கேழ்வரகு சேமியா இட்லி / Ragi semiya idli

ragi semiya idli

இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு டிஃபன்.ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் சாப்பிட வேண்டும் என்பதால் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கேழ்வரகு சேமியா உப்புமா செய்வதில் பாதி வேலைகூட இதற்குத் தேவையில்லை.எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.

ஒரு பாக்கெட் சேமியாவில் மூன்று பேருக்குக்குறையாமல் சாப்பிடலாம்.

செய்முறையை ஒரே வரியில் சொல்வதானால் சேமியாவில் உப்பு போட்டு  ஊறவைத்து,நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.இதைத்தான் கீழே ஒரு பதிவாகக்கொடுத்துள்ளேன், புதியவர்களுக்கு உதவும் என்பதால்.

தேவையானவை:

அணில் சேமியா பாக்கெட் (200 g )_1
உப்பு_தேவைக்கு

செய்முறை:

கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்)இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும்.ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.

சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.

இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக‌ அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.

ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இது மிகவும் மிருதுவாகவே இருக்கும்.

ராகி சேமியா உப்புமா

தேவையானவை:

ராகி சேமியா_சுமார் 100 கிராம் (பாதி பாக்கெட்)
சின்ன வெங்காயம்_5
இஞ்சி_சிறிது
பச்சை மிளகாய்_1
கேரட்_1 (சிறியது)
பீன்ஸ்_5
கொத்துமல்லி இலை
எலுமிச்சை சாறு_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்தமிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 5 நிமி ஊற வைக்கவும்.பிறகு நீரை வடிய வைக்கவும்.

வடிய வைத்த சேமியாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பதுபோல் வேக வைக்கவும்.சீக்கிரமே வெந்துவிடும்.

வெந்ததும் எடுத்து உதிர்த்து வைக்கவும்.

இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாய்,கேரட்&பீன்ஸ் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும்.ஏற்கனவே சேமியாவில் சிறிது உப்பு சேர்த்துள்ளோம்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.