பொட்டுக்கடலை மாவு முறுக்கு

 

 

ஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.

கண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.

முறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிளகாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

அரிசி மாவு_2 கப்
பொட்டுக்கடலை மாவு_1/2 கப்
ஓமம்_சிறிது
எள்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

ஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.

ஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும்  எடுத்துவிடவும்.

இப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.

 

முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 7 Comments »