கத்தரிக்காய் சாதம் / Brinjal Rice

20150226_145919

சுவையான கத்தரிக்காய் சாதம் !

கீழே உள்ளவை எல்லாம் எங்க ஊர் சந்தையில் சென்றமுறை வாங்கிய கத்தரிக்காய், நல்லாருக்கா பாருங்க !! இன்னும் கொஞ்ச நாளில் இதுபோன்ற விதவிதமான கத்தரிக்காய்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துவிடும். பிறகு எஞ்ஜாய்தான் !

20141108_130729

IMG_1307

IMG_8542

தேவையானவை :

அரிசி _ ஒன்றரை கப்

கத்தரிக்காய் _ நான்கைந்து

உப்பு _ தேவைக்கு
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
எலுமிச்சை _ சிறு துண்டு

வறுத்து பொடிக்க‌ : காய்ந்த மிளகய், மிளகு, கொத்துமல்லி விதை, எள்,  கசகசா,  தேங்காய்

20150226_144730

எல்லாமும் தோராயமாகக் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம்போல் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்.

கொத்துமல்லி தூள் கைவசம் இருந்ததால் தூளாகவே எடுத்துக் கொண்டேன். ஆனாலும் ஃப்ரெஷ் கொத்துமல்லியை வறுத்துப் பொடித்து செய்தால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும்.

தாளிக்க :

நல்லெண்ணெய்
முந்திரி
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாதம் குழையாமல், நன்றாக வெந்து, உதிரிஉதிரியாக இருக்குமாறு வடித்து ஆறவிடவும். நான் புழுங்கல் அரிசியில் செய்தேன்.

தற்போதைக்கு சின்ன கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் பெரிய கத்தரிக்காயின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் தேங்காய் தவிர மற்றதை வெறும் வாணலில் சூடு வர வறுத்துத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாக தேங்காயைத் துருவி ஈரம்போக வறுத்து, இவை எல்லாம் ஆறியதும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு, இதில் பொடித்து வைத்துள்ள பொடியைப்போட்டு கிண்டி, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கொத்துமல்லியைத் தூவிவிட்டு, இறுதியில் சாதத்தைக் கொட்டி கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, இளந்தீயில் சிறிது நேரம் மூடிவைத்து, சாதம் சூடு ஏறி மசாலாவுடன் நன்றாகக் கலந்ததும் இறக்கி சாப்பிட்டுப் பார்த்து ……

20150226_120647

……….. எப்படி வந்தச்சுன்னு வந்து சொல்லுங்களேன் !!

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

தேங்காய் சாதம்

 

தேங்காய் சாதத்திற்கு தேர்ந்தெடுக்கும் தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.கொஞ்சம் இனிப்பான,சதைப்பற்றுள்ளத் தேங்காயானால் சுவை அதிகமாக இருக்கும்.

முந்திரி,வேர்க்கடலை இவற்றைப் போட வேண்டுமென்பதில்லை. விருப்பமானால்,வீட்டில் இருந்தால் போடலாம்.

சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கும்போது அப்பளத்தைப் பொரித்து,நொருக்கிப் போட்டும் இறக்கலாம்.

தேவையானவை:

அரிசி_ஒரு கப்
தேங்காய்ப்பூ_ஒரு கப்
இஞ்சி_சிறுதுண்டு
பச்சைமிளகாய்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
முந்திரிபருப்பு
பெருங்காயம்
காய்ந்தமிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து  வேக வைத்து உதிர் உதிராக வரும் பக்குவத்தில் வடித்து,பிறகு ஆறவைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, இஞ்சி, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கவும்.

அடுத்து தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும்.இது வதங்கும்போதே சிறிது உப்பை ஸ்ப்ரே பன்னவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருக்கிறோம்.

தேங்காய்ப்பூ நன்றாக வதங்கி சிவந்து வரும்போது ஆறிய சாதத்தைக்கொட்டிக் கிளறவும்.சாதம் சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மிக எளிதாக செய்யக்கூடிய தேங்காய் சாதம் தயார்.

இதற்கு அப்பளம்,வத்தல்,பருப்புத் துவையல்,வறுவல்,பொரியல் எல்லாமே நன்றாக இருக்கும்.

நிறைய சாத வகைகள் செய்யும்போது இதையும் செய்தால் கலர்கலரான சாதங்களுக்கு மத்தியில் பளீர் வெண்மையுடன் கலக்கலாக இருக்கும்.இதனை மீதமான சாதத்திலும் செய்யலாம்.

 

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . 6 Comments »

தாளித்த புளிசாதம்

தேவையானப் பொருள்கள்:

சாதம்_ஒரு கிண்ணம்
புளி_கோலி அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_கொஞ்சம் (இல்லையெனில் பரவாயில்லை)
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

வதக்க வேண்டிய பொடிகள்:

கொத்துமல்லி பொடி_ஒரு டீஸ்பூன்
வெந்தயப்பொடி_சிறிது

செய்முறை:

இதனைப் பெரும்பாலும் இரவு மீதமாகும் சாதத்தில்தான் செய்வார்கள்.சாதம் ஒரு கிண்ணம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

புளியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

ஊறியதும் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

சாதத்தில் புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். இரவு முழுவதும் இருக்கட்டும்.அப்போதுதான் புளி,சாதத்தில் நன்றாக ஊறி இருக்கும்.காலையில் பார்த்தால் சாதம் நீர்விட்டிருக்கக் கூடாது.கெட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,தீயை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு கொத்துமல்லிப் பொடி,வெந்தயப் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உடனடியாக சாதத்தை சேர்த்துக் கிளறவும்.

இப்போது தீயை மிதமாக்கிக்கொண்டு ஒரு மூடி போட்டு வைக்கவும்.

இடையிடையே கிளறி விடவும்.

சாதம் நன்றாக சூடு ஏறி புளி வாசனை போனதும் இறக்கவும்.

இதற்கு உருளைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு,முட்டை,சிக்கன் வறுவல்கள் நன்றாக இருக்கும்.

நல்ல பதமாக செய்தால் குழம்பு வைத்து கிண்டும் சாதத்தைவிட இதுதான் அருமையாக இருக்கும்.

கார்ன் புலாவ்

Farmers market லிருந்து சோளக்கதிர்கள் வாங்கியாகிவிட்டது.

அவிப்பதற்கு ரெடியாகிவிட்டது.உப்பு போட்டு அவித்து அப்படியே சாப்பிடலாம்.அல்லது அதில் மிளகாய்த்தூள் தூவியோ (அ) mayonnaise  தடவியோ சாப்பிடலாம்.

சோளம் இளம்பிஞ்சாக இருந்தால் காய்கறிகள் போல பச்சையாகவே சேர்க்கலாம்.கொஞ்சம் முற்றி இருந்தால் வேகவைத்து சேர்ப்பது நல்லது.

புலாவ் செய்யத் தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி_2 கப்
சோளக்கதிர்_1 (அ) சோள முத்துக்கள்_2 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10 க்குள்
பச்சைமிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_3 பல்
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
தயிர் _ 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்(அ)ஆலிவ் ஆயில்(அ)நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை_1
பிரிஞ்சி இலை_2
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி_10
திராட்சை_10

செய்முறை:

அரிசியைத் தண்ணீரில் கழுவி ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும்.ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.

சோளக்கதிரை உப்பு சேர்த்து வேக வைத்து சோள முத்துக்களை உதிர்த்துக்கொள்ளவும்.

வெங்காயம் நறுக்கிக்கொண்டு,பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து சோளத்தை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வேக வைக்கவும்.(பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால்  ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை.)

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி,மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

மீண்டும் கொதித்து வரும்போது மூடியைத் திறந்து கொத்துமல்லி இலை,எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு ஒரு ஈரத்துணியைப் பிழிந்து (அ) ஒரு பேப்பர் டவலை நனைத்துப் பிழிந்து பாத்திரத்தின் மேல் போட்டு அதன் மேல் மூடியைப்போட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் வேக‌ வைக்கவும்.

அடுத்து அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.

இப்பொழுது சுவையான கார்ன் புலாவ் தயார்.

இதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி, மற்றும் எல்லா வகையான வறுவல்களும்  நன்றாகப் பொருந்தும்.

இதே செய்முறையில் காய்கறிகள் (அ) சிக்கன் (அ) மட்டன் வைத்தும் செய்யலாம்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . Leave a Comment »

புளிக்குழம்பு & புளிசாதம்

கிளறிய சாதம் செய்யலாம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது புளிசாதம், தயிர் சாதம் தான்.

புளிசாதம் செய்யும்போது கூடவே சர்க்கரைப் பொங்கல் , உருளைக் கிழங்கு வறுவல  அல்லது  மசால் வடை (கடலைப் பருப்பு வடை) செய்தால் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.

குழம்பு செய்யத் தேவையானப் பொருள்கள்:

புளி_எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்துப் பொடிக்க:

எள்_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2

தாளிக்க:

நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_ஒரு கைப்பிடி
காய்ந்தமிளகாய்_2
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.

வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் போட்டு தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்தவற்றுள் எள்ளைத் தனியாகவும்(ஒன்றும் பாதியுமாக), மற்ற பொருள்களை ஒன்றாகவும் பொடித்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்ததும் எண்ணெய் மேலே பிரிந்து வந்திருக்கும். அப்போது (எள் நீங்களாக) பொடித்து வைத்துள்ளப் பொடியை சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்ததும் பொடித்த எள்ளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

புளி சாதம் கிளறுதல்:

தேவையானவை:

அரிசி_2 கப்
புளிக்குழம்பு_தேவைக்கு

புளி சாதம் கிளறுவதாக இருந்தால் வடித்த சாதத்தைப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும்.இல்லாவிடில் எலெக்ட்ரிக் குக்கர் சாதம் பரவாயில்லையாக இருக்கும்.

சாதம் வேகும் போது சிறிது உப்பு சேர்த்து வடித்தால் சுவையாக இருக்கும்.

அதுபோல் பச்சரிசி சாதத்தில் செய்தால் நன்றாக இருக்கும்.

லன்ச்சுக்கு சாதம் கிளறுவதாக இருந்தால் சாதத்தை வடித்து ஆற விட்டு சூடான குழம்பில் போட்டுக் கிளறவேண்டும்.

வெளியூர் பயணம் அல்லது அடுத்த நாளுக்கு என்றால் சாதம்,குழம்பு இரண்டும் நன்றாக ஆறியபிறகு கிண்டி வைத்தால் சாதம் அருமையாக இருக்கும்.

அதுவும் வாழை இலையில் வைத்துக் கட்டி வைக்க வேண்டும்.அதன் சுவையே தனிதான்.

கத்தரிக்காய் சாதம்:

தேவையானப் பொருள்கள்:

அரிசி_2 கப்
கத்தரிக்காய்_5 சிறியது
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்

செய்முறை:

முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கிய பின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி உப்பு,தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி,கத்தரிக்காய் வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.காய் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறி,கொத்துமல்லி தூவி சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கவும்.

இதற்கு அப்பளம்,வடாம்,உருளைக் கிழங்கு,முட்டை,சிக்கன் இவை எல்லாமே நன்றாக இருக்கும்.

புளிச்சக் கீரைத் துவையல் (அ) மசியல் & சாதம்

தேவையானவை:

புளிச்சக் கீரை_1 சிறிய கட்டு
பூண்டு_10‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ லிருந்து 15 பற்கள்

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_4‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
மிளகு_2
சீரகம்_1 டீஸ்பூன்
வெந்தயம்_1 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
பெருங்காயம்

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டியதைத் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.தீ மிதமாக இருக்கட்டும்.இல்லையென்றால் தீய்ந்து விடும்.மிளகாய் கருகாமல்,நிறம் மாறாமல் இருக்கட்டும்.இவை ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சன்னமாகப் பொடித்துக்கொள்ளவும்.

அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.சூடேறியதும் தாளிக்ககொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.அது நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.கடைசியாக பொடித்தப் பொடியைச் சேர்த்து ,தேவையான உப்பும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இதையே புளிச்ச கீரை சாதமாக செய்வதென்றால் இரண்டு கப் அரிசியை வேக வைத்து வடித்து ஆற வைக்கவும்.சாதம் நன்றாக வெந்து அதே சமயம் உதிருதிராக இருக்கட்டும்.
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி சிறிது பெருங்காயத்தைத் தாளித்து இரண்டுப் பூண்டுப் பற்களை நசிக்கிப் போட்டு வதக்கி கீரை மசியலை அதில் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.அதே சூட்டிலேயே ஆறிய சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.இந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.
இரவில் மீதமான சாதத்தில் செய்து வைத்தால் காலையில் அருமையாக இருக்கும்.

கீரை மசியல் & கீரை சாதம் (Mustard Green)

தேவையானப் பொருள்கள்:

கீரை_1 கட்டு

சின்ன வெங்காயம்_3

தக்காளி_1/2

பச்சை மிளகாய்_1

உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு

உளுந்து

மிளகு_5

சீரகம்_ 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்_2

பூண்டு_5 பற்கள்

பெருங்காயம்_சிறிது

நல்லெண்ணெய்_ 2 டீஸ்பூன்

இதில் நான் பயன்படுத்தியக் கீரை mustard green  .   இந்த முறையில் எல்லாக் கீரைகளையும் செய்யலாம்.

செய்முறை:

கீரையைக் கழுவி நீரை வடிய வைத்து நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கீரை சேர்த்து வதக்கவும.மூட வேண்டாம். சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து மிக்ஸியில் உள்ள கீரையில் கொட்டி சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு கிண்ண‌த்தில் எடுத்து வைக்கவும்.தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.இது சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்.

கீரை சாதம் தயார் செய்வதாக இருந்தால் 2 கப் அரிசியை வேக வைத்து சாதத்தை வடித்து ஆற வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடுபடுத்தி பெருங்காயம் தாளித்து கிரை மசியலை அதில் கொட்டி அடுப்பை அணைத்து விடவும்.அதே சூட்டிலேயே சாதத்தைக் கொட்டிக் கிளறி உப்பு சரி பார்க்கவும்.இதற்கு வறுவல், பொரியல், வற்றல் எல்லாமே நன்றாக இருக்கும்.

கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 2 Comments »

காய்கறி சாதம் (Vegetable fried rice)

தேவையானவை:

பாசுமதி அரிசி_2 கப்
காய்கறி_2 கப் நறுக்கியது (விருப்பமான காய்கறிகள்)
(கேரட்,பீன்ஸ்,பச்சைப் பட்டானி,பச்சை குட மிளகாய்,சிவப்பு குட மிளகாய்)
சின்ன வெங்காயம்_5
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
பச்சை மிளகாய்_1
தக்காளி_கால் பாகம்(விருப்பமானால்)
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால்_1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து

தாளிக்க:

ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி_5
உலர் திராட்சை_10

செய்முறை:

முதலில் அரிசியை முக்கால் பதத்திற்கு சிறிது உப்பு போட்டு வேக வைத்து வடித்து ஆற வைக்கவும்.சாதம் உதிர் உதிராக இருக்கட்டும்.காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப் பட்டானியை (1/2 கைப்பிடி)முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.அதில் தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.மேலும் த‌க்காளியைச் சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வத்க்கி தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி மேலும் காய்கறிகள் வேக சிறிது தண்னீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக விடவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்த பிறகு சாதத்தைக் கொட்டிக் கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.சாதம் காய்கறி மசாலாவுடன் நன்றாகக் கலந்த பிறகு எலுமிச்சை சாறு கலந்து,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இந்த சாதத்திற்கு எல்லா வறுவலும் நன்றாகப் பொருந்தும்.வெங்காயப் பச்சடியும் சூப்பர் காம்பினேஷன்.

உருளைக் கிழங்கு சாதம்

தேவையானப் பொருள்கள்:

அரிசி_1 கப்
உருளைக் கிழங்கு_1 (சிறியதாக இருந்தால் 2)
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ ஒரு கொத்து

வறுத்து அரைக்க:

கசகசா_1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.உருளையை வேக வைத்து தோலுரித்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெறும்  வாணலியில்  கசகசா,பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை இவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும்.கடைசியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,வெங்காயம் இவற்றை வதக்கவும். இவை அனைத்தும் ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம்,கறிவேப்பிலைத் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக வதக்கவும்.தேங்காய்ப் பாலையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமானத் தீயில் வதக்கவும்.நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து ஒரு கிளறு கிளறி சாதத்தையும் சேர்த்துக் கிளறி,எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »