உருளைக் கிழங்கு & காலிஃப்ளவர் பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு_1
காலிஃப்ளவர்_1(சிறியது)
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு 2 நிமிடங்களுக்கு உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.

பூண்டிதழ்களை நறுக்கிக்கொள்ளவும்.அல்லது ஒரு தட்டுதட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் பூண்டு சேர்த்து வதக்கி,அடுத்து உருளைத் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து  (அ) சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு (அ) சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்த்துக்  கிளறி மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.

உருளை வெந்ததும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவரைப் போட்டு வதக்கி சிறிது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு இவற்றைத் தூவினாற்போல் போட்டு மூடி வேகவிடவும்.

இது சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும் இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு 5 நிமி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.

இரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு _1
ப்ரோக்கலி_1
முழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
பூண்டிதழ்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு  அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்

கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்

உருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்

எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும்  இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும்  இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

உருளைக் கிழங்கு,வெந்தயக்கீரைப் பொரியல்

குழந்தைகள் உருளைக் கிழங்கு பொரியல் என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.அதுவே கீரை என்றால் சாப்பிடக் கொஞ்சம் (நிறையவே) அடம் பிடிக்கத்தான் செய்வார்கள்.அப்பொழுது இதுபோல் அவர்களுக்குப் பிடித்தமான காய்களில் கீரையைச் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம்.எந்தக் கீரையை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

தேவையானவை:

உருளைக் கிழங்கு_1 (பெரியது)
வெந்தயக் கீரை_ஒரு கைப்பிடி(உருவியது)
சின்ன வெங்காயம்_1
பூண்டு_3 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.உருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும்.இல்லை என்றால் உருளையின் நிறம் மாறிவிடும்.அடுத்து வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு உருளையைச் சேர்த்து வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டுக் கிளறித் தேவையானத் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து மிதமானத் தீயில் வேகவிடவும்.

கிழங்கு வெந்த பிறகு கீரையைச் சேர்த்துக் கிளறி விடவும்.மூடி போட வேண்டாம்.கீரை விரைவிலேயே வெந்துவிடும்.கீரை,கிழங்குடன் சேர்ந்து சுருள வதங்கியதும் இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

 

உருளைக் கிழங்கு சாதம்

தேவையானப் பொருள்கள்:

அரிசி_1 கப்
உருளைக் கிழங்கு_1 (சிறியதாக இருந்தால் 2)
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ ஒரு கொத்து

வறுத்து அரைக்க:

கசகசா_1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை_5 இலைகள்
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.உருளையை வேக வைத்து தோலுரித்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெறும்  வாணலியில்  கசகசா,பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை இவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளவும்.கடைசியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,வெங்காயம் இவற்றை வதக்கவும். இவை அனைத்தும் ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம்,கறிவேப்பிலைத் தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக வதக்கவும்.தேங்காய்ப் பாலையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமானத் தீயில் வதக்கவும்.நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து ஒரு கிளறு கிளறி சாதத்தையும் சேர்த்துக் கிளறி,எலுமிச்சை சாறு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »