தோசை / Dosa

நீண்ட நாட்களாகவே தோசைப் பதிவை போட வேண்டும் என நினைப்பேன்.ஆனாலும் ஃபோட்டோ எடுப்பதற்குள் ஆறிப் போய்விட்டால் யார் சாப்பிடுவது என நினைத்து விட்டுவிடுவேன்.ஆமாம்,சூடாக இருக்கும்போது இருக்கும் மொறுமொறு சிறிது நேரத்திலேயே காணாமல்போய் சாஃப்டாகிவிடும்.உள்ளே இறங்காது.

இன்று துணிந்து ஒரு முடிவுக்கு வந்து,அதாங்க ஆறிப்போனாலும் சூடுபண்ணி சாப்பிட்டுவிடுவது என முடிவுப‌ண்ணி (டுமீல் டுமீல் என) சுட்டுவிட்டேன்.படத்தை க்ளிக் பண்ணி பாருங்க,கல்லிலிருந்து எடுத்ததும் இப்பவோ அப்பவோ என உடைந்துவிடும்போல மொறுமொறுவென இருக்கும் இருக்கும் இந்தத் தோசையை எப்படி ஆறவைத்து சாப்பிடுவது!!

நான் தோசைக்கென தனியாக மாவு அரைப்பதில்லை.இட்லி மாவையேப் பயன்படுத்திக்கொள்வேன்.இட்லி சரியாக வந்துவிட்டால் தோசை தானாகவே வந்துவிடும்.

மாவுதான் ஏற்கனவே அரைத்து வைத்துவிட்டோமே.இப்போது தோசை சுடுவது எப்படி?என்று மட்டும் பார்ப்போம். இட்லிமாவு இன்னும் அரைக்கவில்லை என்பவர்கள் இங்கே போய் சீக்கிரமே அரைச்சு எடுத்திட்டு வந்திடுங்க‌.

இட்லி மாவைவிட தோசைக்கான மாவு கொஞ்சமேகொஞ்சம் நீர்த்து இருக்க வேண்டும். அதேபோல் மாவு முழுவதையும் தண்ணீர் ஊற்றிக் கரைக்காமல் இரண்டுமூன்று தோசைக்கான மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு 1/4 டம்ளருக்கும் குறைவாகத் தண்ணீர் விட்டு கரண்டியால் லேஸாகக் கரைத்துவிட்டு பயன்படுத்தவும்.

தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.கல் சூடானதும் வாழைக்காயின் காம்புப்பகுதி அல்லது கத்தரிக்காயின் நுனியில் லேஸாக நறுக்கிவிட்டு எண்ணெயில் தொட்டு கல் முழுவதும் தடவிவிட்டு ஒரு கரண்டி மாவைக் கல்லின் நடுவில் ஊற்றி,கரண்டியின் அடிப்பகுதியால் கல் முழுவதும் இழுத்து நன்றாகத் தேய்க்கவும்.சுற்றிலும் மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு இட்லிப் பாத்திரத்தின் மூடியால் நன்றாக மூடி வேக‌விடவும்.தோசை வெந்ததும் மூடியின் வழியே ஆவி வரும்.மூடியைத் திறந்து தோசைத்திருப்பியால் தோசையைக் கல்லிலேயே மடித்துப்போட்டு (திருப்பிப்போடாமல்) எடுக்கவும்.மொறுமொறு தோசை தயார்.

தோசை வெந்துவிட்டால் தோசைத்திருப்பியால் எடுக்கும்போது எளிதாக வந்துவிடும்.எடுக்க வராமல் கல்லில் ஒட்டிக்கொண்டால் தோசை இன்னும் வேகவில்லை என்பதாகும்.மீண்டும் மூடிவைத்து வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி,வேர்க்கடலை சட்னி,இட்லி தூள்,இட்லி சாம்பார் எல்லாம் சூப்பரா இருக்கும்.அதைவிட தேங்காய் சட்னி & இட்லி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சூப்பரோ சூப்பர்.இதனுடன் தூளையும் தொட்டு சாப்பிட இன்னும் சூப்பரோ சூப்பர்.

தோசை பளபளன்னு வரணுமின்னா கல் போனாலும் பரவாயில்லை என்று கல்லில் எண்ணெய் தேய்க்காமல் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு சொடசொடப்பு அடங்கியதும் மாவு ஊற்றி தேய்த்துவிட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப்போடாமல் எடுக்கவும்.