ஒருசில மாதங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் விதவிதமான பாவக்காய்கள் வரும். நான் வாங்குவது படத்திலுள்ள இந்த பிஞ்சு பாவக்காய்தான்.
விதைகளை நீக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. பிஞ்சு பாவக்காய் நல்லதா அல்லது முற்றல் நல்லதான்னு தெரியவில்லை.
இதில் புளிக்குழம்பு,பொரியல் என எது செய்தாலும் பிடிக்கும்.
தேவையானவை:
பாவக்காய்_3
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.
பாவக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு விதை இருந்தால் நீக்கி விடவும்.
பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.
குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.
தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி,பாவக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கள் வதங்கியதும் புளியை இரண்டுதரம் கரைத்து ஊற்றி,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து பாவக்காய் வெந்து,பொதுவாக எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும்சமயம் இறக்கிவிடலாம். எங்க வீட்டு குழம்பில் எண்ணெய் மிதக்க சான்ஸே இல்லை.
சாதம் & அப்பளம் அல்லது வத்தலுடன் இந்த புளிக்குழம்பு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.