காய்கறி கட்லட்

 

 

தேவை:

உருளைக் கிழங்கு_2
வாழைக்காய்_1/4 பாகம்
கேரட்_பாதி
பீன்ஸ்_5
காலிஃப்ளவர்_1 துண்டு
பச்சைப் பட்டாணி_1/4 கப்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_1 பற்கள்
சின்ன வெங்காயம்_1
பச்சை மிளகாய்_1
மஞ்சள் தூள்_1 பின்ச்
மிளகாய்த்தூள்_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
எலுமிச்சை_பாதி
ப்ரெட் க்ரம்ஸ்(  bread crumbs)_2 டேபிள்ஸ்பூன்
முட்டை_2 (அ) மைதா_2 டேபிள்ஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_5
எண்ணெய்_பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை நன்றாக வேக வைக்கவும்.வெந்ததும் உருளை,வாழைக்காய் இவற்றை கேரட் துருவியில் துருவி வைத்துக்கொள்ளவும்.ஏனையவற்றை நன்றாக மசித்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம்,முந்திரி தாளித்து முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அதனுடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.மிதமான தீயில் கருகாமல் வதக்கவும்.தண்ணீர் ஊற்றக் கூடாது.பிறகு மசித்து வைத்துள்ள காய்கறி,உப்பு சேர்த்து வதக்கவும்.அடுத்து  வாழை,உருளைத் துருவளை சேர்த்து தீயை அணைத்து விடவும்.கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து கொத்துமல்லி தூவி இறக்கவும்.கலவையில் நீர் இருக்கக் கூடாது.

கலவை ஆறியதும் அதிலிருந்து ஒரு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டவும்.அல்லது விருப்பமான வடிவத்தில் தட்டிக்கொள்ளலாம்.இதுபோல் எல்லாவற்றையும் செய்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும்.அல்லது மைதாவைப் பயன்படுத்துவதாக இருந்தால் மைதா மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.பக்கத்தில் ப்ரெட் தூளையும் வைத்துக்கொள்ளவும்.ஒரு கட்லட்டை எடுத்து முட்டையில் அல்லது மைதாவில் தோய்த்து உடனே ப்ரெட் தூளில் முழுவதும் புரட்டி வைக்கவும்.இதுபோலவே எல்லவற்றையும் செய்து வைத்துக்கொள்ளவும்.

பொரிப்பதற்கு முன்னால்:

ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான‌ எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகப் போட்டு ஒரு பக்கம் சிவந்ததும் மறு பக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும்.

இதனை (ketchup) உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »