மாம்பருப்பு துவையல்

இது முற்றிய ஊறுகாய் மாங்காயின் கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை எடுத்து செய்தது.பொதுவாக துவையல் என்றால் புளிப்பும், காரமும் இருக்கும்.இதில் இவற்றுடன் துவர்ப்பும் சேர்ந்திருக்கும்.இதை வைத்து குழம்பும் செய்வார்கள்.அதற்கு இங்கே கிளிக்கவும்.

தேவையானவை:

மாங்கொட்டை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய்_5
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

வறுத்து சேர்க்க:

உளுந்து_ஒரு டீஸ்பூன்
தேங்காய் கீற்று_2

செய்முறை:

மாங்கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை சிறுசிறு துண்டுகளாக உடைத்து நீரில் ஊற வைக்கவும். குறைந்தது இரண்டுமூன்று மணி நேரம் ஊற வேண்டும்.அம்மி என்றால் பருப்பை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.

வெறும் வாணலில் உளுந்து,தேங்காய் இவற்றை அடுத்தடுத்து போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். விருப்பமில்லையானால்  தேங்காய் சேர்க்க வேண்டாம்.

பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

இப்போது மாங்கொட்டை துவையல் தயார்.இது இட்லி,தோசை,சாத வகைகளுக்கு நன்றாக இருக்கும்.

கிராமத்து உணவு, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 6 Comments »

புளிச்சக் கீரைத் துவையல் (அ) மசியல் & சாதம்

தேவையானவை:

புளிச்சக் கீரை_1 சிறிய கட்டு
பூண்டு_10‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ லிருந்து 15 பற்கள்

வறுத்துப் பொடிக்க:

கொத்துமல்லி விதை_1 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_4‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
மிளகு_2
சீரகம்_1 டீஸ்பூன்
வெந்தயம்_1 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உளுந்து
பெருங்காயம்

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டியதைத் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.தீ மிதமாக இருக்கட்டும்.இல்லையென்றால் தீய்ந்து விடும்.மிளகாய் கருகாமல்,நிறம் மாறாமல் இருக்கட்டும்.இவை ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சன்னமாகப் பொடித்துக்கொள்ளவும்.

அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.சூடேறியதும் தாளிக்ககொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.அது நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.கடைசியாக பொடித்தப் பொடியைச் சேர்த்து ,தேவையான உப்பும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இதையே புளிச்ச கீரை சாதமாக செய்வதென்றால் இரண்டு கப் அரிசியை வேக வைத்து வடித்து ஆற வைக்கவும்.சாதம் நன்றாக வெந்து அதே சமயம் உதிருதிராக இருக்கட்டும்.
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி சிறிது பெருங்காயத்தைத் தாளித்து இரண்டுப் பூண்டுப் பற்களை நசிக்கிப் போட்டு வதக்கி கீரை மசியலை அதில் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.அதே சூட்டிலேயே ஆறிய சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.இந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.
இரவில் மீதமான சாதத்தில் செய்து வைத்தால் காலையில் அருமையாக இருக்கும்.

இஞ்சி,கொத்துமல்லி துவையல்

தேவை:

இஞ்சி_1 இன்ச் துண்டு
பூண்டு_1/2 பூண்டு
கொத்துமல்லி விதை_1/4 கப்
புளி_ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
வடகம்_1 டீஸ்பூன்
மிளகு_5
சீரகம்_1/4 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_2
உப்பு_தேவையான அளவு
நல்லெண்ணெய்_2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கவும்.பூண்டையும் தோலெடுத்துவிட்டு சிறு துண்டுகளாக்கவும்.வெறும் வாணலியை அடுப்பில் வைத்து கொத்துமல்லி விதையை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் வடகம் பிறகு மிளகு,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து(கருகிப் போகாமல்)எடுத்துக்கொள்ளவும்.அடுத்து இஞ்சியை நன்றாக வதக்கவும்.வதங்கியதும் பூண்டை சேர்த்து வதக்கவும்.அடுத்து புளியை சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு உப்பு,தண்ணீர்  சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அரைத்த துவையலை அதில் போட்டு வதக்கவும். நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.இந்த துவையலை இட்லி,தோசை,எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.சுவையாக இருக்கும்.

இஞ்சி,பூண்டு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவை இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது.