காசு வத்தல்

IMG_0171

இப்போ வேணுங்கறவங்கல்லாம் ஆர்டர் கொடுக்கலாம். அளந்து அளந்து போட்டு பார்சல் அனுப்பிவைக்கிறேன்.

போன வருடம் எங்க பேட்டியோவுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டிட்டு வரிசையா மூன்று நான்கு குட்டிகுட்டி மரங்களாக நட்டுள்ளனர். இதனால் இந்த வருடம் வெயில் படு ஜோராக எங்க பேட்டியோவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதை விட மனசில்லாமல் இந்த கோடையில் காசுவத்தல் ஊத்தி எடுத்தாச்சு.

தேவையானவை:

பச்சரிசி _ 2 கப்
ஜவ்வரிசி_ 1/2 கப்
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய்_ 3
சீரகம்_ ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு
பெருங்காயம்_ சிறிது

செய்முறை:

பச்சரிசியை ஊற வைத்து அது நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாயை சேர்த்து தாராளமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதியளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டு இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி அடுப்பில் ஏற்றவும்.

எண்ணெய் விடுவதால் அரைத்த மாவை ஊற்றிக் கிண்டும்போது கட்டி தட்டாமல் இருக்கும். மேலும் பொங்கி வழிவதும் ஓரளவுக்குக் கட்டுப்படும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம் இரண்டையும் சேர்த்துவிட்டு, அரைத்துவைத்துள்ள பச்சரிசி மாவையும் ஒரு நீளமான மரக்கரண்டி அல்லது whisk ஆல் கிண்டிக்கொண்டே ஊற்றவும்.

மாவு ஊற்றுவதிலிருந்து அடுப்பு வேலை முடியும்வரை கவனம் தேவை. கொதிக்கும் மாவு தெறித்து நம்மேல் விழ‌ வாய்ப்புண்டு.

மாவு முழுவதையும் ஊற்றிவிட்டு தேவையான உப்பு போட்டு, முக்கால் குக்கர் அளவுக்கும் அதிகமாக‌ தண்ணீர் ஊற்றவும்.

கிண்டுவதை நிறுத்தக்கூடாது. விடாமல் கிண்ட வேண்டும். இல்லையென்றால் கட்டி தட்டும். பிறகு மாவு சரியாக வேகாமல் உருண்டை உருண்டையாய் இருந்து கடுப்பேற்றும்.

மேலும் குக்கரை ஒரு அரை மணி நேரத்திற்கு அடுப்பிலேயே மீடியம் ஹீட்டில் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டிவிடவும்.

மாவு நன்றாக வெந்தபின் நல்ல வாசனை வரும். இப்போது குக்கரை அதன் மூடியால் மூடி வைத்து விடவும்.

காலையில் வெயில் வரும் சமயம் வத்தல் ஊற்ற உகந்த நேரம்.

ஒரு டேபிளில் ப்ளாஸ்டி கவரை அல்லது சுத்தமான ஒரு துணியை நனைத்து ஈரம் இல்லாமல் பிழிந்து விரித்துப்போட்டு, மாவை நன்றாக ஒரு த‌ரம் கலந்துவிட்டு, உப்பு சரிபார்த்து, தேவையானால் சிறிது சேர்த்துக்கொண்டு கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஊற்றவும்.

vathal

(இவ்ளோ கஷ்டபட்டு வத்தல் போட்டுட்டு ஃபோட்டோ எடுக்காம விட்டா  எப்படீ !!)

ஒரு நாள் முழுவதும் காய்ந்த பிறகு அப்படியே எடுத்து வைத்து அடுத்த நாள் காலை எல்லா வற்றலையும் திருப்பிவிட்டு மீண்டும் வெயிலில் காயவிடவும்.

vathal (முதல் நாள் இந்த அளவுக்குத்தான் காய்ந்தது.)

நன்றாகக் காய்ந்த பிறகு பெரிய கண்ணாடி பாட்டிலில் அல்லது பெரிய ஸிப்லாக்கில் எடுத்து வைத்து தேவையானபோது வாணலில் எண்ணெய் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.

IMG_0189

எல்லா சாதத்துக்கும் முக்கியமாக வத்தக்குழம்பு,காரக்குழம்பு, புளிக்குழம்பு இவற்றிற்கெல்லாம் சூப்பராக இருக்கும்.

(முறுக்கு வத்தல் போடல போலிருக்குன்னு நெனச்சிடக் கூடாதில்லையா !!)

வடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

சிவப்பரிசி வடாம் (Rose matta rice vadaam)

சாதாரணமாக புழுங்கல் அரிசியில் அல்லது பச்சரிசியில் வடாம் செய்யும்போது நல்ல வெண்மையாக  இருக்கும். சிவப்பரிசியில் செய்யும்போது நிறத்தில் மட்டுமே சிறிது மாற்றம்.ஆனால் சுவை அவற்றைவிட நன்றாகவே இருந்தது.

தேவையானப் பொருள்கள்:

சிவப்பு புழுங்கல் அரிசி_2 கப்
ஜவ்வரிசி_ ஒரு கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு

செய்முறை:

அரிசியைக் கழுவிக் களைந்து ஊற வைக்கவும்.சிவப்பரிசி ஊற நீண்ட நேரம் எடுக்கும்.சுமார் எட்டு மணி நேரமாவது ஊற வேண்டும்.

நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடுக்கவும். கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.

அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.

இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக,பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும்.

இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்),சீரகம், பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொண்டு,உப்பு+காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை அரிசி அரைக்கும்போதேகூட சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

இந்த மாவை அகலமான காசு வற்றல் போலவோ அல்லது முறுக்கு வற்றல் போலவோ பிழியலாம்.

இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே  (ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்) வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய வைக்கவும். வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.

அடுத்து முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்ளவும்.  இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடவும்.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும். வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.

நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில் (அ) கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.

இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

வடாம் (மற்றொரு வகை)

தேவையான பொருள்கள்

புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_சுமார் 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவிக் களைந்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும்.இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்),சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.

இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே(ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்)வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய விடவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.

நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

பொரிக்கும் விதம்:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு  பொரித்தெடுக்கவும். இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.

முறுக்கு வடாம்

 

தேவை:

புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_1/2 to  1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும்(4 அ  5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்), சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்க்கவும்.
முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்ளவும்.அடுத்து  இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடவும்.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.

நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம். வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

பொரிக்கும் விதம்:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.சிவக்க வைக்க வேண்டாம்.