ஓட்ஸ் பொங்கல் / Rolled Oats pongal

oats pongal

பொங்கலில் மிளகை ஒன்றும்பாதியுமாக பொடித்துப் போட்டால் சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் மிளகு மீதமாகி இருப்பதைத் தவிர்க்கலாம்.இஞ்சியையும் அப்படியே வெளியே எடுத்துப் போடாத அளவிற்கு தட்டிப்போடலாம்.

இந்தப் பொங்கலை நான் எழுதியுள்ள மாதிரியும் செய்யலாம்.இல்லாவிடில் பச்சைப்பருப்பு+ஓட்ஸிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் பச்சைப்பருப்பை வேகவைத்து,வெந்ததும் ஓட்ஸைப்போட்டுக் கிளறிக்கொடுத்து இறக்கும்போது,தாளிப்பை செய்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கினால் இன்னும் நல்ல வாசனையாக இருக்கும்.

தேவையானவை:

வெறும் வாணலில் வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப் பயறு_1/4 கப்பிலிருந்து 1/2 கப்பிற்குள்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_இரண்டுமூன்று டீஸ்பூன்.
மிளகு_சிறிது
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப்பயறை சிவக்க வறுத்து,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் விட்டு ரொம்பவும் குழையாமல் வேகவைக்கவும்.பச்சைப்பருப்பு வேகத்தான் நேரமெடுக்கும்.அது வெந்துவிட்டால் பொங்கல் நிமிடங்களில் ரெடியாகிவிடும்.

அது வெந்துகொண்டிருக்கும்போதே இஞ்சியைத் தட்டிவைத்துக்கொள்ளவும். மிளகையும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,நெய்யை விட்டு சூடாகியதும் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு ஓட்ஸ்பொடிக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விடவும்.எனவே இரண்டு கப் ஓட்ஸிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பும் போட்டு,கொதிக்கும்வரை மூடி வைக்கவும்.

பொங்கல் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமானால் சிறிது மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அல்லது அதற்கு முன்பாகவேகூட வெந்த பச்சைப்பருப்பை சேர்த்து விடலாம்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதித்ததும் ஓட்ஸை தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

ரவையைப்போல ஓட்ஸும் சீக்கிரமே வெந்துவிடுமாதலால் மிதமானத் தீயில் ஒன்றிரண்டு தரம் கிளறிக்கொடுத்து தீயை நிறுத்தி மூடிவிடவும்.

இப்போது சுவையான,சத்தான,வாசனையுள்ள,கொஞ்சம் கொழகொழப்பில்லாத,எளிதாக செய்யக்கூடிய ஓட்ஸ் பொங்கல் தயார்.

oats pongal

ஆறஆற பொங்கல் கெட்டியாகும்.சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.சாம்பாருடனும் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ்_வறுத்துப் பொடித்தல்

oats oats

 

சாப்பாட்டில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர் சொல்வதால் ஏதாவது ஒருவேளை உணவுக்கு ஓட்ஸைப் பயன்படுத்தலாமே.

இது கொஞ்சம் கொழகொழப்பு தன்மையுடையது.முதன்முதலில் சாப்பிட்டபோது பிடிக்கவே பிடிக்காது.கடகடவென மருந்து விழுங்குவதுபோல் சாப்பிட்டு விடுவேன்.எனக்கே இப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலை,இவர்கள் தொடவேமாட்டார்கள்.

ஒருமுறை லேஸாக வறுத்துப் பொடித்து உப்புமா செய்தேன்.வறுத்ததால் நல்ல வாசனையுடன் சுவை கூடுதலாகவும் இருந்தது.கொஞ்சம் கொழகொழப்பும் குறைவாக இருந்தது.அன்றிலிருந்து ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் அளவிற்கு வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு கஞ்சி,பொங்கல்,உப்புமா,கிச்சடி என எல்லாமும் செய்வேன்.கொஞ்சம் கூடுதலாக மாவாக்கிக் கொண்டால் இட்லி,தோசை,அடை என எல்லாமும் செய்யலாம்.இப்போது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த தானியமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

படத்தில் உள்ளதுபோல் உள்ள தட்டையான ஓட்ஸை (Rolled oats) வெறும் வாணலில் போட்டு மிதமானத் தீயில் லேஸாக சிவந்து, சூடேறும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுகள் சுற்றி பொடித்துக்கொள்ளவும்.மாவாக்க‌ வேண்டுமானால் மேலும் இரண்டு சுற்றுகள் சுற்றினால் மாவாகிவிடும்.

நீங்களும்போய் ஓட்ஸை வறுத்து,பொடிச்சு வையுங்க.அடுத்த பதிவில் இந்த பொடித்த ஓட்ஸை வைத்து வெண்பொங்கல் செய்வதைப் பார்க்கலாம்.