிருந்தால் இதை வைத்து கூட்டு, குருமா,சாம்பார் முதலியவை செய்திருக்க‌லாம்.

எங்க ஊர் பலாப்பழத்தைப் பார்க்க இங்கே வரவும்.பலாக்கொட்டை சாம்பாருக்கு இங்கே வரவும்.

தேவையானவை:

பலாக்கொட்டை_சுமார் 20 (எண்ணிக்கையில்)
மிளகாய்த்தூள்_ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பலாக்கொட்டையை சமைக்குமுன் மேலேயுள்ள ஷெல் போன்ற பகுதியை எடுத்துவிட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.இது ப்ரௌன் நிறத்தினாலான  மற்றொரு தோலை எடுப்பதற்கு.

ஊறியதும் அதன் தோலை கட்டைவிரல் நகத்தால் உரித்தோ அல்லது சுரண்டியோ எடுத்துவிடவும்.சில மென்மையான பகுதிகளில் தோல் எடுக்க வராது.அதை விட்டுவிடலாம்.

பிறகு விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.அல்லது முழு அளவிலேயே போட்டுக்கொள்ளலாம்.பார்க்க சிறுசிறு முட்டைகள் போல் இருக்கும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பலாக்கொட்டைகளைப் போட்டு ஒரு கிளறி கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துப் பிரட்டிவிட்டு பலாக்கொட்டை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.

அது நன்றாக வெந்து வரும்வரை இடையிடையே கிண்டிவிடவும்.தண்ணீர் வற்றி,நன்றாக வெந்ததும் இறக்கவும்.இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கலாம்.